ப்ளாஸ்டிக்கின் மாற்றுப் பொருளை அறிமுகப்படுத்தி சுற்றுச்சூழலை காக்கும் சமன்வி போக்ராஜ்

தாவர இழைகளைப் பயன்படுத்தி நூறு சதவீதம் மக்கக்கூடிய உரமாக்கக்கூடிய டேபிள்வேர் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்.

3

ப்ளாஸ்டிக் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. வீட்டு அலமாரியின் ஒவ்வொரு மூலையிலும் நிறைந்துள்ளது. நமது வாழ்க்கை முற்றிலும் ப்ளாஸ்டிக்கைச் சார்ந்ததாக மாறியுள்ளது. தொட்டில் முதல் சவப்பெட்டி வரை தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை ப்ளாஸ்டிக்காலானவை.

ப்ளாஸ்டிக் நிறைந்த இந்த உலகில் பெங்களூருவைச் சேர்ந்த 31 வயதான சமன்வி போக்ராஜ் ப்ளாஸ்டிக்கிற்கு மாற்றாக கரும்பு சக்கையினாலான வெட்டுகருவிகளை உருவாக்கியுள்ளார்.

எர்த்வேர் தயாரிப்புகள்

இந்தியாவில் தெருக்களில் முதலில் நம் கண்ணில் படுவது குப்பை. இது நாம் பெருமைப்படவேண்டிய விஷயமல்ல. பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய ப்ளாஸ்டிக் பொருட்களே இந்த குப்பைகளில் 90 சதவீதம் உள்ளது. முக்கியமாக பாலிதீன் கவர்கள், தட்டுகள், கப்கள், ஸ்பூன்கள் போன்றவைகளாகும். 

ப்ளாஸ்டிக் மக்காத பொருள் என்று தெரிந்தும் தூக்கியெறியக்கூடிய ப்ளாஸ்டிக்கிற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதற்கான மாற்றுப் பொருள் குறித்து சிந்தித்தேன் என்கிறார் சமன்வி.

சமன்வி மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர். அவரது அப்பாவும் தாத்தாவும் 1963- ஆண்டு ஸ்டீல் ஃபோர்ஜிங் நிறுவனத்தை நடத்தி வந்தனர். சமன்விக்கும் தொழில்முனைவில் விருப்பம் இருந்தது. அதே நேரம் சமூகத்திற்கும் சுற்றுசூழலுக்கும் நலம் பயக்கும் விதத்தில் ஒன்றை உருவாக்க விரும்பினார்.

2011-ம் ஆண்டு நிறுவப்பட்ட எர்த்வேர் முதலில் குப்பைக்கூடையின் கவர்கள், ஜவுளித் துறைக்கான கவர்கள் மற்றும் வெட்டுக்கருவிகள் போன்றவற்றை தயாரிக்கத் துவங்கினர்.

உணவுத் துறையில் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய டேபிள்வேர் பொருட்களுக்கான மிகப்பெரிய தேவை இருப்பதால் இவை சுற்றுச்சூழல் மாசில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உணர்ந்த சமன்வி ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருளைத் தேடத் துவங்கினார். இது குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர் கரும்பிலிருந்து ஜூஸை பிழிந்தெடுத்த பின்னர் கிடைக்கும் சக்கையிலிருந்து கிடைக்கும் நார் பொருளை பயன்படுத்த திட்டமிட்டார். இவ்வாறு உருவான நிறுவனம்தான் விஸ்ஃபோர்டெக் பிரைவேட் லிமிடெட். இதில் தாவர இழையால் தயாரிக்கப்பட்ட நூறு சதவீத மக்கக்கூடிய மற்றும் உரமாக்கூடிய டேபிள்வேர் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

விஸ்ஃபோர்டெக்கிற்கு (Visfortec) மட்டுமே சொந்தமான ப்ராண்ட்தான் எர்த்வேர். சந்தையில் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய வெட்டுகருவிகளுக்கான தேவை இருப்பதால் அதில் முக்கிய கவனம் செலுத்தத் துவங்கியது இந்நிறுவனம்.

கரும்பு சக்கைகள் உயர் வெப்பநிலையால் அழுத்தப்பட்டு பிணைந்து வலுவடைகிறது. இதைக் கொண்டுதான் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தயாரிப்பிற்கான மூலப்பொருள் விவசாயக் கழிவுகளாகும்.

கரும்புச் சக்கைகளாலான தட்டுகள், கிண்ணங்கள், ட்ரே மற்றும் பொருட்களை வைக்கும் கன்டெய்னர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது எர்த்வேர். காஃபி கப்களும் க்ளாஸ்களும் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது.

ப்ளாஸ்டிக்கை அகற்றுதல்

“மக்களிடையே ப்ளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த அறிவுறுத்துவதும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆரம்பகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதற்கடுத்த சவால் விலை. 

“சந்தையில் புதிய தயாரிப்பு என்பதாலும் குறைவான அளவே வாங்கப்படும் என்பதாலும் ப்ளாஸ்டிக்கைக் காட்டிலும் விலை அதிகமாகவே காணப்படும். இதனால் மக்கள் ப்ளாஸ்டிக்கிலிருந்து இந்த தயாரிப்பிற்கு மாறுவதற்கு விரும்புவதில்லை. எனினும் கடந்த ஓராண்டாக இந்த தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் விலையை கணிசமான அளவு குறைத்துள்ளோம்,” என்றார் சமன்வி.

நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய ப்ளாஸ்டிக்கை தடை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சூழலுக்கு உகந்த தயாரிப்புகளுக்கு மாறுவதற்கான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

இன்று இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 15 லட்சம் பீஸ் வெட்டுகருவிகளை உற்பத்தி செய்கிறது. தென்னிந்தியாவில் தாவர இழையால் தயாரிக்கப்படும் முதல் உற்பத்தி யூனிட் இந்நிறுவனத்துடையது என்கிறார் சமன்வி. நிறுவனங்கள், ரெஸ்டாரண்டுகள், டேக்அவே ஷாப்கள் போன்றவற்றிற்கான பேக்கேஜிங் மெட்டீரியல்களை வழங்கிவருகிறது இந்நிறுவனம். ஒரு மாதத்திற்கு சுமார் 8 முதல் 10 டன் வரை விற்பனை செய்கிறது. அடுத்த அறு மாதங்களில் 25 டன்னாக அதிகரிக்க விரும்புகின்றனர்.

அதிகாரமளிக்கபடுவதற்காக பணியிலமர்த்தப்படுதல்

பேக், குப்பைகூடையின் கவர்கள், சணல், பேப்பர் மற்றும் துணியினாலான துணிகளுக்கான கவர்கள் போன்றவற்றை தயாரிப்பதில் பெண்களுடன் இணைந்து பணிபுரிகிறார் சமன்வி. கர்நாடகாவிலுள்ள கிராமங்களுக்குச் சென்று இவரது குழுவினர் வீட்டிலிருந்து பணிபுரியும் பெண்களை பணிக்கு நியமிக்கின்றனர். பெங்களூரு குழுவில் 12 உறுப்பினர்கள் உள்ளனர்.

பெண்களுக்கு அதிகாரமளிக்கப்படவேண்டும் என்பதால் எங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் பெரும்பாலும் பெண்களையே இணைத்துள்ளோம். தும்கூர், நீலமங்களா மற்றும் மைசூர் போன்ற பெங்களூருவைச் சுற்றுயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களுடன் பணிபுரிகிறோம். வீட்டிலிருந்து வசதியாக தயாரிப்புகளை நிறைவுசெய்து அனுப்பும் பெண்களுடனும் பணிபுரிகிறோம்.

”என்னால் இயன்றவரை பெண்களுக்கு அதிகாரமளிக்கப்படுவதை ஊக்குவிக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் அவர்களே குடும்பத்தின் முதுகெலும்பு. நிதி சார்ந்த ஸ்திரதன்மையானது அவர்கள் மேலும் சிறப்பிக்க உதவும்,” என்றார் சமன்வி.

குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண்கள் நகர்ப்புற சந்தையில் அதிக பயன்பாட்டில் உள்ள துணி, சணல் மற்றும் பேப்பர் பேக்குகளை தைக்கும் பணியில் ஈடுபட அவர்களுடன் பணிபுரிகிறது விஸ்ஃபோர்டெக்.

அடுத்த 2-3 ஆண்டுகளில் ப்ளாஸ்டிக்கிலிருந்து விலகி ஒரு நிலையான மாற்றுப் பொருளாக இந்த தயாரிப்புகள் மிகப்பெரிய அளவில் சந்தையில் விற்பனையாகும்.

”நாம் நிரந்தரமாக இந்த உலகில் இருக்கப்போவதில்லை. சில ஆண்டுகளில் நாம் இந்த உலகை விட்டுச் சென்றுவிடுவோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்கள் பல தலைமுறைகளாக அப்படியே தங்கிவிடும். நமது வாழ்க்கை முறை குறித்தும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். குறைந்தது இப்போதுள்ள சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்காமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்,” என்றார் சமன்வி.

ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்னவி