இந்திய பொருட்களைக் கொண்டு தயாராகும் விரைவு ’ரயில் 18’ குறித்த 9 தகவல்கள்!

0

வருகிற ஜூன் மாதம் இந்திய ரயில்வே நகரங்களுக்கிடையே பயணிப்பதற்காக என்ஜின் இல்லாத விரைவு ரயில் அறிமுகப்படுத்த உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டைக் குறிக்கும் வகையில் ’ரயில் 18’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியதாகும். இது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக அறிமுகமாக உள்ளது.

’ரயில் 18’ நவீன கட்டமைப்புகளுடன் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

'ரயில் 18' குறித்த ஒன்பது தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இந்த ரயில் முழுமையாக இந்தியப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பு செலவு இறக்குமதி செய்யப்படும் பெட்டிகளின் செலவில் பாதி அளவே ஆகும்.

2. இந்த ரயிலில் முதல் வகுப்பு இருக்கை வசதியும் (executive chair car) இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியும் (non-executive chair car) இருக்கும். முதல் வகுப்பில் 56 பயணிகளுக்காக இருக்கை வசதியும் இரண்டாம் வகுப்பில் 78 பயணிகளுக்கான இருக்கை வசதியும் இருக்கும்.

3. தானியங்கி படிகள் மற்றும் கதவுகள் போன்றவை பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும். ஒரு பெட்டியில் இருந்து அடுத்த பெட்டிக்கு எளிதாக செல்லும் வகையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும்.

4. ரயிலில் வைஃபை இணைப்பு இருக்கும். ஜிபிஎஸ் வசதியும் பொழுபோக்கு அம்சங்களும் இதில் இருக்கும்.

5. ரயில் பயணம் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்காக ரப்பர்-ஆன்-ரப்பர் தரை, ஏசி வசதி, உயர் செயல்திறன் கொண்ட எல்ஈடி விளக்குகள் போன்ற வசதிகள் இருக்கும்.

6. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் தற்போதைய ஜன்னல்கள் போலல்லாமல் இந்த ரயிலில் தொடர் ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

7. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்படும்.

8. ’ரயில் 18’ பெட்டிகளில் சக்கர நாற்காலிகளை வைக்க இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

9. இந்த ரயிலில் பயோ வேக்யூம் கழிவறைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

கட்டுரை : THINK CHANGE INDIA