பேசும் ஏடிஎம் எங்கே இருக்கிறது என பார்வையற்றோர் தெரிந்து கொள்ள உதவும் ‘Talking ATM India' ஆப்!

0

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் பலரும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்’களை நாடும் சூழ்நிலை கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுதும் நிலவி வருகிறது. ஏடிஎம்’களில் உள்ள நீண்ட வரிசை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சாதாரண மக்களுக்கே இந்த நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பணத்தை எடுக்க சிரமமாக இருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோரின் நிலை இன்னமும் மோசம் என்றே சொல்லவேண்டும். இதனை மனதில் கொண்டு பார்வையற்றோர் எளிதில் தங்கள் அருகாமையில் இருக்கக்கூடிய பேசும் ஏடிஎம்’களை பட்டியலிடும் ஆப் ஒன்றை தயாரித்துள்ளனர். சென்னையில் ஐஐடியில் நடைப்பெற்ற சிறப்பு ஹாக்கத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர் குழு இந்த 'Talking ATM India' ஆப்பை வெளியிட்டு அதன் பயன்பாடை விளக்கினர். 

இந்த செயலியை தயாரித்துள்ள சாய்தர்ஷன் பகத், ஒரு பார்வையற்ற சமூக தொழில்முனைவர். இவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை பேட்டியில்,

“ஒரு ஏடிஎம்’மை கண்டுபிடிப்பது என்னை போன்ற பார்வையற்றோருக்கு மிகக்கடினமான விஷயமாகும். இதற்காக கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு பல்வேறு வங்கி அதிகாரிகளிடம் பேசிய பின்னரே பேசும் ஏடிஎம்’கள் எங்கே இருக்கிறது என்று நாங்கள் தெரிந்து கொள்ள முடியும். இதனால் ஏடிஎம்’இல் பணம் எடுப்பது எங்களுக்கு இன்னமும் கஷ்டமான விஷயம்,” என்றார்.

இதற்காக www.talkingatmindia.org என்ற தளத்தின் மூலமும் மொபைல் ஆப் மூலமும் பார்வையற்றோர் எளிதில் பேசும் ஏடிஎம்’களை கண்டறிய வழி செய்துள்ளதாக சாய்தர்ஷன் தெரிவித்தார். தாங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் பேசும் ஏடிஎம் எங்கு உள்ளது என்று இந்த ஆப் லோகேட்டர் குரல் வடிவில் பார்வையற்றோருக்கு உதவும். ஐஐடி மெட்ராசில் ‘சாஸ்திரா’ விழாவில் இந்த செயலியை பற்றி விளக்கினார் சாய்தர்ஷன். 

”நாடு முழுதும் உள்ள 10 வெவ்வேறு வங்கிகளின் 11,132 பேசும் ஏடிஎம்’கள் பற்றிய விவரங்கள், அவை எங்கு இருக்கின்றன என்று இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும். 2014 இல் வெறும் 4000 பேசும் ஏடிஎம்’கள் மட்டுமே இருந்தது, ஆனால் எங்களின் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக தற்போது 11,132 பேசும் ஏடிஎம்’கள் இந்தியாவில் உள்ளது என்றார். 

இந்த பேசும் ஏடிஎம்’கள் ஹெட்போனுடன் இணைக்கப்பட்டு இருப்பதால் பார்வையற்றோர் இதனுடன் தொடர்பு கொண்டு, குரலின் வழிகாட்டுதல் மூலம் பணத்தை எடுக்கமுடியும். பார்வையற்றோருக்கு பயன்படும் இந்த பேசும் ஏடிஎம்’கள் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும் என்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சாய்தர்ஷன் தெரிவித்தார். 

செயலி பதிவிறக்கம் செய்ய: Talking ATM India