‘ஈ-பே’யின் போட்டியில் வென்ற , கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவப்பட்ட கதை!

1

இந்திய கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு தரமான உள்ளாடைகளை, குறைந்த விலையில் உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு எளிய யோசனையோடு, கிரிஜா சி.பவடே, கங்காவதி எக்ஸ்போர்ட்ஸைத் (gangavathi exports) தொடங்கினார்.

தாவனகிரேயில், ஒரு மத்தியத் தர குடும்ப பின்புலத்தில் வளர்ந்த கிரிஜா, டாக்டராக வேண்டும் என்ற கனவு, இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டதால் தகர்ந்தது. பின், அவருடைய வாழ்க்கை கணவரையும் குடும்பத்தையும் சுற்றி சுழல ஆரம்பித்தது. அந்த வாழ்க்கையை பற்றி பேசும் போது, “வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே கல்லூரிக்கு செல்ல முயற்சித்தேன். ஆனால், அது கஷ்டமாக இருந்தது. அதனால், என் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்” என்கிறார்.

தான் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர் இல்லை என்ற போதிலுமே, அவருடைய குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து, அவர்களின் பள்ளிப் வாழ்க்கையின் ஒவ்வொருக் கட்டத்திலும் உடன் இருந்தார். “நீங்கள் ஒன்றை நினைத்தால், அதை செய்து முடிக்க முடியும் என்று எப்போதுமே நம்புகிறேன்”, என்பவர், வீட்டுப்பாடம் என குழந்தைகள் வந்த போது, அவர் முதலில் கற்றுக் கொண்டு, பின்னர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார்.

கிரிஜாவின் கதை, நாம் பலமுறைக் கேட்டுப் பழகிய கதை. அமெரிக்காவை சேர்ந்த அவருடைய கணவரின் குடும்பத்திற்கும் தாவனகிரேயில் ஒரு புடவை வியாபாரம் இருக்கிறது. “நான் குடும்பத்தை பார்த்துக் கொண்டேன், என் கணவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டார்”, எனும் கிரிஜாவிற்கு, தொழில் முனைவில் ஈடுபடும் யோசனை பெங்களூருக்கு ஒரு பயணம் செல்லும் வரை தோன்றியிருக்கவில்லை.

பெங்களூரில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, விதவிதமான பல உள்ளாடை வகைகளை காண நேர்ந்தது. “அப்போது, நான் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என் ஊரில் இருக்கும் பெண்களும் இதைப் போன்ற உள்ளாடைகளை வாங்க விரும்புவார்கள். ஆனால், அது போன்ற உள்ளாடைகள் எங்கள் ஊரில் கிடைக்காது, கிடைத்தாலும் வாங்கக் கூடிய வசதி யாருக்கும் இருந்திருக்கவில்லை”.

இந்தியாவின் பல நகரங்களைப் போலவே, தாவனகிரேயிலும், உள்ளாடைகளில் பல தேர்வுகள் இருந்திருக்கவில்லை. விற்பனைத் துறையும் ஆண்களாலே கையாளப்பட்டுக் கொண்டிருந்ததால், ஒரு பொதுவான கூச்சம் பெண்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. அதனால், தங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உள்ளாடைகளை தேர்வு செய்வது பற்றிய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

“இதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். புடவைக் கடையிலேயே உள்ளாடைகளை விற்கத் தொடங்கலாம் என நினைத்தேன். ஆனால், நான் விரும்பியதைப் போல அது மக்களை சென்றடையாது என்பதையும் அறிந்திருந்தேன்”. எனவே, சில ஆய்வுகளுக்கும், குடும்பத்துடன் பல கலந்துரையாடல்களுக்கு பிறகு, உள்ளாடைகளை, தன்னுடைய வலைதளம் மூலம் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்தார்.

அந்த முடிவைப் பற்றி பேசுகையில், “எல்லாருமே இன்று கம்ப்யூட்டரில் தான் இருக்கிறார்கள். எங்கள் ஊரில் கூட, கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பலருக்கு, நல்ல தரமான உள்ளாடைகளை பெற முடியாமல் இருக்கும். இந்தியாவின் குறு நகரங்கள் பலவற்றில் இதே நிலை தான். இவை இரண்டையும் இணைப்பதாய் முடிவு செய்தேன்”, என்கிறார்.

எம்.பி.ஏ படித்தவர்களைக் கொண்டோ, பெரிய பிராண்டின் பேரை உருவாக்குவதோ சிறந்தது இல்லை என்று அவருக்கு தெரிந்தது. அதனால், தாவனகிரேயிலேயே வியாபாரத்தைத் தொடங்கி, அங்கிருக்கும் மக்களுடனே வேலை செய்வதாய் முடிவு செய்தார். கிரிஜாவின் மகன்கள் இணையதளத்தையும், அவருடைய பணி தொடங்கத் தேவைப் பட்ட மென்பொருளையும் வடிவமைத்துக் கொடுத்தனர். அப்படிப் பிறந்தது தான் கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ்.

குறைந்த விலையில் தரமான உள்ளாடைகளை , கிராமத்துப் பெண்களுக்கு வழங்குவது தான் முக்கியக் குறிக்கோளாக இருக்கும் போது, அவர்களுக்கு சவாலாய் இருந்தது, வாடிக்கையாளருக்கு பொருளைக் கொண்டு சேர்க்கும் முறை. புடவை வியாபாரம் மூலமாக, பேக் செய்வதில் இருந்த அனுபவமும், பேக் செய்யத் தேவையான பொருட்களும் இங்கு உதவியிருக்கிறது.

முதலில், ஸ்பீட்போஸ்ட் மூலம் பொருட்களைக் கொண்டு சேர்த்தனர். ஆனால்,பொருட்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் உருவானது. இதற்கு தீர்வு காண, பல்வேறு கூரியர் நிறுவனங்களுடன் ‘டை- அப்’ வைத்துக் கொண்டார் கிரிஜா.

தொடக்கத்தில், நிறுவனத்தை வளர்த்தெடுக்க தடுமாறிக் கொண்டிருந்த போதில், ஈ-பேயில் பொருட்களை விற்றது, திடமான தளத்தை அமைத்துக் கொடுத்து,தொழிலை விரிவு செய்ய உதவியிருக்கிறது.

அடுத்த திட்டம், தாவனகிரேயில் இருக்கும் இளம்பெண்களை பணியில் அமர்த்துவது. “பெண்கள் உள்ளாடைகள் விற்கும் போது, அதை வாங்குவதில் மற்ற பெண்களுக்கு கூச்சம் இருக்காது, நான் படித்த பெண்களை வியாபரத்தில் ஈடுபடுத்த கிடைத்த வாய்ப்பாக அதைப் பார்த்தேன்”.

இன்று, கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ், இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க பல பகுதிகளில் தங்களது தொழிலை நிலை நாட்டியுள்ளனர். “பல தரப்பட்ட பொருளாதார பின்னணியில் இருந்து வரும் இளம் பெண்கள் அனைவருமே, குறைந்த விலையில் தரமான உள்ளாடைகளை பெற வேண்டும் என ஆசைப் படுகிறேன்”.

இந்நிறுவனத்தின் தகுதிக்கேற்ற வெளிச்சத்தைப் பெறும் வகையில், ‘ஈ-பே’யின், ‘ஷீ மீன்ஸ் பிசினஸ்’ போட்டியின் ஆறு வெற்றியாளர்களுள் ஒருவராய் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் கிரிஜா.

“என்னுடைய ஒரே கவனம், கிரமப்புறங்களில் இருப்பவர்களையும் சேர்த்து, இந்தியாவின் பெண்கள் அனைவரும், நல்ல தரமான உள்ளாடைகளை பெற வேண்டும்.” என்று நிறைவு செய்கிறார்.