வெள்ளித்திரையில் ‘மெரினா புரட்சி’

2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி, தமிழ் மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராடியதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’.

0

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தமிழ் நாடு சந்தித்த மாபெரும் புரட்சியாக இருந்தது 2017 ஆம் ஆண்டின் ஜல்லிகட்டு ஆதரவு ‘மெரினா புரட்சி’. ஜல்லிக்கட்டிற்கான தடையை விலக்கக் கோரி பாமர மக்கள் ரோட்டிற்கு வந்ததையும், புரட்சிப் போரை ஒரு கொண்டாட்டக் களமாக மாற்றியதையும் எளிதில் மறந்துவிட முடியாது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை பின்புலமாக வைத்து ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ என்ற திரைப்படம் ஒன்று உருவாகியிருக்கிறது. போராட்டம் தொடங்கிய போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை என்றாலுமே அந்த பொழுதிலேயே படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட குழுவினர் 
‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட குழுவினர் 

கதை, திரைக்கதை, வசனம், ஷாட் டிவிஷன் எல்லாம் எழுதிக் கொண்டு படப்பிடிப்பிற்கு செல்லுமளவிற்கு இவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. கண் முன் நடக்கும் புரட்சியை ஆவணப்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு, எந்த முன் தயாரிப்புகளும் இல்லாமலேயே படப்பிடிப்பு வேலை தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் பல நாடுகளில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராட்டம் நடந்த போது, அது வெறும் ஜல்லிக்கட்டு பற்றியது கிடையாது, மக்களின் ஒருமைத்தன்மை பற்றியது என்பது புரிந்ததாக தெரிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

“போராட்டத்தின் போது நிறைய பேர் அறிமுகமானார்கள். போராட்டம் முடிந்த பிறகும், அவர்களோடு பயணிக்கத் தொடங்கினோம். சிலர் இந்த திரைப்படத்தில் பங்காக இருக்க சம்மதித்தார்கள். சிலர் மறுப்பு தெரிவித்தார்கள்,” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நிருபமா சந்தோஷ். 

ஃபிலிம் க்யூரேட்டராக அனுபவம் உள்ள நிருபமா இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபாலின் மனைவியும் கூட. இந்த படத்தில் எக்சிக்யூட்டிவ் ப்ரொடியூசராக அனுராக் காஷ்யப்பும் ஒரு பங்காக இருக்கிறார்.

‘அஹிம்சா ப்ரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்த படத்தில், தயாரிப்பாளர்களாக என்.ஜெயபால், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் ஆகியோரின் பங்கும் இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பது ரமேஷ் விநாயகம். இயக்குநர் சந்தோஷ் கோபால் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமுடன் வேலை செய்த அனுபவம் உள்ளவர். மேலும், சந்தோஷும் நிருபமாவும் இந்தியாவில் ‘சினிமா பாரடைசோ’ எனும் வீடியோ ரெண்டல் நிறுவனத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ந்யூயார்க்கில் இருக்கும் வால் ஸ்ட்ரீட்டில் வெளியிடப்பட்டது. இதே இடத்தில் தான் 2011 ஆம் ஆண்டில் ‘வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’ எனும் போராட்டம் நடந்தது. படத்தின் டீசர் கென்யாவில் ஐக்கிய நாடுகள் இளைஞர்கள் கருத்தரங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

படத்தில் இருக்கும் இன்னொரு சிறப்பம்சம், கென்யாவில் இருக்கும் மாசாய் மரா எனும் பழங்குடியின மக்களுக்கு மத்தியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பது. ஒரு தமிழ் திரைப்படம் கென்யாவின் பழங்குடிகள் மத்தியில் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கு மாசாய் மாரா மக்களுக்கு இருப்பதனால், நாம் வந்திருக்கும் இந்த பாதையை புரிந்து கொள்ள அவர்களுடைய பங்கு முக்கியமானது என சொல்லப்படுகிறது.

“பழங்குடியினரின் வாழ்க்கை வழியே, இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை எளிதாக வெளிப்படுகிறது. அங்கே ஷூட் செய்தது ஒரு பிரமாதமான அனுபவம், வாழ்நாள் வரை நீட்டிக்கும்,” என்கிறார் நிருபமா.

ஜல்லிக்கட்டு போராட்டம் 2017 ஆம் ஆண்டிலேயே முடிந்து விட்டாலும், இப்போது வரை அந்த உணர்விலேயே படக்குழுவினர் இருப்பதாக சொல்கிறார். சின்ன சின்ன விவரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, அதிகளவிலான ஆய்வுகள் படத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது.

இயக்குனர் சந்தோஷ் கோபால் உடன் ஒளிப்பதிவாளர்
இயக்குனர் சந்தோஷ் கோபால் உடன் ஒளிப்பதிவாளர்

போராட்டத்தை சுற்றி பல கதைகள் சொல்லப்பட வேண்டி இருக்கும் காரணத்தினால், வெள்ளித்திரையில் உயிர்ப்பு கொள்ளும் ஐந்து கதைகளை தேர்தெடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். தமிழ் மக்களின் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு ஒரு மிக முக்கியமான போராட்டமாக இருக்குமென்பதால், மக்களுக்காக இந்த படத்தை உருவாக்கியிருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள் படக்குழுவினர். 

இந்த படத்தின் வழியே உலகில் இருக்கும் சில குழுக்களோடு ஒன்றிணைய முடிந்ததாக சொல்கிறார். நைரோபியில் இருக்கும் ஐக்கிய நாடுகளில் இளைஞர் கருத்தரங்கில் பேச அழைக்கப்பட்டது, அமெரிக்காவின் ஹார்வர்டு தமிழ் இருக்கையோடு தொடர்பு உண்டானதை மேற்கோள் காட்டுகிறார். படப்பிடிப்பு அனுபவத்தை பற்றி பேசிய நிருபமா,

“மொத்த குழுவும் போராட்டம் நடந்த போது அங்கேயே தாம் வாழ்ந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். வாழ்நாள் முழுவதும் நீளும் சில நட்புறவுகள் கிடைத்தது. மண்ணின் மீது இருக்கும் காதல் உண்டாக்கியிருக்கும் ஒற்றுமை உணர்வையும், தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி மீது மக்களுக்கு இருக்கும் பெருமையையும் பார்த்தோம். இன்னமும் கூட, பெரிய தலைவர்கள் இல்லாத, அரசியல் இல்லாத ஒரு இயக்கம் எப்படி மக்களை ஒன்று கூட்டியது என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதில் சில உணர்வுகளை படத்தில் பிரதிபலிக்க முயற்சி செய்திருக்கிறோம்,” என்கிறார்.

போஸ்ட்-புரொடக்‌ஷனின் கடைசி கட்டத்தில் இருக்கும் இத்திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படக்குழுவினர் எந்த அளவு உற்சாகமாக இந்த படத்தை உருவாக்கினார்களோ, அதே உற்சாகத்தோடு மக்கள் படத்தை பார்ப்பார்கள் என உறுதியாக சொல்கிறார் நிருபமா.

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha