ஃபேஸ்புக்கில் இல்லாதோரையும் இருப்போரையும் இணைக்கும் ’இணைந்த கைகள்’

கரூரைச் சேர்ந்த சாதிக் அலி தொடங்கிய இந்த முகநூல் பக்கம் மூலம் பல மருத்துவ உதவிகளை செய்துவருகின்றனர் இவரும் இவரது குழுவினர்களும். 

0

சதா போனை நோண்டிக் கொண்டே நேரத்தை விரயமாக்குகிறார்கள், சோஷியல் மீடியாக்களை வெட்டிப்பேச்சு பேசும் குட்டிச் சுவராக பயன்படுத்துகிறார்கள், சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இளைஞர் சமுதாயமே தவறான பாதையில் செல்கின்றனர்... என்று எக்கச்சக்க விமர்சனங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் மீது உள்ளநிலையில் அதே சமூகவலைதளங்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் பயன்படுத்துகின்றோம் என்று மெய்பித்து இருக்கின்றது கரூர் இளைஞரால் தொடங்கப்பட்ட ’இணைந்த கைகள்’ அமைப்பு.

கொடும் நோயால் அவதியுற்று வாழ்க்கை முடியப் போகிறது என்று அறிந்தும் இயலாமையால், மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் தவிப்போரை தாங்கி பிடித்து, சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி அவர்களுடைய வாழ்வை மீட்டுத் தருகின்றது இணைந்த கைகள். 
அட்சயா மற்றும் கிருத்திகாவுடன் சாதிக் அலி 
அட்சயா மற்றும் கிருத்திகாவுடன் சாதிக் அலி 

கரூர்வாசியான சாதிக் அலி தான் இணைந்த கைகளின், உதவி வேண்டுவோரையும் உதவிக் கரம் நீட்டுவோரையும் இணைக்கும் கை. இணைந்த கைகள் அமைப்பை உருவாக்கும் முன், சாதிக் சவுதியில் பணிப்புரிந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சென்னை வெள்ளத்தால் தத்தளித்த தருணம். தாய் மண்ணை விட்டு பிரிந்து இருந்த சாதிக், தன் சொந்தங்களின் துயர் துடைக்க சவுதியில் இருந்து 300 போர்வைகளுடன், ரூபாய் ஒன்றரை லட்சம் நிதி திரட்டி சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 

அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பிய பின் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது, அவருடைய தோழி காமிலாவின் மூலம் அட்சயா என்ற சிறுமியின் நிலை அறிந்துள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை. மருத்துவ சிகிச்சைக்கு என்ன செய்வது என்று அறியாது இருந்துள்ளார் சிறுமியின் தாயார் ஜோதிமணி. இச்செய்தியை அறிந்த சாதிக் அலிக்கு அவருடைய அப்பா நினைவுக்கு வந்து வாட்டியிருக்கிறது.

“எங்க அப்பாவுக்கும் இதயப்பிரச்னை தான். அப்போ வெறும் 400 ரூபாய் காசு இல்லாததால் மருந்து வாங்க முடியாமல், இறந்துபோனார். அட்சயாவை பற்றி தெரிந்ததும் கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்ய முடிவெடுத்தேன். முதலில் கரூரில் உள்ள மருத்துவமனையில் என்ன பிரச்னை என்று அறிந்து கொண்டேன். அப்போது டாக்டர்கள், அட்சயா கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ஜில் இருக்கிறார். உடனே ஆபரேசன் செய்யணும் சொல்லிட்டாங்க. நாலரை லட்ச ரூபாய் செலவாகும்னு சொன்னாங்க,” 

எனும் சாதிக் அச்சமயத்தில் யாருடைய உதவியை நாடுவது என்று திகைத்து, இறுதியில் ஃபேஸ்புக்கில் அட்சயா பற்றிய விவரங்களுடன், முழு மருத்துவ ஆதாரங்களின் புகைப்படத்தையும் பதிவிட்டு, உதவி வேண்டியுள்ளார். தொடக்கத்தில் யாரும் உதவ முன்வரவில்லை என்றாலும், ஃபேஸ்புக் முழுவதும் சேதி பரவத் தொடங்கியதில், சாதிக்கிற்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

“சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி காசை பறிக்கும் கும்பலும் உண்டு என்பதால், சட்டென்று ஒரு பதிவை பார்த்தவுடன் யாரும் நம்பிவிடமாட்டார்கள். அது இயல்பு தான். அதற்காக தான் அட்சயாவின் முழு மருத்துவ சிகிச்சை ஆவணங்களை போட்டோ எடுத்து பதிவிட்டேன். அருகில் இருந்தோர் உதவ மனமிருந்தும் மெய்யா? பொய்யா? என்பதில் சிக்கி யோசித்தனர். அவர்களை நேரடியாய் என்னை சந்தித்து, விளக்கத்தை பெற்று கொள்ளலாம் என்று கூறியபின், சிலர் என்னை தேடி வந்தனர். அவர்களில் ஒருவர் வண்ணநிலவன். இன்று அவர் இணைந்த கைகளின் உறுப்பினர். அதற்கு பின் தேவையான நிதி திரண்டது. 

அதில், அப்போதைய கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் சார் ரூ 70 ஆயிரம் வழங்கி பெரும் பங்காற்றினார்,” என்கிறார்.
அட்சயா குடும்பத்திடம் நிதி உதவி வழங்கிய போது.
அட்சயா குடும்பத்திடம் நிதி உதவி வழங்கிய போது.

ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரண்டதுடன், சாதிக் அலியுடன் தொடர்ந்து பயணிக்க விரும்பும் நல் உள்ளங்களும் சேர்ந்தனர். பல இன்னல்களுக்கு பிறகு, அட்சயா இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இதில் ஜோதிமணியை காட்டிலும் கண்ணீருடன் ஆனந்தமடைந்தது சாதிக் அலி தான். 

அன்றிலிருந்து, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் தவிப்போருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் 2017ம் ஆண்டில் இறுதியில் ’இணைந்த கைகள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அபீசியலாக 11 பேர் கொண்ட குழுவாக இவர்கள் செயல்பட்டாலும், ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் அனைவரும் ‘இணைந்த கைகளின்’ உறுப்பினர்கள் என்கிறார் சாதிக்.

அட்சயாவுக்கு அடுத்து கிருத்திகா சிறுமியின் உடல்நிலை பற்றி தெரியவந்துள்ளது. கிட்டதட்ட அட்சாயவின் நிலையே கிருத்திகாவுக்கும். இருப்பில் இருந்த பணத்தை கொண்டு கிருத்திகாவின் உடல்நிலையை பரிசோதித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று டாக்டர்கள் கூற, களத்தில் இறங்கியது ‘இணைந்த கைகள்’. 

வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் ஊடகங்களை பயன்படுத்தி, எட்டு திசைக்கும் கிருத்திகாவின் நிலையை அறிய செய்தனர். இன்று கிருத்திகாவும் நலமாக இருக்கிறார். ஆனால், அட்சயாவுக்கும், கிருத்திகாவுக்கும் மற்றொரு மேஜர் ஆப்ரேஷன் செய்ய வேண்டும்.
கிருத்திகா 
கிருத்திகா 

ஒரே ஆண்டில் ரூ 10 லட்சம் வரை நிதி திரட்டி இரு உயிர்களை வாழ வைத்துள்ளார். இரு அறுவை சிகிச்சைக்கு முடிந்த காலம். அறுவை சிகிச்சைக்காக உதவி நாடி கையில் நோட்டீசுடன் யாசகம் கேட்டு கடை கடையாய் ஏறி இறங்கிய ஒரு பெண்ணை சந்தித்து இருக்கிறார். 

“எங்க பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா. ஒரு நாள் கையில் நோட்டீஸ் வைத்துக் கொண்டே ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார். அப்போ, நான் வேலை செய்யுற கடைக்கும் வந்தார்கள். என்னனு விசாரிச்ச அப்போ, அவருடைய மகனுக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், நிதி திரட்டுவதாகவும் சொன்னார். 

கடைக்கு 10 ரூபாய் வைத்தாலும் ரூ 2,50,000 எப்படி சேகரிப்பீங்க. இனி எந்த கடைக்கும் சென்று யாசகம்செய்ய வேணாம். நீங்க வீட்டுக்கு போங்க, சாயங்காலம் வந்து சந்திக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். விசாரித்து முழுவதும் கேட்டபிறகு தான் தெரிந்தது, மூளைக் கட்டியால் அவதிப்படும் அவருடைய மகன் விஜயக்குமார் அடிக்கடி மயக்கம்போட்டு விழுந்துவிடுவார். கல்லு, மேடு, ரோடு எதுவும் பார்க்க முடியாது. ஒரு நாளைக்கு 10 முறையேனும் மயங்கி விடுவாராம். அந்த மகனை நம்பி தான் அவர்களுடைய வீடே உள்ளது. பிறகு, காஞ்சனா அம்மாவுக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறிவிட்டு கிளம்பினோம்,” எனும் சாதிக்கின் முயற்சியால், விஜயக்குமாரும் நலம் பெற்றுள்ளார்.

தாயுடன் விஜயகுமார் 
தாயுடன் விஜயகுமார் 

ஒவ்வொரு முறையும் பணம் சேகரித்து அறுவைசிகிச்சை வெற்றி அடையும் வரை பாதிக்கப்பட்டவரது அண்ணனாகவும், தகப்பனாகவும் இருந்து கவலையுற்று கிடக்கிறார் சாதிக். ஒரு முறை உதவி செய்துவிட்டால், அத்துடன் இவர்களுக்கும் உதவி அடைந்தோருக்கும் இடையேயான உறவு முடிந்துவிடுவது இல்லை. தொடர்ந்து அவர்களது நலனில் அக்கறை சேர்க்கும் உறவாக மாறிவிடுகின்றார். இனி, அட்சயாவுக்கும், கிருத்திகாவுக்கும் அடுத்த அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்ட வேண்டும் என்று கூறும் அவர், அட்சயாவின் அறுவை சிகிச்சைக்காக சேகரித்த 20 ஆயிரம் பணத்தில் 5,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்க அட்சயா ஆசைப்பட்டு, அதை நிறைவேற்றி வைத்தோம் என்கிறார். இலகிய மனம் கொண்ட சிறுமியின் செயலைக்கண்டு பாராட்டியவர்கள், பலரும் உதவிக் கரம் நீட்டவும் தொடங்கி உள்ளனர்.

“உதவுபவர்களையும் உதவி கேட்போர்களையும் இணைக்கும் கருவியாகவே நாங்கள் செயல்படுகிறோம். நிதி அளிப்போர் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்குக்கே பணம் செலுத்துவர். அட்சயாவின் நல்ல மனதை புரிந்து கொண்டு, இப்போது சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகள் இலவசமாகவே சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது,” என்று சாதிக் கூறும் போதே அவ்வளவு ஆனந்தமடைகிறார்.  

இணைந்த கைகள் முகநூல் பக்க லிங்க்

Related Stories

Stories by jaishree