கலை வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் தளத்தை உருவாக்கிய இரு சென்னை பெண்கள்!

0

நந்திதா ஹரிஹரன், சாரதா விஜய் இருவரும் வலைப்பதிவிடுவோர் க்ளப் நிகழ்வு ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் பத்தாண்டுகள். இருவருக்குமே எழுத்தில் ஆர்வம் இருந்ததால் நெருங்கிய நண்பர்களாயினர்

சென்னையில் பிறந்து வளர்ந்த நந்திதா பார்க்லேஸ் வங்கியில் நிதி ஆய்வாளராக இருந்தார். சாரதா மனித வளப் பிரிவில் பணியாற்றினார். இருவருக்கும் எழுதுவதில் ஆர்வம் இருந்தது. உள்ளார்ந்த அழுத்தங்களை எதிர்த்து போராடவும் அதிலிருந்து நிவாரண ம் பெறவும் எழுதுதல் உதவும் என்பதில் இருவருமே நம்பிக்கை அதிகம். இருவரது குடும்பமும் கலை, எழுத்து போன்றவற்றை அனுமதிக்காத பழமைவாதம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சாரதா தனது துணையுடனான உறவுமுறையில் சிக்கல்கள் ஏற்பட்ட பிறகு தனது உணர்வுப் போராட்டங்களிலிருந்து விடுபடுவதற்கு எழுதத் துவங்கினார். நந்திதாவின் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை சமாளிக்க எழுத்து உதவியது. சாரதா காமம் சார்ந்து எழுதினார். நந்திதாவிற்கு பெண்கள் மற்றும் அவர்களது பாலியல் உணர்வு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் இருந்தது.

இருவருக்கும் பல விஷயங்கள் பொதுவாக இருப்பதை அறிந்தனர். தங்களது கலையை வெளிப்படுத்த நினைத்தபோது அதற்கு முறையான தளம் இல்லாததை அறிந்தனர். இவ்வாறு உருவானதுதான் ‘லெட்ஸ் டாக் லைஃப்’ (Let’s Talk Life).

மக்கள் தங்களது திறமைகளை வெளியுலகிற்கு காட்ட வலுவான ரசிகர்கள் தொகுப்பைக் கொண்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் (open mic) இருப்பினும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி நேரடியாக தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பிரத்யேக அமைப்போ அல்லது தளமோ இல்லை. நந்திதா மற்றும் சாரதா இதற்கான தீர்வு காண முனைந்தனர்.

’லெட்ஸ் டாக் லைஃப்’ கலைஞர்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட உதவும் சென்னையைச் சேர்ந்த ஒரு அவையாகும். பார்வையாளர்களாக மூன்று பேருடன் இவ்விருவரும் இந்த அவையைத் துவங்கினர். இன்று ஒவ்வொரு நிகழ்விற்கும் குறைந்தது 70 பேர் பங்கேற்கின்றனர். மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் காஃபி ஷாப்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளுக்கு சென்றனனர். அங்கு நேரடியாக நிகழ்வுகளை நடத்துவது குறித்து விவரித்தனர். சென்னை போன்ற பகுதியில் இந்த முயற்சி வெற்றியடையாது என்று எண்ணி பலர் இவர்களை நிராகரித்தனர்.

நந்திதா யுவர் ஸ்டோரியுடன் உரையாடுகையில்,

”சென்னையைப் பொருத்தவரை இங்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஒரே பார்வையாளர் குழுவே தொடர்ந்து கலந்துகொள்வதைப் பார்க்கலாம். ஆனால் எங்களது சமீபத்திய நிகழ்வில் புதிதாக பலர் பங்கேற்றனர். இது நம்பிக்கையளிக்கிறது. மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கலையை பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர் என்கிற போக்கையே இது உணர்த்துகிறது. திரைப்படங்களுக்கு செல்வதால் அதிக செலவு செய்ய நேரிடுகிறது. இதனால் பொழுதுபோக்கு அம்சத்தில் ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்நோக்குகின்றனர். இங்குதான் நாங்கள் செயல்படுகிறோம்.”

மக்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ’லெட்ஸ் டாக் லைஃப்’ செயல்பட்டு வளர்ச்சியடைந்தது. தற்போது பார்வையாளர்களிடம் இருக்கும் திறமையை கலை வாயிலாக வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மென்மேலும் சிறப்பான நோக்கத்திற்காக இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டது.

இதற்குச் சான்றாக நந்திதா மற்றும் சாரதாவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் யூட்யூப் போன்ற தளங்களின் வாயிலாக தங்களுக்கென முத்திரை பதித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த எங்களது நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் மேடையில் தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தினார் ஒருவர். அந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த இயக்குனர் எங்களை அணுகி அவரது அடுத்த திரைப்படத்திற்கு அந்த நபரை வசனகர்த்தாவாக நியமிக்க விரும்புவதாக தெரிவித்தார். திறமை இருந்து அதைக் கொண்டு எவ்வாறு முன்னேறுவது என்பது புரியாமல் இருக்கும் மக்களை ஒன்றிணைக்கிறோம். நிஜ உலகிற்கு அவர்களது திறமைகளை வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறோம்.

லெட்ஸ் டாக் லைஃப் நிகழ்ச்சியில் பெரும்பாலும் கவிதை, கதை சொல்லுதல், இசை, நடனம் போன்றவை வாயிலாக பார்வையாளர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தவும் அரங்கில் இருப்போரை மகிழ்விக்கவும் ஊக்குவிக்கிறோம்.

சிலர் தாங்கள் தெரிவிக்க விரும்புவதை பாடல் வரிகள் வாயிலாகவும் இசை வாத்தியங்களை வாயிலாகவும் வெளிப்படுத்துவர். இந்நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட கருவை மையமாகக் கொண்டு அமைக்கப்படுவதில்லை. ஏனெனில் மக்கள் தாங்கள் விரும்பும் அனைத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என்பதே எந்த ஏற்பாட்டின் நோக்கமாகும். 

”உறவுமுறை முறிந்து போதல், புதிய உறவுகளை ஏற்படுத்துதல், மலச்சிக்கல் மற்றும் அதன் தீவிரம், மதம், ஓரினச்சேர்க்கை என மக்கள் பலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றனர்,” என்றார் நந்திதா.

தற்சமயம் நந்திதாவும் சாரதாவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இலவசமாகவே நடத்தி வருகின்றனர். வெளியிலிருந்து கலைஞர்கள் பங்கேற்றால் மட்டும் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இது அந்த கலைஞர் அங்கீகரிக்கப்படுவதற்கான சான்றாகும். அதாவது கலைஞர் நிகழ்ச்சியை நடத்துவதைப் பார்க்க மக்கள் கட்டணம் செலுத்தவேண்டும் என்கிற முறையை ஊக்குவிப்பதற்காகவே அந்தத் தொகையும் வசூலிக்கப்படுகிறது என்றார் நந்திதா. 

ஒரு சில ஃபோட்டோகிராஃபர்கள் மற்றும் கலைஞர்களுடன் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில் இவ்விருவரும் இந்த முயற்சியை பெரியளவில் செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

சமூகத்திலுள்ள வளங்களை சிறப்பாக ஒன்றிணைப்பதன் அடிப்படையிலேயே வருவாய் மாதிரி அமைந்துள்ளதாகவும் அதிலிருந்து லாபம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தார் சாரதா.

”இதுவரை நிதி அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை. அதிகம் ஆராயப்படாத விஷயங்களையும் பலர் ஒன்றிணைந்து ஆழமாக ஆராய்ந்து விவாதிக்க உகந்த வகையில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதே எங்களது நோக்கம்.”

சாரதா உள்ளடக்க எழுத்தாளர். நந்திதா தனது ஒட்டுமொத்த நேரத்தையும் ’லெட்ஸ் டாக் லைஃப்’ முயற்சிக்காக செலவிடுகிறார். எம்பிஏ படிப்பை முடித்ததும் நிறுவனத்தை பெரியளவில் செயல்படுத்த விரும்புகிறார்.

தற்போது சென்னையிலுள்ள மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த உதவி ஒரு வெளிப்படையான நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இவ்விரு பெண்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : சம்பத் புட்ரேவு