விவசாயிகள் தற்கொலையும், ஜல்லிக்கட்டு தடையும்: தமிழக அரசு இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்குமா?

விவசாயக் கடனும் ரசாயன பொருட்களும் | டிராக்டர் ஆதிக்கமும் ஜல்லிக்கட்டு தடையும்

9

உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது, அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது !

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பசுமைப் புரட்சிக்கு முன் எவ்வளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சற்று யோசித்து பாருங்கள். இயற்கை வழி விவசாயத்தில் தற்கொலைக்கு இடம் இல்லை என்பதே உண்மை.

.                                                                                                                       நன்றி: Google Images
.                                                                                                                       நன்றி: Google Images

இப்போது அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடப்பது ஏன்?

விவசாயக் கடனும் ரசாயன பொருட்களும்

கடந்த 50 ஆண்டுகளாக நவீனம் என்ற பெயரில் ரசாயன உரம் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை நம் மாநில அரசும் மத்திய அரசும் வலுக்கட்டாயமாக விவசாயிகளிடம் திணித்து வருகிறது. விளைவு, நம் நிலம் முழுவதும் தரிசாகிவிட்டது, உணவு நஞ்சாகிவிட்டது. தமிழக அரசு வழங்கும் விவசாயக் கடன் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை. இந்த திட்டத்தில் பாதி பொருளாகவும், மீதி பணமாகவும் வழங்கப்படுகிறது. பொருளாக வழங்கப்படும் அனைத்தும் நம் மண் வளத்தை சீர்குலைத்த ரசாயன உரங்களும், பூச்சிகொல்லிகளும் தான். பிறகு எப்படி விவசாயம் செழிக்கும்? இதை உணர்ந்த பலர் நம்மாழ்வார் அய்யாவின் வழிகாட்டுதலால் இன்று இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்பியுள்ளனர். நான் மறுபடியும் இதை உரக்கச் சொல்கிறேன், இயற்கை வழி விவசாயத்தில் தற்கொலைக்கே இடம் இல்லை.

டிராக்டர் ஆதிக்கமும் ஜல்லிக்கட்டு தடையும்

டிராக்டர் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இன்று உழவு மாடுகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது, மேலும் டிராக்டர் கடன் காரணமாகத் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நிம்மதியாக மாடு பூட்டி ஏர் உழுது வந்த காலகட்டத்தில் விவசாயிகள் யாரும் கடன் தொல்லையால் தற்கொலை நிலைக்கு செல்லவில்லை. டிராக்டர் மூலம் ஒரு ஏக்கர் உழுவதற்கு சுமார் ரூ.5000 வரை செலவாகிறது. ஆனால், மாடுகளுக்கு தீவனத்தைத்தவிர மற்ற செலவுகள் இல்லை.

ஜல்லிக்கட்டு நம் மண்ணின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வீர விளையாட்டு மட்டுமல்ல, நம் முன்னோர்கள் கண்டுபிடித்த இனப்பெருக்க அறிவியல். ஜல்லிக்கட்டில் வீரியமான காளைகளை கண்டறிந்து இனவிருத்திக்காகவும், வீரியமற்ற காளைகளை உழவுக்காகவும் பயன்படுத்திக் கொள்வர். நாட்டு மாடு சாணத்தில் மட்டும்தான் நிலத்தை வளமாக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு தடையினாலும், 'பீட்டா' போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலும் நம் நாட்டு மாடுகளின் இனமே அழிந்து வருகின்றன. பிறகு எப்படி விவசாயம் செழிக்கும்?

இதற்கு தீர்வு தான் என்ன?

இயற்கை விவசாயத்துக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

பசுமைப் புரட்சியால் கியூபா பல பொருளாதார மற்றும் சுற்றுசூழல் சிக்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இன்றோ உலக அளவில் இயற்கை வேளாண்மையில் கியூபாதான் முதலிடம் வகிக்கிறது. காரணம், இந்திய விவசாயத்தை மிகவும் நேசித்த முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் நடந்த இயற்கை புரட்சி. ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் முற்றிலும் கைவிடப்பட்டது; நிலம் இல்லாதவர்களுக்கு அரசே 50 சென்ட் நிலம் வழங்கி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தது; விவசாயிகள் டிராக்டர்களை ஓரம் கட்டிவிட்டு மாடுகளை ஏரில் பூட்டினார்கள். அடுத்த சில வருடத்தில், இயற்கை வேளாண்மை மூலம் 12 லட்சம் டன்னுக்கு மேல் உணவு உற்பத்தி செய்து கியூபா சாதனை புரிந்தது. கியூபா ஒரு மிக சிறிய நாடு, இயற்கை வேளாண்மையை அரசு தான் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இயற்கை விவசாயத்துக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்து வணிக கட்டிடங்கள் கட்டுவதாலும், காடுகளை அழித்து ஐ.டி கம்பெனிகள் கட்டுவதாலும் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை தமிழக அரசும் மத்திய அரசும் கைவிட வேண்டும். தொடரும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க, இயற்கை வேளாண்மைக்கான செயல்திட்டங்களை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

ஊருக்கு ஒரு காடு

சமீப காலமாக பருவமழை பொய்த்து போவதும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதும் விவசாயிகளுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. இதை மாற்றி அமைக்க கண்டிப்பாக ஊருக்கு ஒரு காடு வளர்க்க வேண்டும். காடுகள் தான் பருவ மழைக்கு ஆதாரமாக அமைகிறது, மழை நிலத்தடி நீரை பெறுகச் செய்கிறது. நிலத்தடி நீர் மண்ணை வளப்படுத்திக்கிறது, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயத்தை செழிக்கச் செய்கிறது. இயற்கைக்கு நாம் ஒரு நன்மை செய்தால் அது நமக்கு பல நன்மை தருகிறது.

வேளாண்மைக் கலாசாரத்தின் உயிர் விஞ்ஞானம் நாங்கள், எங்களைக் கட்டித் தழுவிக் காப்பாற்றுங்கள்!
வேளாண்மைக் கலாசாரத்தின் உயிர் விஞ்ஞானம் நாங்கள், எங்களைக் கட்டித் தழுவிக் காப்பாற்றுங்கள்!

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வழி 

நாட்டு மாடுகளே இயற்கை விவயாசத்திற்கு பேருதவி புரிந்துவருகின்றன, மண் வளத்தை மீட்டெடுக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஆட்டுக் கிடை, மாட்டுக் கிடை கட்டும் முறையை கையில் எடுக்க வேண்டும். வறட்சி காலத்தில் நம் பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு கை கொடுக்கும். மேலும், எல்லா வகை இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக் கூடியவை நம் பாரம்பரிய நெல் ரகங்கள். சென்னையில் லட்சக்கணக்கான அயல் மரங்களை வேரோடு சாய்த்த வர்தா புயல் நமக்கு மிக முக்கியமான ஒரு பாடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய மரங்களான புங்கை, வேப்பமரம், அரசமரம் மற்றும் ஆலமரம் வர்தா புயலை எதிர்கொண்டு கம்பீரமாக நின்றது. இயற்கை நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரச் சூழ்ச்சியால் இன்று உயிர்ச் சங்கிலியின் பிணைப்பு ஒவ்வொன்றாக அறுபடுகிறது. உயிர்ச் சங்கிலியின் ஒரு கண்ணிதான் மனிதன் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

விவசாயிகளோடு உழுதுவந்த 
மண்புழுக்களை இழந்தோம்; 
விவசாயிகளோடு வாழ்ந்துவந்த 
காளைகளை இழந்தோம்; 
நம் வாசல் தேடிவந்த 
சிட்டுக்குருவிகளை இழந்தோம்;

நம்மை வாழ வைக்கும் விவசாயிகளையும் இன்று இழந்து வருகிறோம். இழந்தது போதும் தமிழா, விழித்தெழு!

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா                                                    
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!

பொறுப்புத்துறப்பு: கட்டுரையாளர் சதீஷ் கிருஷ்ணன் கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.