அரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்!

1

தற்போதைய அரசின் மீது நம்மில் பலருக்கு அதிக அதிருப்தியும், கோவமும் உண்டு. கோவத்தின் வெளிபாட்டை ஒரு சிலர் போராட்ட வடிவில் வெளிக்காட்ட, மற்றவர்கள் அரசின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டனர். அப்படி அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தாங்களே அரசின் வேலையை கையில் எடுத்துக்கொண்டனர் ஜெயங்கொண்டபட்டின கிராம இளைஞர்கள்.

பட உதவி: விகடன்
பட உதவி: விகடன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது ஜெயங்கொண்டபட்டினம் கிராமம்; பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆற்றுக்கு இடையில் தீவு போன்ற சில கிராமங்கள் உள்ளது; இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் அக்கரையில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமப் பள்ளியில் தான் படிக்கிறார்கள்.

அரசு பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும் அல்லது  5 கிமீ தூரம் ஊரைச் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஊரைச் சுற்றி செல்வது சிரமம் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் ஆற்றில் இறங்கி பள்ளிக்கு செல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

இதற்கான ஒரே தீர்வு இரண்டு கிராமங்களை இணைத்து நடைப்பாலம் அமைப்பது தான். 10 ஆண்டுகளுக்கு முன் மக்கள் கோரிக்கையை ஏற்று அரசு கட்டிய நடைப்பாலம் கட்டப்பட்ட மூன்று ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்தது. அதன் பின் 7 ஆண்டுகளாக பாலத்தை மீண்டும் அமைக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

கிராம மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு மனு அளித்து சொர்ந்துவிட்டனர்.

இதனால், இனியும் அரசை நம்பி பயனில்லை என முடிவு செய்த ஜெயங்கொண்டபட்டினம் கிராம இளைஞர்கள் தாங்களே 20 ஆயிரம் ரூபாய் வசூலித்து பாலத்தை அமைக்க முன் வந்தனர். 

பாலம் கட்டும் பணியை துவங்கி ஒரே நாளில் அதிரடியாக பாலத்தை கட்டி முடித்துவிட்டனர். ஏற்கனவே பாலம் இருந்த இடத்திலே சிமெண்டால் ஆன தூண்களை எழுப்பி அதன் மேல் மூங்கில் கட்டைகளை கொண்டு நடைப்பாலம் அமைத்தனர். மாலைக்குள் வேலையை முடித்து, கிராம மக்களை அதிர்ச்சிபடுத்தியுள்ளனர் இந்த இளைஞர்கள்.

இனி வெள்ளப் பெருக்குக்கும், முதலைகளுக்கும் பயமில்லாமல் ஆற்றை சுலபமாக கடக்கலாம். இது தற்போதைய தீர்வு தான். இனியாவது அரசின் பார்வை இக்கிராமம் மீது பட வேண்டும்; இவர்களுக்கு நிரந்தர தீர்வை அமைத்துத் தர வேண்டும்.

இளைஞர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று எடுத்தக்காரியத்தை முடித்துக்காட்டிய இளைஞர்களுக்கு பாராட்டுகள்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin