'கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்திய பணிகளுக்காக' இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு மகசேசே விருது!   

0

ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் 'ரமோன் மகசேசே விருது', சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பெஸ்வாடா வில்சன் ஆகிய இரண்டு இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. 

'கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தல்'- இதற்காக டி. எம். கிருஷ்ணாவுக்கும், 'மனித உயிருக்கான மறுக்கப்படும் உரிமைகளை எதிர்த்து போராட்டம்' -  இதற்கு குரல் கொடுத்துவரும் பெஸ்வாடா வில்சனும், 2016 -இன் மகசேசே விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.  

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசசே நினைவாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. அரசுப்பணி, பொது சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 

2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் 3 நபர்கள், 3 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா, சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன், டோம்பெட் த்வாஃபா, ஜப்பான் ஓவர்சீஸ் கூட்டுறவு தன்னார்வலர்கள், கோன்சிட்டா கேர்பியோ - மொரேல்ஸ், வியென்டைன் ரெஸ்க்யூ ஆகியோர் இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

டி.எம்.கிருஷ்ணா இவ்விருதுக்கு தேந்தெடுக்கப்பட்டதன் விளக்கத்தின் படி,

"இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியமாக திகழும் கர்நாடக இசைக் கலை, ஜாதி அடிப்படையில் இயங்குவதாகவும், அதில் கீழ் ஜாதியினருக்கு இடம் அளிக்கப்படாமல் ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளதாகவும் இவர் உணர்ந்துள்ளார். கலையில் உள்ள அரசியலை கேள்வி கேட்கத் தொடங்கினார். தலித் மற்றும் பிராமணர்கள் அல்லாதோரின் கலை ஈடுபாடு பற்றி ஆராய்ந்து தன் அறிவை பெருக்கிக் கொண்டார். தன் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில், சென்னையில் நடைபெறும் 'ஆண்டு இசை நிகழ்ச்சி' விழாக்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவில் நிலவி வரும் சமூக வேறுபாடுகளை களைய, கலையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை உடைத்தெறிய முடிவெடுத்தார். கிருஷ்ணா, கலையை ஜனநாயகப்படுத்தி, ஒரு கலைஞராக, எழுத்தாளராக, பேச்சாளராக, சமூக ஆர்வலராக தன் பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார்."

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ரஷ்யாவில் உள்ள டி.எம்.கிருஷ்ணாவை ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பலர் வாழ்த்தி வருகின்றனர். பிரபல கர்நாடக சங்கீத வித்வான் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் இடம் இசை பயின்ற கிருஷ்ணா, 'A Southern Music' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். 2015 ஆம் ஆண்டு டிக்கெட் முறை மூலம் கச்சேரிகள் நடத்தப்படுவதால் அதில் பங்கெடுக்கப்போவதில்லை என அறிவித்தார். அதை தொடர்ந்து, சென்னை கடற்கரையோரம் உள்ள குப்பங்களில், 'உரூர் ஆல்காட் குப்பம் விழா' எனும் கலை நிகழ்ச்சியை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அங்குள்ள மீனவ குடும்பங்களுக்கு கர்நாடக இசை உட்பட பல கலை வடிவங்களை இந்த விழா மூலம் கொண்டு செல்கின்றார். 

கடந்த ஆண்டு டிஎன்ஏ பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது டிஎம்.கிருஷ்ணா,

"கர்நாடக சங்கீதம் பொருளாதார அடிப்படையில் உயர்ந்த இடத்தில் இல்லையென்றாலும், அதை வெளிப்படுத்தும் சபாக்களில், உயர் ஜாதி கலாச்சாரம் நிலவி வருகிறது. பொது வெளியில் இருக்கவேண்டிய சபாக்கள் தனிநபர்கள் கையில் உள்ளது. இது குறித்து வெளியில் உள்ளோரிடம் பேச வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சபாக்களின் மேல் ஜாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்." என்று தன் கருத்தை தெரிவித்திருந்தார். 

மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் பெஸ்வாடா வில்சனுக்கு, இந்த ஆண்டின் மகசேசே விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுவாமிநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் ரமோன் மகசேசே விருதைப் பெற்றுள்ளனர்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்