முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி'யில் கோவை, சென்னை: 10 கேள்வி - பதில்கள்

0

மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' (திறன்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் இடம்பெறும் முதல் 20 நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் சென்னையும் கோவையும் இடம்பிடித்துள்ளன. இந்த வேளையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடர்பாக எழும் 10 முக்கிய கேள்விகளும், அதற்கு அரசு, நிபுணர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் அளித்த விடைகளும் இதோ...

1. நோக்கம் என்ன?

2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 4-ல் 3 பங்கு மக்கள் நகரங்களில்தான் வசிப்பர் என்பது நிபுணர்களின் கணிப்பு. இந்தியாவை எடுத்துக்கொண்டால், நகர்ப்புற மக்கள் தொகை 40 கோடியில் இருந்து வரும் 2050-ல் 81.4 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அதிகரித்து வரும் மக்கள் தொகையைத் தாங்கும் அளவுக்கு நகரங்கள் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம். அத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நகரங்களை மேம்படுத்த வேண்டியதும் முக்கியம். இதுபோன்ற காரணத்தால், தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டதே இந்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்.

2. நகரங்களும் ஆண்டுகளும் எத்தனை?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 98 நகரங்கள் இறுதி செய்யப்பட்டன. இவை அனைத்தும் 5 ஆண்டு காலத்தில் ஸ்மார்ட் சிட்டிகளாக உருவாக்கப்படும். இவற்றில் முதல் கட்டமாக 20 நகரங்கள் அடங்கிய பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இந்தப் பட்டியலானது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆலோசனையுடன் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பாங்கான வாழ்க்கைச் சூழலை அளிக்க வேண்டும் என்பதிலும், வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நகரங்களுக்கு இணையாக நகரங்களை உருவாக்க வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

3. முதல் கட்ட 20 நகரங்கள் எவை?

புவனேஸ்வரம் (ஒடிஷா) | புனே (மகாராஷ்டிரா) | ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) | சூரத் (குஜராத்) | கொச்சி (கேரளா) | அகமதாபாத் (குஜராத்) | ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்) | விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) | சோலாபூர் (மகாராஷ்டிரா) | தேவாங்கிரி (கர்நாடகா) | இந்தூர் (மத்தியப் பிரதேசம்) | புது டெல்லி மாநகராட்சி | கோயம்புத்தூர் (தமிழ்நாடு) | காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்) | பெலகாவி (கர்நாடகா) | உதய்பூர் (ராஜஸ்தான்) | குவாஹாட்டி (அசாம்) | சென்னை (தமிழ்நாடு) | லூதியானா (பஞ்சாப்) | போபால் (மத்தியப் பிரதேசம்).

4. தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?

மத்திய அரசு இறுதி செய்துள்ளவற்றில், தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களும் அடங்கும். முதல் கட்ட பட்டியலில் சென்னையும் கோவையும் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு 40 நகரங்களும், அதற்கடுத்த ஆண்டு 38 நகரங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். அவற்றில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற நகரங்கள் சேர்க்கப்படும்.

5. செலவுகள் எவ்வளவு?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.6,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இப்போது முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்களில் 3.54 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரங்களுக்கு 5 ஆண்டு காலத்தில் ரூ.50,802 கோடி வழங்கப்பட்டு, இளம் இந்தியாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான கருவிகளாக ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று நம்பலாம்.

6. அடிப்படை வசதிகள்தான் என்னென்ன?

ஸ்மார்ட் நகரங்களில் அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, வைஃபை உட்பட தரமான தொலைத்தொடர்பு, பொதுப்போக்குவரத்து, தானியங்கி கழிவு சேகரிப்பு, தடையில்லா மின்சாரம், சுகாதார வசகதிகள், திடக்கழிவு மேலாண்மை, தொலைத்தொடர்பு, மின் ஆளுமை என எல்லா விதமான கட்டமைப்புகளும் இருக்கும். குழாயைத் திறந்ததும் தண்ணீர், கழிவு நீர் சுத்திகரிப்பு, சிக்கன நீர் மேலாண்மை, குறைந்த எரிபொருள் பயன்பாடு, தரமான சாலை வசதிகள், மாசு இல்லாத நகரியங்கள், குப்பைகள் இல்லாத வீதிகள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

7. வாழ்க்கைத் தரம் உயர்த்தும் வசதிகள் எவை?

தூய்மையானதும் நிலையானதும் சுற்றுச்சூழலை உருவாக்குவது ஒரு பக்கம் என்றாலும், நவீன வசதிகள் மேம்படுத்தப்படுத்துவதுதான் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முக்கிய நோக்கம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம், மின் ஆளுமைத் திறன், குடிமக்களின் பங்களிப்பு, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற வசதிகள் மேம்படுத்தப்படும். அதேநேரத்தில், ஸ்மார்ட் சிட்டி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கக் குழுக்களையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு நகரங்களிலும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் குழுக்கள் மூலமே என்னென்ன வசதிகள் வரும் என்பது பின்னர் முழுமையாகத் தெரிய வரும்.

8. எதிர்பார்க்கும் அடிப்படை வசதிகள் எவை?

ஒவ்வொருவருக்கும் போதுமான வாழிடம், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, அனைத்து தெருக்களிலும் நடைபாதை, பெரிய பாதைகளில் பேருந்துகளுக்கான பாதை, பொது இடங்களில் சுகாதாரத்துடனான பொதுக் கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு உரிய கட்டமைப்பு வசதிகள் முதலானவை ஸ்மார்ட் சிட்டிகளில் மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படை வசதிகள் என்பது நிபுணர்கள் பலரது கருத்து.

9. எதிர்பார்க்கும் நவீன வசதிகள்தான் என்ன?

சிறப்பான நெரிசல் இல்லாத போக்குவரத்து மேலாண்மை, பொதுமக்கள் பாதுகாப்பு வசதிகள், திறன்மிகு கல்வி மையங்கள், பொது இடங்களில் மின் விளக்கு வசதி, குற்றத் தடுப்பு, பொது நிர்வாகம், வேலை வாய்ப்பு உருவாக்கம், உள்ளூர் சுற்றுலா, தொழில்நுட்பப் பெருக்கம், தொலைத்தொடர்பு அகன்ற வரிசை இணைப்பு, மேம்பட்ட இணைய வசதி, பொருட்களைச் சந்தைப்படுத்தும் மையங்கள், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள், ஒயர்லெஸ் கருவிகள், தகவல் மையங்கள் முதலானவை வெளிநாடுகளில் உள்ள ஸ்மார்ட் சிட்டிகளின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். இவையெல்லாம் இந்திய ஸ்மார்ட் நகரங்களிலும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

10. அரசுக்கு உள்ள சவால்கள் என்ன?

தொற்று நோய் பரவலை தடுத்தல், பெருகும் குற்றங்களைத் தடுத்தல், சுற்றுச் சூழல் பாதிப்புகளைத் தவிர்த்தல் முதலானவற்றைக் கண்காணிப்பதே பெரும் அரசுக்கு பெரும் சவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும் அதேநேரத்தில், மறுபக்கம் குறைந்த செலவில் மக்களுக்கு சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும். குறைவான வளங்களுடன் தொழில்நுட்பத் திறன் மூலம் இவற்றை அளித்த அரசு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

> ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் மத்திய அரசின் அதிகாரபூர்வ வலைதளம் http://www.smartcitieschallenge.in

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்