தொழில்நுட்ப தொழில்முனைவரான பல் மருத்துவர் 'ராஜா சின்னதம்பி'

1

பெற்றோர்கள் மருத்துவத் துறையில் இருப்பின் பிள்ளையும் அதேத் துறையில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! பெற்றோரின் விருப்பத்திருக்கிணங்க மருத்துவப் படிப்பை முடித்தாலும், வர்த்தகத்தில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக இன்று தொழில்நுட்ப தொழில்முனைவராக ஆகியுள்ளார் Dr.ந.ராஜா சின்னதம்பி. இவர் தோற்றுவித்த "நோடீஃபை" (Notifie) என்ற நிறுவனம் சமீபத்தில் நடந்த 'பேபால் ஸ்டார்ட்டான்க்' விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் யுவர்ஸ்டோரி இவரிடம் ப்ரேத்யேக உரையாடல் நிகழ்த்தியது.

தொடக்கம்

2007 ஆம் ஆண்டு பல் மருத்துவப் படிப்பை முடித்த ராஜா, மேற்படிப்பு தொடங்கும் முன் தனது வர்த்தக ஆர்வத்தை செயல்படுத்திப் பார்க்க எண்ணினார்.

"மெடிக்கல் துறையில் தொழிலை ஆரம்பிப்பது இலகுவாக இருந்தது, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டேன். எனக்கிருந்த மருத்துவ தொடர்புகள் வர்த்தகத்திற்கு உதவின" என்று தனது தொழில்முனை பயணம் தொடங்கிய கதையை பகிர்கிறார் ராஜா.

வர்த்தக ரீதியாக பல நாடுகள் செல்லும் வாய்ப்பு கிட்டியதாக கூறும் ராஜா, தைவான் சென்ற பொழுது அங்கு கண்ட தொழில்நுட்பம் தன்னை அடுத்த தொழிலுக்கு வித்திட்டதாக கூறுகிறார். "அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்கள் GPS நேவிகேஷன் முறையை பயன்படுத்தியதை பார்த்தேன். இந்த தொழில்நுட்பம் அந்த நேரத்தில் நம் நாட்டில் அரிதாகவே இருந்தது. இடங்களை கண்டறியக்கூடிய சாதனத்தை அறிமுகப்படுத்த எண்ணினேன்".

கூகுள் மேப் தரும் இடங்களின் விவரங்கள் துல்லியமாக இருப்பதில்லை. "ஒரு இடத்தை குறியிட்டு அங்கு சென்றடயக்கூடிய பயணத் திசைகளை உருவாக்கும் எண்ணம் தோன்றியது."

எண்ணத்தை தனது சகோதரர் அருணிடம் பகிர்ந்து கொண்டதாக கூறுகிறார் ராஜா. அருண் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியிலிருந்தார்.

"ரூட்ஸ்டார் என்ற செயலியை அருண் உருவாக்கினார். இதன் மூலம் 2011 ஆம் ஆண்டு எனது தொழில்நுட்ப தொழில்முனை பயணம் தொடங்கியது." என்கிறார் ராஜா.


இதன் பயன்பாடு வங்கிகளுக்கு அதிக அளவு தேவைபடும், வங்கிகளின் ஏடிஎம் இடங்கள் மற்றும் கிளை அலுவலங்களை தெரிந்து கொள்ள இந்த செயலி ஏதுவாக அமையும்.


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எங்களின் செயலியை அறிமுகப்படுத்தினர். பின்னர் பிற வங்கிகளுக்கும் எங்களின் சேவையை கொண்டு சென்றோம் என்று கூறும் ராஜா, சிட்டி யூனியன் வங்கியின் தேவை சற்று மாறுபட்டு இருந்தது. இதுவே நோடீஃபை என்ற சேவையை தொடங்கக் காரணமாக அமைந்தது என்கிறார்.

"வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில் பெரும் பணம் செலவழிக்கிறது, இருப்பினும் குறுஞ்செய்திகள் முழுவதும் சென்றைடவதில்லை. வங்கிகள் மட்டுமின்றி பிற வர்த்தகங்களுக்கும் இது பொருந்தும். சிட்டி யூனியன் வங்கிக்காக தீர்வு காண முற்பட்டோம். மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் 'நோடீஃபை' சேவையை அறிமுகம் செய்தோம். இது வரை அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த அருண், என்னுடன் இணைந்து செயல்பட இந்தியா திரும்பினார்."

குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் ஸ்மார்ட் கைபேசி ஆகியவைகளை  இணைக்கும் ஒரே தளமாக நோடீஃபை சேவையை உருவாக்கினோம் என்கிறார் ராஜா.

இது வரை பனிரெண்டு பல்வேறு வர்த்தக அறிவிப்புகளை ஒருங்கிணைக்கும் தளமாக விளங்கும் நோடீஃபை எல்லா செயலியையும் இணைத்து ஒரே செயலியில் அனைத்து செய்திகளையும் பெறக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தருகிறது.


பள்ளிகளிலும் பயன்பாடு

வங்கிகளை போலவே பள்ளிகளும் இந்த செயலியால் பயன் பெற முடியும் என்கிறார் ராஜா. பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு எங்கள் செயலி பாலமாக அமையும். தினசரி வீட்டுப் பாடம் முதல் அறிவிக்கப்படாத விடுமுறை பற்றியும் இதில் பகிர்ந்து கொள்ள முடியும்.

பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகள் மழலை பள்ளியில் எவ்வாறு இருக்கின்றனர், என்ன கற்றுத்தரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, வகுப்பறையின் படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் சேர்த்து அறிமுகப்படுத்தினோம். இது பெரும் வரவேற்பு பெற்றது.


கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த எண்ணியுள்ள இந்த நிறுவனம் சென்னை தவிர கும்பகோணத்திலும் தங்களின் சேவையை விரிவுபடுத்தியுள்ளனர்.

"சென்னையை விட இங்கு எங்கள் செயலியை அறிமுகப்படுத்த அதிக நேரம் தேவைப்படவில்லை. பள்ளிக் கட்டணத்தை வசூலிக்கும் முறையை இலகுவாக்க எங்களை இந்த பள்ளி கேட்டுகொண்டதன் பேரில் அதற்காக கட்டண நுழைவாயில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என்கிறார்.

விரிவாக்க திட்டமாக மேலும் பல வர்த்தகங்களையும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவர்கள் சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறும் ராஜா, பேபாலின் உதவியோடு விரைவில் இது சாத்தியப்படும் என்று நம்பிக்கையுடன் விடைபெறுகிறார்.

வலைத்தளம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரை:

‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி!

'குட்பாக்ஸ்' - இது வர்த்தகத்துக்கான வாட்ஸப்!