காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை: பாலின நடுநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிளில் பயணித்த ஸ்ருதி சிவசங்கர்!

வெவ்வேறு நிலப்பரப்புகள், பின்னணி, பாரம்பரியம் ஆகியவற்றில் பாலினம் குறித்த மக்களின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதை புரிந்துகொள்ள 13 மாநிலங்கள் மற்றும் 500 கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டார் ஸ்ருதி... 

1

தன்னுடைய பணியைத் துறந்துவிட்டு தனக்கு விருப்பமான ஒன்றை வாழ்க்கைப் பாதையாக மாற்றிக்கொள்ள வெகு சிலரால் மட்டுமே முடியும். 27 வயதான ஸ்ருதி சிவசங்கர் மூர்த்தியும் சாதாரண மனிதர்களில் ஒருவரே. பொறியாளரான இவர் நிதி ஆலோசகரான தனது பணியைத் துறந்துவிட்டு மிகவும் விருப்பமான பயணம் செய்வதையும் சைக்ளிங்கையும் ஒரு முக்கிய நோக்கத்திற்காக மேற்கொள்ள முடிவெடுத்தார். பாலின நடுநலை குறித்து இந்தியா முழுவதுமுள்ள இளம் வயதினரிடையே பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணினார்.

சிறப்பான தகவலுடன் சைக்கிளில் பயணம்

45 நாட்களில் 4200 கிலோமீட்டர் பயணிப்பது பலருக்கு சோர்வளிக்கும் விஷயமாக இருந்தாலும் ஒரு முக்கிய நோக்கத்துடன் பயணித்ததால் அவர் தனது பயணத்தை மதிப்புமிக்கதாகக் கருதுகிறார்.

”என்னுடைய பயணம் வெறும் பயணமாக இருக்க நான் விரும்பவில்லை. சமூகத்திற்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்பினேன். அதுதான் பாலின நடுநிலையான இந்தியாவை உருவாக்குவது. அதற்கான ஒரு முயற்சியாகத்தான் நான் இதை தொடங்கினேன்.”

வெளியே வருதல் என்பது அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர் சைக்கிளில் பயணித்தார். அதாவது அவர் மிகவும் வசதியாக இருந்துவந்த ஒரு சூழலில் இருந்து அதிகம் தெரிந்துகொள்வதற்காக வெளியேறினார். எந்த பாலினமாக இருந்தாலும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதையும் ஒவ்வொருவரும் தங்களது தனித்துவத்தை இறுகப் பற்றிக்கொண்டு கனவை நோக்கிச் செல்லவேண்டும் என்பதையும் மக்களுக்கு புரியவைப்பதற்கான அவரது தரப்பு முயற்சிதான் இது.

மாறுபட்ட பருவநிலைகளை எதிர்கொண்டு ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் தூரம் பயணித்தார். அவரது பயணமும் நோக்கமும் முழுமையடைய குழு உறுப்பினர்களான ரூபெர்ட் மற்றும் அனகா உதவினர். பயண ஏற்பாடு, தங்குமிடம், திட்டமிடல் ஆகியவற்றிற்காக குழுவினருக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து மட்டுமல்லாமல் அந்நியர்களிடமிருந்து கூட்டுசேகரிப்பு மூலமாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உதவி கிடைத்தது. 

2014-ம் ஆண்டு கல்வி முயற்சிக்காக ராஜஸ்தானைச் சேர்ந்த உதய்பூரின் பழங்குடிப் பகுதியில் மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். அங்கேதான் முதல்முறையாக வாழ்க்கைத் திறன் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாதவிடாய் ஆரோக்கியம், பாலியல் கல்வி அல்லது பாலினம் சார்ந்த கல்வி ஆகியவை குறித்த சரியான தகவல்களை இளம் பருவத்தினருக்கு அளிக்கவேண்டியதன் தேவை குறித்தும் கற்றார்.

அங்கிருந்து கர்நாடகாவின் மைசூருவிலுள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். அங்கும் குழந்தைகளுடனான உரையாடலைத் தொடர்ந்தார். உதய்பூரில் மேற்கொண்ட அதே முயற்சிகளை பந்திப்பூர் வனப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடமும் மேற்கொண்டு மாதவிடாய் ஆரோக்கியம் குறித்து எடுத்துரைத்தார். அதே நேரத்தில் சைக்ளிங் செய்யத் துவங்கினார். வார இறுதிநாட்களில் நகரைச் சுற்றி தனியாக சைக்கிளில் வலம் வந்தார். கடந்த மூன்றரை வருடங்களில் மனாலியில் துவங்கி Leh வரை, கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஹிமாலய மலைப் பகுதிகள் என்று பயணித்துள்ளார்.

”சைக்ளிங் எனக்கு சுதந்திர உணர்வை அளிக்கிறது. ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் எனக்குள் ஒரு புதிய உணர்வை கண்டறிவேன். சைக்கிளின் இருக்கையில் அமர்ந்து கால்களால் மிதித்துக்கொண்டே வலம் வருவது எனக்குள் நம்பிக்கையூட்டி வலிமையாக்குகிறது.” என்றார்.

சைக்கிளில் பயணிக்கும் எல்லோரையும் போலவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் செல்வது எப்போதும் அவரது கனவாக இருந்தது. இதுவரை அனஹிதா ஸ்ரீப்ரசாத் என்கிற பெண்மணி மட்டுமே இந்த அகண்ட பரப்பளவை சைக்கிளில் பயணித்துள்ளார். இந்தப் பாதையில் ஸ்ருதியும் பயணிக்க விரும்பினார். அவரது இரண்டு விருப்பங்களையும் ஒன்றிணைத்தார்.

பாலினம் குறித்த ஒரே மாதிரியான சிந்தனைகளால் ஆண், பெண் இருவருமே பாதிக்கப்படுகின்றனர்

இன்றைய அவசர உலகில் எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடக்கும் பலவிதமான தகவல்களின் குவியல்களில் குழந்தைகள் சரியான அறிவையும் சமூகத்தை எதிர்கொள்ளும் திறனையும் பெறுவது மிகவும் முக்கியமானதாகும். இளமைப் பருவம் என்பது அவர்களது வசதியான பகுதியிலிருந்து வெளிவரும் பருவம். சமூகத்தை கவனித்து என்ன, எப்படி, எதற்காக போன்ற பல கேள்விகளுக்கு விடைகாண முற்படுவார்கள். அப்போதுதான் ஊடகங்களின் தாக்கத்தால் ஒரே மாதிரியான கருத்துகளை பதியவைத்துக்கொள்வார்கள். சமூகத்தை கவனித்து பலவிதமான நடவடிக்கைகளை இவை ஆண்களுக்கானது என்றும் இவை பெண்களுக்கானது என்றும் கற்றுக்கொள்வார்கள். ஸ்ருதி விவரிக்கையில்,

”பாலியல் என்பதும் பாலினம் என்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும்.”

பாலியல் என்பது உடல் சார்ந்தது. உங்களது இனப்பெருக்க உறுப்புதான் ஆண் அல்லது பெண் என உங்களை வகைப்படுத்தும். ஆனால் பாலினம் என்பது சமூகப் பிரிவினையை குறிக்கிறது. இதில் ஒரு ஆண் என்ன செய்யவேண்டும் அல்லது ஒரு பெண் என்ன செய்யவேண்டும் என்பதற்கு சில குறிப்பிட்ட விதிமுறைகளை சமூகம் வகுத்திருக்கும். இங்குதான் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாலினம் தொடர்பான ஒரே மாதிரியான கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆண்களும் இளம் வயது முதலே ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை பின்பற்ற கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். வீட்டின் நிதிநிலையை ஆண்கள்தான் கையாளவேண்டும் என்பார்கள். ஆண்களின் வேலையல்ல என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்ட ஒரு வாழ்க்கைப்பாதை ஒருவேளை அவர்களது கனவாக இருந்தால் அதை மேற்கொள்ள விடாமல் தடுக்கும் நிலையை எதிர்கொள்ள நேரிடலாம். இது குறித்து மேலும் விவரிக்கையில் ஆண்கள் அழக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டே வளர்க்கப்படுவதால் அவர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை உணர்கின்றனர் என்றார். 

இந்தக் குழுவினர் ஜம்மு, பஞ்சாப், ஹரியானா என இன்றுவரை 500-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் உரையாடியுள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் இவர்களது முயற்சிக்கான மக்களின் பதிற்செயல் மாறுபட்டாலும் ஹரியானா பகுதி குழந்தைகளின் விழிப்புணர்வு நிலையை பார்த்து ஸ்ருதி மிகுந்த ஆச்சரியத்திற்கு ஆளானார். அவர்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விவாதித்தனர். சமைப்பது, குழந்தைகளை பராமரிப்பது ஆகியவை மட்டுமே பெண்களுக்கான கடமையாக பார்க்கப்பட்டது. எனினும் அந்தச் சூழலிலும் இளம் பெண்கள் தீர்மானத்துடன் இருப்பதை பார்க்கமுடிகிறது. அவர்களுக்கு சரியான திறமை இருப்பின் அவர்களால் சமூகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஸ்ருதி நம்புகிறார்.

வாழ்க்கைத் திறன் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும்

இந்தியா முன்னேறி இருப்பினும் கல்வி பாடதிட்டத்தில் பல ஆண்டுகளாக மாற்றமில்லை. மாறிவரும் காலத்தின் வேகத்திற்கு அவை ஈடுகொடுக்கவில்லை. இந்திய கல்வி முறையில் வாழ்க்கைத் திறன் கல்வியை இணைப்பதுதான் இந்தியாவில் பாலின நடுநிலையை அடைவதற்கான முக்கிய முயற்சியாகும். பச்சாதாபம், சுய விழிப்புணர்வு, தொடர்பு கொள்ளுதல், தெளிவான பேச்சு ஆகிய வாழ்க்கை திறன்களை ஆரம்ப பள்ளி நிலையிலேயே கட்டாயமாக இணைக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு.

ஒரு முறை பந்திபூரில் அவரது வகுப்பில் திருநங்கைகள் குறித்த விவாதம் எழுந்தது. எட்டு வயது மாணவன் ஒருவன் திருநங்கைகள் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தால் பயம் ஏற்படுவதாக தெரிவித்தான். ஒரு திருநங்கையுடன் எப்படிப் பேசுவதென்றோ பதிலளிப்பதென்றோ தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டான். அவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதைப் பார்த்திருப்பதாக புகாரளித்தான். நமது சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் கடுமையான நிலைகள் குறித்து அவர்களுக்கு ஸ்ருதி விரிவாக எடுத்துரைத்தார்.

”ஒரு குறிப்பிட்ட வகுப்போ அல்லது உன்னுடைய பகுதியிலிருக்கும் ஒரு பள்ளியோ உன்னை நிராகரிப்பதை உன்னால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? இப்போது இதே நிராகரிப்பு 200 மடங்கு அதிகரித்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபார்.” என்று அந்த மாணவர்களிடம் கூறினார் ஸ்ருதி. சிறிது நேரம் யோசித்தபின் அந்த மாணவர்கள் இனி அவர்களிடம் இனிமையாக பழகுவதாகவும் அவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

”இன்றைய தலைமுறையினருக்கு இதுதான் தேவை. அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ளாமல் அவர்கள் ஒரு சிறிய கூண்டினுள் அடைபட்டு கிடக்கக்கூடாது.” 

வாழ்க்கைத் திறன்கள் அவர்கள் முன்னேற உதவுவதுடன் எதிர்காலத்தில் சரியான முடிவெடுக்கவும் உதவுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா