அரசுப் பள்ளிகளை மேம்படுத்த 'அசோக் லேலண்ட' உறுதுணை: 20 ஆயிரம் குழந்தைகள் பலன்பெற்ற கல்வித் திட்டம்!

பின் தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் கற்கும் சூழலை இனிமையாக்கி, கல்வி மேம்பாட்டில் அசோக் லேலாண்ட் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

2

நம் குழந்தைகளின் கல்வித்தரத்தை தீர்மானிப்பது, பத்தாம் வகுப்பு - ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதம் அல்ல. தொடக்கக் கல்வியில் அடித்தளம் இடுவதுதான் நீடித்த பலனைத் தரும். இந்தத் தளத்தில் தன்னளவில் தீவிரமாக இயங்கி வருகிறது 'அசோக் லேலண்ட்' நிறுவனம்.

சமூகத்துக்கான பெருநிறுவனத்தின் பங்களிப்பான 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி' (சி.எஸ்.ஆர்) நிதியைக் கொண்டு, இந்நிறுவனம் தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

"நம் போன்ற நாடுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை பள்ளிக் கல்வி கிடைக்கும் பட்சத்தில், மக்களின் ஏழ்மை நிலையைப் போக்குவது நிச்சயம். இந்திய கிராமங்களில் 50%-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் 13 வயதுக்கு முன்பே இடைநிற்றலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில், ஏழ்மையின் பின்னணியில் வாடும் குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், வளமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் நோக்கத்தில் 2015-ல் தொடங்கப்பட்ட முன்முயற்சிதான் 'ரோடு டூ ஸ்கூல்' திட்டம்,"

என்கிறது அசோக் லேலாண்ட் நிறுவனம். இதுகுறித்து நிறுவன மனிதவள மேம்பாடு, சிஎஸ்ஆர் மற்றும் மக்கள் தொடர்புத் தலைவர் என்.வி.பாலச்சந்தர் கூறும்போது, 

"சமூகத்தில் மக்கள் நலன் சார்ந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு ஆழமான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காகவே தரமான கல்விக்கு வித்திடுவது என்று தீர்மானித்தோம்."

கிருஷ்ணகிரியில் அசோக் லேலாண்டின் ஓசூர் ஆலைகளுக்கு அருகிலுள்ள அஞ்செட்டி, சூளகிரி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து இந்தப் பயணம் தொடங்கியது," என்றார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பு அப்பகுதி பள்ளிக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அசோக் லேலாண்ட் ஆய்வுக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை சோதனைப் பயிற்சிகளில் 40% மற்றும் அதற்குக் குறைவான மதிப்பீடுகளைப் பெற்ற மாணவர்களுக்கு உரிய மாற்றுக் கல்விக்கு வழிவகுக்கப்பட்டது. இவர்களில் 1,500 பேர் 'லேட் ப்ளூமர்ஸ்' எனப்படும் மெல்லக் கற்கக் கூடிய மாணவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

"நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் லேட் ப்ளூமர்ஸ் மீது கவனம் செலுத்துவது என்று முடிவு செய்தோம். பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் உறுதுணையுடன் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். ஒவ்வொரு மாணவர் மீது தனி கவனம் செலுத்த தேவையான அனைத்தையும் செய்தோம். இதன்மூலம் அவர்களை வெகு இயல்பாக படிக்கக் கூடிய மாணவர்களாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி மட்டுமின்றி, சுகாதாரமான சூழலையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதன்படி, தூய்மையான கழிவறை, சுத்தமான குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் பங்கு வகிக்கிறோம்.

அதேபோல், பள்ளிக் கல்வியின் முக்கியப் பகுதியாக, நம் சமூகம் குறித்த புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு களப் பயணத்தையும் மேற்கொள்ளச் செய்கிறோம். காவல் நிலையங்கள், உழவர் சந்தைகள், தபால் நிலையங்கள் முதலிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று நேரடி அனுபவம் மூலம் விழிப்புணர்வுகளை அளிக்கிறோம். இதை, செயல்வழிக் கற்றலின் முக்கியப் பகுதியாகக் கருதுகிறோம்," என்றார் பாலச்சந்தர்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கொண்டுவந்த செயல்வழிக் கற்றல் முறைதான் தங்கள் முயற்சிக்கு மிகுந்த உதவியாக இருந்தது என்றார் அசோக் லேலாண்ட் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான வினோத் கே.தாசரி.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "செயல்வழிக் கற்றல் முறையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாகவும், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் கற்றலை இனிமையாக்கும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தோம். கலை, விளையாட்டுகளின் வழியாக கற்பித்தலுக்குத் தேவையான பொருட்கள், உபகரணங்களை அளித்தோம். அதன் மூலம் ஆசிரியர்களும் ஈடுபாட்டுடன் பாடங்களைக் கற்றுத் தந்தனர். இந்தத் திட்டத்தின் பலனை மூன்று, நான்கு மாதங்களிலேயே கண்டுணர்ந்தோம். குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்த்தோம். அவர்களால் வாக்கியங்களை வாசிக்க முடிந்தது; கணிதங்களில் சிறந்து விளங்க முடிந்தது.

"ஒரு சேவைத் திட்டத்துக்கு எவ்வளவு செலவிடுகிறோம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. அதன்மூலம் நம் சமூகத்துக்குக் கிடைக்கக் கூடிய தாக்கம்தான் மிக முக்கியம்," என்றார்.

அஞ்செட்டி, சூளகிரி பகுதியில் உள்ள 72 பள்ளிகள், மீஞ்சூர், புழல் பகுதியில் 36 பள்ளிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 45 பள்ளிகள் என மொத்தம் 153 பள்ளிகள் மூலம் 19,700 குழந்தைகள் பயனடைவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் அசோக் லேலாண்ட் தனது 'ரோடு டூ ஸ்கூல்' திட்டம் இதுவரை கிட்டியதாக குறிப்பிட்டுள்ள 3 பலன்கள்:

* பள்ளி இடைநிற்றல் விகிதத்தில் 20% குறைந்ததுடன், வருகைப் பதிவும் கூடியது.

* இரண்டாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்பு வரையில் கற்றல் திறனளவில் 20% உயர்வு.

* குழந்தைகளின் வாசிப்புத் திறனில் 35% மேம்பாடு.

மேலும், இதுவரை 36 பள்ளிகளில் 4,200 குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தியுள்ளதாகவும், நடமாடும் நூலகம் - ஜாலி பேருந்து மூலமாக மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு துணைபுரிந்துள்ளதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது.

ரோடு டூ ஸ்கூல் திட்டம் மூலம் கிடைத்த அனுபவம் குறித்து விவரித்த பாலச்சந்தர், 

"கிராம அளவில் களமிறங்கி பார்த்தபோதுதான் தெரிந்தது, எங்கள் திட்டத்தைச் செயல்படுத்தி அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி என்ற இலக்கை அடைவது மிகப் பெரிய சவால்தான் என்று. ஆனால், எங்களின் முயற்சியைத் தொய்வின்றி செயல்படுத்துவதால் வெற்றிகளை எட்ட முடிகிறது. இது தொடரும். இதுபோன்ற கூட்டு முயற்சிகள் பரவலாகும்போதும் எந்த இலக்கும் வசப்படும்," என்றார் நம்பிக்கையுடன்.
இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்