பிசினஸ் கார்டுகளில் அவசியம் இடம்பெற வேண்டியவை! 

1

ஒரு நிறுவனர் தனது நிறுவனத்திற்காக உருவாக்கும் முதல் பிசினஸ் கார்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். புதுநிறுவன உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு ஒருவர் செய்யக்கூடிய அத்தியாவசியமான பணி அது. என்னுடைய முதல் பிசினஸ் கார்டு அனுபவம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்காக பல்வேறு டிசைன்கள் என் பார்வைக்கு வந்து நிராகரிக்கப்பட்டது. பிசினஸ் கார்டில் முக்கியமாக இடம் பெற வேண்டியவைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

போட்டோ உதவி : shutterstock
போட்டோ உதவி : shutterstock

உருவம்

ஒரு பிசினஸ் கார்டின் உருவம் முக்கியமான ஒன்றாகும். விதவிதமான வடிவங்களில் பிசினஸ் கார்டை உருவாக்குவதென்பது ஒருவரது கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் உதவலாம், ஆனால் அது நீண்டநாள் தங்காது. அதுமட்டுமல்லாமல் தரமற்ற ஒன்றுக்காக அதிக நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவிடுவது தேவையற்றது. தரமான ஒரு பிசினஸ்கார்டின் உருவளவு 3.5 பை 2 இன்ச் என்பதாக இருக்க வேண்டும். ஆனால் விதவிதமான அளவுகளில் உருவாக்கும் பிசினஸ் கார்டுகளை நான் தடுக்க விரும்பவில்லை.

ஒரு தரமான பிசினஸ் கார்டை அச்சிட நிறைய செலவாகாது. அதே போல அவற்றை கார்டு ஹோல்டர்களிலோ, பாக்கெட்டுகளிலோ வைப்பதற்கு சிரமமிருக்காது. ஆனால் வினோதமான அளவுள்ளவற்றை வைத்துக்கொள்வது சிரமம். அதேபோல உங்கள் பிசினஸ் கார்டை எந்த இடத்திலும் அச்சிடும் விதமான ஒரு அளவைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதே நல்லது. இந்த அளவுக்குள் கவர்கின்ற விதமாக டிசைன்களை புகுத்தலாம் தவறில்லை.

உணர்வு

ஒரு நல்ல பிசினஸ் கார்டு கைகுலுக்குவது போன்ற ஒரு மென்மையான உணர்வைக் கொடுப்பதே சிறப்பு. மெல்லிய பேப்பர்களைத் தவிருங்கள். ரொம்ப கடினமான பேப்பரையும் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள். பேப்பரின் தடிமனை ஜிஎஸ்எம் என்ற அளவில் குறிக்கிறார்கள். 300 ஜிஎம்எம் அளவுள்ள பேப்பரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். தடிமனான கார்டுகள் நிலையானது என்பதை குறிப்பிட விரும்பும் என சில வெல்த் மேனேஜர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது போன்றவை கையாள்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் கடினமானவை. பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினீர்களென்றால், வெள்ளை நிறத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். லோகோவில் நிறைய விவரங்கள் இல்லாத இடங்களில் இது எடுபடும். அதேபோல நிறைய வெள்ளை இடைவெளி இருக்கும் விதமாக இருப்பதும் சிறப்பு.

பல விதமான நிறங்களை உள்ளடக்கிய ஒன்று பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. தொழிற்சாலை போன்ற நிறுவனங்களுக்கு லேமினேடட் அல்லது தண்ணீர் உறியாத கார்டுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. இவையெல்லாம் எல்லா இடங்களிலும் பொதுவாக கிடைக்கும் என்பதால், எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கான பிசினஸ் கார்டை உடனடியாக அச்செடுத்துக்கொள்ள முடியும்.

ஓட்டம்

நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பிசினஸ் கார்டு பார்த்த உடனேயே கவர்வது போல இருக்கும். உங்களது வாடிக்கையாளர்களுக்கு எந்த வரிசையில் தகவல்கள் தர இருக்கிறீர்கள் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் பிராண்டை முன்னிலைப்படுத்த விரும்பினீர்களென்றால் அதை முதலில் போட்டுக்கொள்ளுங்கள். (ஃப்ரீகோ >> கோ-ஃபவுண்டர் >> அஜய்). கார்டின் இடது மேல்பக்கம் இதை புகுத்தலாம். கார்டில் பத்து சதவீதத்தை இதற்கு ஒதுக்குங்கள். இடது பக்கம் லோகோவை வையுங்கள். அதை சுற்றிலும் நிறைய வெள்ளை இடைவெளி இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களிடம் லோகோ இல்லையென்றால், மிகப்பெரிய எழுத்துருவை விட 2.5 மடங்கு பெரிய அளவில் உங்கள் பிராண்ட் பெயர் இருக்கும் விதத்தில் வடிவமையுங்கள். ஒருவர் இடது மேல் பகுதியில் இருந்து, வலது அடி பகுதி வரை வார்த்தைகளை படிக்கும் விதத்தில் உருவாக்குங்கள். உங்கள் பெயர் மற்றும் பதவி மேல் வலது பக்கத்தில் வையுங்கள். அல்லது பெரிய எழுத்துருவில் காட்டுங்கள்.

செயல்பாடு

ஒரு பிசினஸ்கார்டின் செயல்பாடு மிக முக்கியமான ஒன்றாகும். நிறுவனத்தின் பெயர், உங்கள் பெயர், பதவி, ஈமெயில், டெலிபோன் போன்ற எல்லா விவரங்களும் இருக்க வேண்டும். என் நிறுவனத்தில் முக்கியமான வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மட்டும் என் மொபைல் எண்ணைத்தருவேன். அவர்கள் நேரடியாக என்னையே தொடர்புகொள்ள இது உதவும்.

நிறுவனத்தின் பெயரை நீளமாக எழுதாமல், சுருங்கச்சொல்லி விளங்க வைக்க முயற்சியுங்கள். உதாரணமாக உங்கள் நிறுவனம் ஃப்ரீகோ, இது ஒரு ரைட் ஷேரிங் நிறுவனம் என்றால், ஃப்ரீகோ ரைட்ஷேரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்று எழுதாமல் "ஃப்ரீ ரைட்ஸ் வித் ஃப்ரெண்ட்ஸ்” என்று கவரும் விதத்தில் எழுதுங்கள்.

எழுத்துருக்கள்

எழுத்துருக்களின் எண்ணிக்கையும், வார்த்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது படிப்பவர்களை உறுத்தாது. அதிகபட்சம் இரண்டு எழுத்துரு வடிவங்கள் இருக்கலாம். உதாரணமாக Arial மற்றும் Helvetica. சில சமயம் ஒரே எழுத்துரு வடிவம், இரண்டு அளவுகளில் இருப்பதே வித்தியாசமாகத் தெரியும். உதாரணமாக ஏரியல் வடிவத்தில் 9 அளவு அல்லது 11 அளவில் இருக்கும் வார்த்தைகள். எனவே இதுவும் அதிக பட்சம் இரண்டு அளவுகளில் இருக்கலாம்.

கூட்டெழுத்து முறையையோ, விநோதமான எழுத்துக்களையோ பயன்படுத்துவதைத் தவிருங்கள். குறைந்த தகவல்கள் மட்டும் இருக்கும் பிசினஸ்கார்டுகளில் இதைப் பயன்படுத்தலாம், தவறில்லை. impact, Tahoma, Helvetica, Garamond, Arial மற்றும் Myriad Pro போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் சிறப்பு.

பிசினஸ்கார்ட் டிசைனை உங்கள் மெயிலிலோ, கூகிள் ட்ரைவிலோ சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன்மூலம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ள முடியும். Pi போன்ற நிறுவனங்கள் உள்ளூரில் அச்சிட உதவும் செயலியை வழங்குகிறது. இது போன்று மேலும் பல டிப்ஸ்களைப் பெற பிரிண்ட்வித்பி.காம் தளத்தைப் பாருங்கள்

எழுதியவர்

இதை எழுதிய மணிஷ் ஷர்மா பிரிண்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இதற்கு முன்பு டிபிஎஸ் இணைய சேவை வழங்கும் நிறுவனத்திலும், நியூ எகானமி வென்சர் க்ரூப் மற்றும் பிபால் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இயக்குனராகவும் இருந்திருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பாம்பே பல்கலைக்கழகத்திலும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்த கட்டுரையை எழுதியவர் ப்ரின்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர். இதில் உள்ளது இவரது சொந்த கருத்து. இதற்கும் யுவர்ஸ்டோரி நிறுவனத்திற்கும் தொடர்பில்லை)

தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஏன் நல்ல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள்?

மன்னிக்கவும், நான் ஒரு தொழில்முனைவோன்...