உலகின் மிகப்பெரிய கைவினை படகுகளைத் தயாரிக்கும் கேரள சிறு நகரம்!

0

கோழிக்கோடு மாவட்டத்தில் பசுமையான பகுதி, கடல் நீர் ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ளது பேப்பூர். இந்தத் தனித்துவமான துறைமுகத்தில்தான் ’உரு’ என்கிற உலகின் மிகப்பெரிய கைவினைப் படகுகள் உள்ளன.

மெசபடோமியா மற்றும் சுமேரிய கடல்களில் இருந்து வந்த ஐரோப்பிய படகுகளுக்கு சாட்சியாக இருக்கும் இந்தக் கடற்கரைப் பகுதி இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மலபார் மசாலாப் பொருட்கள் போக்குவரத்தில் பரபரப்பாகக் காணப்படுகிறது. 

200 அடி உயரமும் 1500 டன் எடையும் கொண்ட ’உரு’ படகுகள் முதலில் அராபிய, சீன மற்றும் ஐரோப்பிய மக்களால் வாணிபம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தோவ், மச்சுவா, ஜல்பூத் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் படகுகள் மரத்தால் இயந்திரங்களின் உதவிகளின்றி தயாரிக்கப்பட்டதாகும். 1,500 ஆண்டுகள் பழமையான ‘உரு’ உலகின் மிகப்பெரிய கைவினை பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட கட்டுமானங்களுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வரைபடங்கள் அல்லது திட்டமிடல் ஏதுமின்றி இந்தப் படகுகள் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். 

உரு படகுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் இப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள். இவர்களிடன் இந்தத் திறன் பல தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. 

அருகாமையில் உள்ள நிலம்பூர் காடுகளில் இருக்கும் மரங்களைக் கொண்டு இந்தப் படகுகள் தயாரிக்கப்படுவதாக ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தனித்துவம் வாய்ந்த உரு படகுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பின்னர் இந்தப் படகுகள் ஹவுஸ் போட்களாகவும் ஆடம்பரப் படகுகளாகவும் உணவு விடுதிகளாகவும் மாற்றியமைக்கப்படும். இந்தத் துறை தற்போது கேரளப் பகுதியில் வேலை வாய்ப்புகளிலும் சுற்றுலாப் பிரிவிலும் பங்களிக்கத் துவங்கியுள்ளது. 

இன்று 200-க்கும் அதிகமான குடும்பங்கள் வருமானம் ஈட்ட உரு உதவுவதாக ஹிஸ்டரி சானல் வீடியோ பதிவு குறிப்பிடுகிறது. பாரம்பரியமான உரு படகு ஒன்றை கட்டமைக்க சராசரியாக 40-50 திறன் வாய்ந்த பணியாளர்கள் ஒன்றிணைகின்றனர். இந்த கட்டுமானப் பணியை நிறைவு செய்ய ஒன்று முதல் நான்காண்டுகள் வரை ஆகும் எனவும் அந்தப் பதிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படாத நிலையிலும் இந்த அழகான கலைநயம் திறன்மிக்கப் பணியாளர்களால் இன்றளவும் உயிர்ப்புடன் காணப்படுகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA