சென்னை மழை பாதிப்பு: முகநூல் பக்கம் மூலம் உதவிகளை திரட்டிய குழு!

0

சமூக வலைதளங்கள் அரட்டை அடிப்பதற்கும், வீண் வம்புகளுக்கும் மட்டுமல்ல ஆபத்து காலங்களில் உதவிக்கரம் நீட்டவும் தான் என்பதை நிரூபித்துள்ளது சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தொடங்கிய "சென்னை ரெயின் ரிலீஃப் 2015" (Chennai Rain Relief 2015) முகநூல் பக்கம்.

வடகிழக்கு பருவமழையால் சென்னையின் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வெள்ளநீர் சூழ்ந்த வீட்டில் ஆதரவின்றி தவித்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு முகநூல் பக்கம் மூலம் பொருட்களைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வழங்கியுள்ளது இந்தக் குழு.

'சென்னை ரெயின் ரிலீஃப் 2015' குழுவைச் சேர்ந்த ஐயப்பன் சுப்ரமணியத்திடம் அவர்கள் மேற்கொண்ட மீட்புப் பணிகள் குறித்து பேட்டி கண்டது தமிழ் யுவர்ஸ்டோரி:

நவம்பர் 13, 2015 நான் வசிக்கும் சென்னை கொளத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளை கண்டறிய சென்றேன் அப்போது மக்கள் அங்கு இடுப்பளவு மழை நீரிலும், வெள்ளம் சூழ்ந்த வீடுகளிலும் மின்சாரம், குடிநீரின்றி முடங்கிக் கிடப்பதைக் கண்டேன். அவர்களிடம் என்ன உதவி வேண்டும் என்று கேட்ட போது, அவர்கள் உணவு, குடிநீர் தேவை என்று கூறினர். அவர்களுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற நோக்கில் அன்றைய தினம் எங்களிடம் இருந்த பொருட்களைக் கொண்டு சுமார் 600 பேருக்கு மதிய உணவு வழங்கினோம். ஆனால் நிலைமை சரியாகும் வரை இந்தப் பணியைத் தொடர மக்களின் ஆதரவும் தேவை என்று நினைத்தேன். இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் என் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அதன் விளைவாக நவம்பர் 14 தொடங்கப்பட்டது தான் 'சென்னை ரெயின் ரிலீஃப்(CRR) 2015' முகநூல் பக்கம்.

ரிங்கோ மேச்சேரி, ஆர்த்தி மதுசூதன், லதா சப்ரமணியன், சங்கர் மகாதேவன், வைஷ்ணவி ஜெயக்குமார் ஆகியோருடன் இணைந்து CRRல் பணியாற்றுவதாக கூறுகிறார் ஐயப்பன். (இவர்கள் அனைவரும் ஏற்கனவே தனித்தனியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்கள் தொண்டாற்றி வருகின்றனர்.)

CRR முகநூல் பக்கத்தைத் தொடங்கியதும் நூற்றுக்கணக்கான வலைபதிவர்களும் பொதுமக்களும் தாங்களாக முன் வந்து தன்னார்வலர்களாக எங்களோடு இணைந்து சேவை செய்ய விருப்பம் தெரிவித்தனர். அது எங்களுக்குத் தேவையாகவும் இருந்தது என்கிறார் ஐயப்பன். 

ஏனெனில் பொருட்களைத் திரட்டி ஒரு இடத்தில் வைத்து சமைத்தாலும் கடும் மழை, வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் அவற்றை கொண்டு மக்களிடம் சேர்ப்பது ஒரு சவாலான விஷயமாக இருந்தது. ஆனால் தன்னார்வலர்களாக பணியாற்றியவர்கள் சைக்கிளிலும், நடந்தும் சென்று 24/7 முகம் கோணாமல் மக்களுக்கு சேவை புரிந்தனர் என்று சொல்கிறார். உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் போது அவர்களிடத்தில் எந்த மோதல்களும் ஏற்படாமல் தவிர்ப்பது, நாங்கள் சந்தித்த மற்றொரு சவால் என்கிறார் ஐயப்பன்.

இந்தக் குழு சென்னைப் பெருநகரில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு மதிய மற்றும் இரவு உணவு வழங்கியுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேருக்கு உணவு, குடிநீர், போர்வை, பாய்கள், கொசுவலை உள்ளிட்டவற்றை அளித்துள்ளதாகக் கூறுகிறார் ஐயப்பன். நாள்தோறும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வரும் தன்னார்வலர்கள், மக்களின் தேவைகளை கேட்டு வருவர், அதை நாங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிடுவோம், அதற்கேற்ப பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் தேடி வந்து அரிசி, பருப்பு, காய்கறிகள், ப்ரெட், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கிச் சென்றதாக சொல்கிறார் அவர். 

மக்கள் மனதில் இன்னும் மனிதாபிமானம் மிச்சம் இருக்கிறது என்பதை இந்த மழை உணர்த்தியுள்ளதாக கூறுகிறார் ஐயப்பன். ஏழையாக இருந்த போதும் தன்னால் முடிந்த ஒரு சிறு ரொட்டி பாக்கெட்டை வாங்கிக் கொடுத்துச் சென்ற ஒருவரின் கொடைக்குணம் ஐயப்பனை மிகவும் நெகிழ வைத்துள்ளது.

மழை நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவர்களின் நிவாரண உதவிகள் தொடர்வதாகக் கூறுகிறார் அவர். முற்றிலும் வீடுகளை இழந்த சமுதாயத்தில் பின்தங்கிய இருளர் மற்றும் நரிக்குறவ மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் அளித்து வருகிறார் ஐயப்பன் சுப்ரமணியன்.

இது தவிர மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப்புத்தகம், புத்தகப்பை போன்றவற்றையும் வழங்கி வருவதாக கூறுகிறார் அவர். சென்னையில் மாநகராட்சி இந்த நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருவதால், கடலூர் மாவட்ட மாணவர்கள் 500 பேருக்கு இந்த உதவிகளை தாங்கள் வழங்கியுள்ளதாக சொல்கிறார் ஐயப்பன்.

மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இவை சாத்தியமாகி இருக்காது என்று நெகிழ்கிறார் அவர். அரசின் நிவாரண திட்டங்களை முறியடிப்பதல்ல எங்கள் நோக்கம் என்று கூறும் ஐயப்பன், அவர்களோடு இணைந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எங்கள் நோக்கம் என்பதால் அதை எதிர்நோக்கி செயல்பட்டு வருகிறோம் என்கிறார் அவர்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, இல்லாதோருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள் தமிழர்கள் என்ற வாசகங்கள் பொய்யாகவில்லை என்பதை அண்மையில் பெய்த மழையும், சமூக வலைதளமான முகநூலும் நமக்கு புரிய வைத்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் :

Chennai RainRelief2015 என்ற முகநூல் பக்கம் மூலமாக உங்கள் உதவிகள் மக்களை நேரடியாக சென்றடையச் செய்யலாம்.