'மன்மர்ஸியான்' திரைப்படம் கோலிவுட்டுக்கு சொல்லும் பாடம்!

0

பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் உருவான ‘மன்மர்ஸியான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அனுராக் காஷ்யப்பிற்கும், படத்தில் நடித்திருக்கும் தாப்ஸி பன்னு, விக்கி கவுஷல் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் ‘மன்மர்ஸியான்’ திரைப்படம் நிச்சயமாக நம்பிக்கையளிக்கக் கூடிய ப்ராஜெக்டாக இருக்கலாம். ஆனால், திரை ஆர்வலர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் பெரும் உற்சாகம் அளிக்கக் கூடியது கனிகா திலோனின் எழுத்து.

‘மன்மர்ஸியான்’ அனுராக்கின் ஸ்டைல் கதை கிடையாது. டார்க் ஹ்யூமர், காங்க்ஸ்டர் கதைகள், அழுக்கான யதார்த்தங்கள் என கலந்து கட்டி அடிக்கும் அனுராக் இயக்கியிருக்கும் ‘மன்மர்ஸியான்’ படத்தில் அவர் செய்திருக்கும் சமரசங்கள் அப்பட்டமாக தெரிகிறது. 

விளம்பரம் ஒன்றில் ஜோடியாக ஆடும் இரட்டையர்கள் படம் முழுதும் பல இடங்களில் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். மூட் கிராஃபை சிதைக்கும்படி நிறைய இடங்களில் பாடல்கள் ஓடத் தொடங்குகிறது. ஆனால், அதையெல்லாம் கடந்து சில காட்சிகளில் தெரிந்து விடும் அனுராக்கின் ஸ்டைல் சரியான நேரத்தில் ரட்சிக்கிறது.

Image Courtesy : Indiatoday.in
Image Courtesy : Indiatoday.in

இந்த படத்திற்கு கூகுளில் விமர்சனம் எழுதியிருக்கும் ஒருவர் , ‘ஒரு பெண் காதலனோடு நெருக்கமாக இருப்பதை அறிந்த பிறகும் ஒரு பஞ்சாபி குடும்பம் அவளுக்கு அவனையே திருமணம் செய்து வைக்க முன் வர மாட்டார்கள்’, ‘ஹீரோயினின் தங்கைக்கு அவளுடைய அக்காவும், அக்காவின் காதலனும் நெருக்கமாக இருப்பது தெரிந்திருக்கிறது’ ‘அனுராக் வழக்கம் போல நாசம் செய்திருக்கிறார்’ என்றெல்லாம் புலம்புவதை பார்க்க முடிகிறது. இந்த படத்தை எந்த இந்திய ஆண் எழுதியிருந்தாலும், இதையெல்லாம் போன்ற முன்முடிவுகளோடே தான் கதை அணுகப்பட்டிருக்கும்.

இந்த மாதிரியான ஸ்டீரியோடைப்புகளை தகர்த்திருக்கும் கனிகா திலோனின் எழுத்து ஆச்சரியமும், உற்சாகமும் உண்டாக்குகிறது. சாந்தமான, நளினமான பெண் அல்லது ஹைப்பரான, அறிவில்லாத பெண் என இரண்டு வகை முன்னணி பெண் பாத்திரங்களை கடந்து ஒரு திமிரான, பலவீனமான பெண் பாத்திரமாக ரூமி; அதீத பொறுப்போடு இருக்கும் ஆண் அல்லது பொறுப்பில்லாமல் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண் என இரண்டு வகை முன்னணி ஆண் கதாபாத்திரங்களை கடந்து ஒரு குழப்பமான இளைஞராக விக்கி; பாழாய் போன ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளக்கேற்ற வரும் புனிதராக இல்லாமல், குழப்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் மேலும் ஒரு யதார்த்தமான ஆணாக ராபி. இப்படி எழுதப்பட்டிருக்கும் பாத்திரங்களை எல்லாம் திரையில் பார்ப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

கூடவே, ‘பெண்ணின் தேர்வை’ மையப்படுத்தியிருக்கும் படத்தில் எந்த இடத்திலுமேயே ரூமியின் ‘நடத்தை’ குறித்தோ ‘புனிதம்’ குறித்தோ யாரும் கேள்வி எழுப்பவில்லை. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றிருக்கும் இடத்தில் ரூமி காதலனிடம் இருந்து மெசேஜ் வரும் என தன் ஃபோனையே பார்த்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு விளையாட்டாய் ராபி எஸ்.எம்.எஸ் அனுப்பும் காட்சி ஒன்று உண்டு. இப்படியெல்லாம் எவனாவது இருப்பானா என யோசிக்கும் மூளைகள் அறிந்து கொள்ள வேண்டியது இதைப் போன்ற பாத்திரப்படைப்பு தான் பெண் விடுதலையையும், சமஉரிமை கோரலையும் குறைந்தபட்சத்தில் பிரச்சாரம் செய்பவையாக இருக்கும்.

கனிகாவின் எழுத்தில் பெரும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பது ‘உங்களுக்கு தான் விக்கியப் பத்தி முன்னாடியே தெரியுமே... அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணீட்டீங்க’ என ரூமி கேட்பதற்கு பதிலாக ‘நீ கோவத்துல இருந்ததை நான் யூஸ் பண்ணிக்கலாம்னு நெனச்சேன்’ என ராபி சொல்வதில் இருந்து தெரிகிறது. 

அனுராக் காஷ்யப் எப்போதுமே பெண்ணின் பார்வையை (வ்யூ) மதிப்பவராகவே இருந்திருக்கிறார். இதற்காக அனுராக்கிற்கு கூடுதல் புள்ளிகள் எல்லாம் கிடையாது. அவர் செய்ய வேண்டியதை செய்ததில் நிம்மதி.

அனுராக் காஷ்யப் உடன் கனிகா திலோன் ; விக்கி கவுசல் மற்றும் தாப்ஸி பன்னுவுடன் கனிகா திலோன். Image courtesy : Instagram
அனுராக் காஷ்யப் உடன் கனிகா திலோன் ; விக்கி கவுசல் மற்றும் தாப்ஸி பன்னுவுடன் கனிகா திலோன். Image courtesy : Instagram

சமகால தமிழ் சினிமாக்களை எதுவும் பார்க்கமாலேயே கண்ணை மூடிக் கொண்டே, பாலியல் சுதந்திரத்தை குறித்த தெளிவு இருக்கும், தைரியமான, பலவீனமாக, யதார்த்தமான பெண் பாத்திரங்கள் எதுவும் எழுதப்படவில்லை என்று சொல்லிவிடலாம். தமிழ் திரையுலகம் ‘மன்மர்ஸியான்’ல் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் பெண்களுக்கான திரைப்படங்கள் பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட முடியும். பெண்களாய் இருக்கும் எழுத்தாளர்களும், இயக்குநர்களும், பிற தொழில்நுட்ப நிபுணர்களும் மட்டுமே இப்போதைக்கு கோலிவுட்டிற்கு அவசரமாக தேவை.