கார்ஷேரிங் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் நிறுவனம்!

4

பெங்களூர் தெருக்களில் மட்டும் தினந்தோறும் 56 லட்சம் கார்கள் செல்வதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. ஒரு காரில் ஒருவர் மட்டுமே செல்வதை சாதாரணமாகவே பார்க்க முடிகிறது. எனில் ட்ராபிக்கை குறைக்க என்ன தான் வழி? சுற்றுச்சூழல் நிலை என்னவாகும்?

“ஒரு காரில் நான்கு பேர் செல்ல வேண்டும். அது தான் எங்கள் இலக்கு” என்கிறார் 'Poolcircle' நிறுவனத்தின் நிறுவனர் ரகு ராமானுஜம். பூல்சர்க்கிள் நிறுவனம் தனிநபர்கள் தங்கள் கார்களை இன்னொருவரோடு பகிர்ந்துகொள்ள உதவுகிறார்கள். இதன்மூலம் கார் ஓட்டுனருக்கு பணம் கிடைக்கும். அதை எரிபொருள் செலவுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் நகரத்தின் காற்று மாசை குறைப்பதற்கு நாமும் உதவ முடியும்.

கடந்த அக்டோபர் 2015 -ம் ஆண்டு பெங்களூரு ட்ராபிக் போலீஸ், கார் பகிர்தல் தொடர்பான ஒரு பிரச்சாரத்தை நடத்தினார்கள். அப்போது பூல்சர்கிள் நிறுவனம் எல்சியா அமைப்போடு இணைந்து கார் பகிர்வு சேவையை வெற்றிகரமாக நடத்தியது. ELCIA என்பது எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் நிறுவனங்களுக்கான கூட்டமைவு. இந்த அமைப்பில் வெறும் 70 பணியார்களர்கள் கொண்ட நிறுவனத்திலிருந்து, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பணியாளர்களை கொண்ட நிறுவனம் வரையில் இணைவு பெற்றிருக்கிறார்கள்.

பூல்சர்க்கிள் நிறுவனத்தினர், இந்த திட்டத்திற்காக பிரத்யேக திட்டம் ஒன்றை செயல்படுத்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கு பதிவு செய்யும் ஒருவர் தனது அலுவலக ஈ-மெயில் ஐடியை கொண்டு இணைய வேண்டும். இதனால் சரியான ஒருவர் தான் இணைகிறாரா என்பதை உறுதிபடுத்த முடியும்.

இந்த கார்பகிர்வு ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பானப் பயணத்தை உறுதி செய்வதோடு, எல்க்ட்ரானிக் சிட்டி பகுதியை தூய்மையான ஒன்றாக மாற்ற முடியும் என நம்புகிறார் எல்சியாவின் தலைமை செயல் அதிகாரியான ராமா.

பூல்சர்க்கிள் பயன்படுத்துபவர்களில் 75 சதவீதத்தினருக்கு, தாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கே கார் கிடைத்துவிடுவது சிறப்பு. கோரமங்கலா, வைட்ஃபீல்ட், எலக்ட்ரானிக் சிட்டி, இந்திராநகர் மற்றும் பெல்லந்தூர் பகுதிகளுக்கு உடனுக்குடன் கார் கிடைத்துவிடுகிறது. மிக முக்கியமான நேரங்களில் 20லிருந்து 25 விதமான கார் வாய்ப்புகள் கூட கிடைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இதுவரை 4500 கார் இணைப்புகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். 7 நாட்களுக்குப் பிறகு தங்கள் கார் பயணத்தை தொடர்வோர் 53 சதவீதத்தினர் எனவும், 4 வாரங்கள் கழித்தும் இணைந்திருப்பவர்கள் 37 சதவீதத்தினர் என்றும் தெரிவிக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான போக்கு.

இந்த கார் பகிர்தலால் சிலருக்கு பொருளாதார ரீதியாக பயன் கிடைத்திருக்கிறது. எரிபொருளுக்கான செலவு கிடைப்பதால் பொருளாதார விரையம் ஏற்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. சிலர் நெருக்கடியான பேருந்து பயணங்களில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள். இது இரண்டு தரப்பினருக்கும் பயனளித்திருக்கிறது என்கிறார் ரகு.

பூல்சர்க்கிளில் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். வெறுமனே பயணம் துவங்குமிடம், முடியுமிடம் கொண்டு மட்டும் கார்களை தேர்ந்தெடுக்காமல் எந்த பாதை வழியாக கார் செல்கிறதோ அதை பொருத்தும் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். இதன்மூலம் நீண்டதூரம் பயணம் செல்பவர்கள் பயனடைய முடியும். இதனால் பயணங்களில் 80 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

பணம் திரட்டுதல்

2015 துவக்கம் பூல்சர்க்கிளுக்கு கொடுமையான ஒன்றாக இருந்திருக்கிறது. அப்போது ஒரு நல்லதொகை முதலீடாக வரவிருந்திருக்கிறது. ஆனால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த வாய்ப்பு கைநழுவி போனதால் அது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. எனினும் தங்கள் நிறுவன பணியாளர்கள் பக்கபலமாக இருந்ததாக ரகு தெரிவிக்கிறார்.

இவையெல்லாம் ஒருபுறமென்றால் பணம் திரட்டுதல் சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது. காரணம் இதில் இரண்டு தரப்பினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எல்லோரையும் கார் பகிர்வுக்கு இணைப்பது எளிது என்றாலும் தொடர்ந்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பது சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த சிக்கல்கள் குறித்தெல்லாம் பெரிதாக கவலைப்படாத ரகு, இப்போது பணமும் முக்கியம் என்று யோசிக்கத் துவங்கி இருக்கிறார். காரணம் பெருநிறுவனங்களை பொருத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல. எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்வார்கள். ஆனால் சிறு நிறுவனங்கள் தாக்குபிடிப்பதற்கே பணம் முக்கியம்.

“இதை நாங்கள் முன்னமே யோசித்திருந்தால் இன்னும் வேகமாக வளர்ந்திருப்போம். இப்போது சில மொபைல் பேமெண்ட் நிறுவனத்தோடு இணைந்து கட்டணம் வசூலிப்பது குறித்து பேசி வருகிறோம்” என்கிறார் அவர்.

ஆரம்பத்தில் இலவசமாக சேவை அளித்த இவர்கள், தற்பொழுது ஒரு சிறு கட்டணம் வசூலிப்பது குறித்து யோசித்துவருகிறார்கள். ரைட் டேகர், ரைட் கிவர் என்ற செயலிகளை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

புதிதாக இதில் ஒருவர் இணையும்பொழுது ஒரு கட்டணம், மற்றும் மாதாந்திர கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கட்டணம் மாறக்கூடியது. கமிசனாக ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

“எங்கள் முதல் நோக்கம் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதுதான். அதை சிறப்பாக செய்திருப்பதால் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடிந்திருக்கிறது. அவர்கள் தேவைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப எங்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் எங்களின் 20 சதவீத வாடிக்கையாளர்களிடம் தொடர்ச்சியாக உரையாடி வருகிறோம்” என்கிறார் ரகு.

பூல்சர்க்கிளை பொருத்தவரை அவர்களது வாடிக்கையாளர்களை பற்றிய முழு தகவலும் தெரியும். குறிப்பாக எல்லோரின் நிறுவன ஈமெயில் ஐடிகணக்கும் அவர்களிடம் இருக்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்கள் எண்ணிக்கை உட்பட எல்லாமும் அத்துபடி என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலான கார்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள உதவுகிறார்கள்.

தங்களுக்கு ஆர்வமுள்ள சில குறிப்பிட்ட சர்க்கிளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், குறிப்பாக தங்கள் துறை சார்ந்தவர்களோ, நண்பர்களுடனோ, பாலினத்தை தேர்வு செய்தோ கூட தங்கள் பயணத்தை திட்டமிட்டுகொள்ள உதவுகிறார்கள். அடுத்தாக அடுக்குமாடி குடியிருப்போர்கள் தங்கள் கார் பயணத்தை பகிர்ந்துகொள்ள உதவபோகிறார்கள். ஏற்கனவே பல்வேறு குடியிருப்புகள் தங்களுக்குள் வாட்ஸப் க்ரூப்புகளில் இணைந்திருக்கிறார்கள் என்பதால் இது கடினமான வேலையல்ல என ரகு தெரிவிக்கிறார்.

இதுபோல சில ட்ராவல் ஏஜண்சிகளிடமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் நீண்ட தூரப் பயண செலவையும் குறைவான கட்டணத்தில் பெற முடியும்.

கார்ஷேரிங், மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானதா?

கார்பகிர்வு செய்தல் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானதா என்ற கேள்வி எழுகிறது. மோட்டார் வாக சட்டம் 1988ல் இது போல எந்த குறிப்பும் இல்லை என்கிறார் லிஃப்டோ நிறுவனத்தின் நிறுவனரான அகர்வால். இதுபோன்ற சேவைகள் வழங்கவேக் கூடாது என்று எந்த குறிப்பும் அந்த சட்டத்தில் இல்லை என்கிறார். அதனால் தான் பூல்சர்க்கிள் நிறுவனத்தால், பெங்களூரு ட்ராபிக் போலீஸோடு இணைந்து கார்பகிர்வை பிரச்சாரத்தை செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பூல்சர்க்கிள் நிறுவனம் 2015ம் ஆண்டு மட்டும் 8 மடங்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். இவர்களில் 80 சதவீதத்தினர் பி2சி வாடிக்கையாளர்கள். 20 சதவீதத்தினர் கார்பரேட் பணியார்கள். ஒரு நாளைக்கு 17 கிலோமீட்டருக்குள் 20 ஆயிரம் பேர் இதை பயன்படுத்தி வேலைக்கு சென்றுவருகிறார்கள்.

யுவர் ஸ்டோரி ஆய்வு

கடந்த சில ஆண்டுகளாக மீபட்டி, ரைடிங்கோ மற்றும் கார்பூல் அட்டா போன்ற பல புது நிறுவனங்களும் இந்த சந்தைக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ப்ரேசிலை சேர்ந்த ட்ரிப்டா மற்றும் ஃப்ரான்சை சேர்ந்த ப்ளா ப்ளா கார்ஸின் வருகை சந்தையையே புரட்டி போட்டிருக்கிறது.

ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்களும் இந்த சந்தைக்குள் குதித்திருக்கின்றனர் என்பதால் போட்டி மிக அதிகம். இந்த சந்தையின் மதிப்பு உலக அளவில் 15 பில்லியன் டாலராக இருக்கிறது. 2025ம் ஆண்டில் இது 335 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய முதலீடு இல்லாத பூல்சர்க்கிள் போன்ற நிறுவனங்கள் வெற்றியடைய முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் ஜீரோஹதா போன்ற நிறுவனங்களின் வெற்றியை பார்க்கும்பொழுது இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

இணையதள முகவரி : poolcircle

ஆங்கிலத்தில் : Sindhu kashyap | தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற வாகன பகிர்வு தொடர்பு கட்டுரைகள்:

நெரிசல் இன்றி அலுவலகம் செல்ல போக்குவரத்து வசதியை அளிக்கும் ஐதராபாத் இளைஞர்களின் 'commut'

தில்லியில் ஒற்றை-இரட்டை முறை வெற்றி கற்றுத்தரும் பாடம் என்ன?