விவசாயிகளுக்கு உதவும் 'அக்ரோமேன்'

0

விவசாயத்தை வணிகத்துறையாக உயர்த்தும் முயற்சி

பிஸினஸ் படிப்பை வெற்றிகரமாக முடித்தபின் பல்வேறு மின் வணிக முயற்சிகளை மேற்கொண்டார் விகாஸ் கோயல். 'கிர்னன் பசார்' (kirnanbazaar) என்ற பெயரில் மளிகைப் பொருட்களுக்கான இணையதளம், டீல்பெடீல்.காம் (dealpedeal.com) என்ற பெயரில் தள்ளுபடி விவரங்கள் குறித்த இணையதளம் என பல்வேறு வர்த்தக முயற்சிகளைச் செய்த போதும் அவற்றில் வெற்றி பெற முடியவில்லை.

சில வருடங்களுக்குப் பிறகு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது பருவ மழை, அரசு உதவிகள் போன்றவற்றை நம்பி தத்தளிக்கும் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை, அதிலுள்ள சங்கடங்களை உணர்ந்தார். அது குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்த விகாஸ் நாடெங்கும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் போதும் விவசாயத்திற்கு மட்டும் நவீன தொழில்நுட்பங்களின் உதவி சிறிதும் போய்ச்சேரவில்லை என்பதை உணர்ந்தார். எனவே 'அக்ரோமேன்' (Agroman) எனும் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான இணைய தளத்தை துவக்கினார்.

சென்ற ஆண்டு(2015) நவம்பரில் துவக்கப்பட்ட இந்த இணையதளம் பல்வேறு விவசாயம் சார்ந்த சேவைகளை அளித்து வருகிறது. ஜி, எஸ்ஸார், ஏர்டெல் போன்ற பல்வேறு நிறுவனங்களின் திட்டமிடல் துறையில் பணியாற்றி, 15 வருட நீண்ட அனுபவம் பெற்றவரான விகாஸ் தங்கள் நிறுவனம் பற்றிச் சொல்லும் போது “விவசாயிகள் டிராக்டர், விதைகள், உரம் போன்ற தங்கள் தொழிலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை தங்கள் தேவைக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து வாங்க உதவுகிறோம். மேலும் அரசு விவசாயிகளுக்காக அறிவிக்கும் திட்டங்கள், மானிய உதவிகள், விவசாயம் சார்ந்த சமீபத்திய செய்திகள் என பல்வேறு விவரங்களை அளிக்கிறோம்.” என்கிறார்.

தனது சேமிப்பிலிருந்து இந்நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் விகாஸ் இப்போதைக்கு விளம்பரங்களின் மூலம் இத்தளம் வருவாய் ஈட்டுவதாக குறிப்பிடுகிறார். விவசாயத்தை சார்ந்திருக்கும் இந்திய மக்களின் 70% பேரைக் குறிவைத்து இயங்கும் இந்நிறுவனம், நாளொன்றுக்கு 10000 பேர் தங்கள் தளத்தை பார்ப்பதாக தெரிவிக்கிறது. நடப்பு ஆண்டில் இந்தி மற்றும் பஞ்சாபி மொழியிலும் இத்தளம் இயங்கவிருக்கிறது.

இந்திய விவசாயம் என்பது இன்னமும் ஒரு அமைப்பாக ஒருங்கிணைக்கப் படவில்லை. நவீன தொழில்நுட்பம் குறித்த தெளிவின்மை, நாடு தழுவிய தரக்கட்டுப்பாடுகள் இல்லாத நிலை, பழைய முறைகளையே பின்பற்றும் போக்கு என இத்துறையில் நிறைய இடர்பாடுகள் இருந்தாலும் அவற்றை தாண்டி விவசாயிகளுக்கு இந்த இணையதளத்தை கொண்டு சேர்க்க முடியும் என விகாஸ் நம்புகிறார். இவரது களப்பணியாளர்கள் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று, இந்த இணைய தளங்களை விவசாயிகளுக்கு இயக்கிக் காண்பிக்கின்றனர்.

உடனடியாக இல்லையென்றாலும், சில காலத்திற்குப் பிறகேனும் இந்த சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நேரமும், பணமும் மிச்சமாகும் என்ற உண்மையை விவசாயிகள் கண்டிப்பாக உணர்ந்து கொள்வர் என்பது அவரது நம்பிக்கை. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கிராமப்புற மக்கள் பங்குபெற ஆரம்பித்துவிட்ட நிலையில் விகாசின் கனவு விரைவில் சாத்தியமாகும்.

விவசாயம் சார்ந்த பொருட்களான டிராக்டர், விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரம் போன்றவற்றிற்கான இணையதள சந்தையாக செயல்பட்டு வரும் இந்த அக்ரோமேன் தளம், தனது அடுத்தகட்ட முயற்சியாக மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி குறித்த நிபுணர்களின் அறிவுரைகளை விவசாயிகளுக்குப் பெற்றுத் தரும் திட்டமொன்றை தயாரித்து வருகிறது. விரைவில் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் இச்சேவையை பெற முடியும் என்கிறார் விகாஸ்.

இந்தியாவின் வளர்ச்சிக் குறியீடான ஜி.டி.பியில் 17 சதவீதம் பங்களிக்கும் விவசாயத்துறை இன்னமும் அரசின் மானியங்கள், இலவசங்கள் போன்றவற்றையே நம்பியிருக்கிறது. மாற்றாக தன்னிறைவு கொண்ட சமூகமாக விவசாயிகள் மாற தொழில்நுட்பம் இது போன்ற வளர்ச்சிகள் நிச்சயம் உதவ முடியும்.

ஈ.எம்.3 அக்ரி சர்வீசஸ்(EM3 Agri Services), அக்ரோ ஸ்டார்(Agro Star), கார்ப் இன்(Crop In) போன்ற பல்வேறு முயற்சிகள் விவசாயத்தை ஒரு சேவைத் துறையாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டன.

நாட்டின் 70 சதவீத மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறை இன்னமும் கூட பல்வேறு போட்டியாளர்கள் வந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் அளவு பரந்து விரிந்த ஒன்று என்று நம்பிக்கையூட்டுகிறார் விகாஸ். நாட்டிற்கு மிகவும் தேவையான இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் தானும் பங்களிக்க முடிவது மிகவும் நிறைவளிப்பதாக விகாஸ் தெரிவிக்கிறார்.

ஏற்கனவே பல்வேறு அரசு சாராத தன்னார்வ நிறுவனங்கள் விவசாயத் துறையில் பணியாற்றினாலும் கூட அவர்கள் சமூக ரீதியிலான பிரச்சனைகளில்தான் பங்களிக்கிறார்கள். எனவே விவசாயத்தையும் ஒரு வணிகத் துறையாக முன்னேற்றும் இது போன்ற முயற்சிகள் காலத்தின் தேவை.

இணையதள முகவரி: Agroman

ஆக்கம்: TAUSIF ALAM| மொழியாக்கம்: எஸ்.பாலகிருஷ்ணன்