வாஜித் கான்- காப்புரிமை மற்றும் கின்னஸ் சாதனை கொண்டுள்ள ஒரு திரைமறைக் கலைஞன்!

2

பெரும்பாலான சிறுவர்கள் காகித கப்பல்களை செய்து, அதை மழை நீரில் விட்டு விளையாடி மகிழ்வார்கள். ஆனால் வாஜித் கான் கண்ட கனவு மிகப் பெரியது. அவர் ஒரு சிறிய கப்பலையே செய்து தண்ணீரில் மிதக்க விட்டார். தனது 14 ஆம் வயதில் அவர் உலகின் மிகச் சிறிய எலெக்ட்ரிக் ஐயன் (Electric Iron) னை கண்டுபிடித்தார். பின் அது கின்னிஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இன்று, 34 ஆம் வயது நிரம்பிய இந்தகலைஞன், தனது இரும்பு ஆணி ஒவியங்களுக்காக காப்புரிமை வைத்திருக்கிறார். 200 கண்டுபிடிப்புகளுடன் ஐந்து முறை உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தான் செய்த கல்லினால் ஆனா உருவத்துடன் வாஜித் கான்
தான் செய்த கல்லினால் ஆனா உருவத்துடன் வாஜித் கான்

உலகில் உள்ள பெரும்பாலான கலைஞர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை போலதான் வாஜித் கானின் தொடக்கமும் அமைந்தது. ஆனால் இவர், மற்றவர்களைப் போலல்லாமல் எளிமையாக இருந்தார். மண்ட்சோர் மாவட்டத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள சோன்கிரி என்கின்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்த வாஜித், பள்ளிக் கூடத்தில் சரியாக மதிப்பெண்கள் பெறாததால் சிறுவயதிலேயே தாழ்வு மனப்பான்மை கொண்டவராக திகழ்ந்தார். எனினும், அவருக்கு கிடக்கும் பொருட்கள் எதுவானாலும் அதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அவர் ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளியை விட்டு வெளியேறியது மட்டுமல்லாது வீட்டை விட்டும் வெளியேறினார்.

கலை ஓவியத்துடன் ஆய்வு

"என் வாழ்க்கையின் திருப்புமுனைகளின் ஒன்றாக கருதுவது, எனது அம்மா என்னிடத்தே ரூ.1300 கொடுத்து, என் பொழுதுபோக்கையே தொழிலாக எடுக்கச் சொல்லி சவால் விட்டதுடன், வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்", எனக் கூறுகிறார் வாஜித். தனது 16 வயதில் ஆய்வுகளை துடிப்போடு வைத்துக் கொண்டதற்கிடையே வாழ்வதற்கு பெரும் போராட்டத்தை சந்தித்தார். அப்போது தொழில் நுட்ப ரோபோக்கள் மீது நாட்டம் ஏற்பட்டது. நண்பர்கள் மூலம் கிடைத்த திடீர் வாய்ப்பாக வாஜித் அஹமதாபாதில் உள்ள என்ஐஎஃப் நிறுவனத்தில் (NIF Institute) வேலை பார்க்கத் தொடங்கினார்.

 


ஆட்டோ உதிரி பாகங்கள் கொண்டு வாஜித் கான் கலை நயம் 
ஆட்டோ உதிரி பாகங்கள் கொண்டு வாஜித் கான் கலை நயம் 
"1998 ஆம் ஆண்டு நான் ஒரு தெர்மாகோலினை எடுத்துக் கொண்டு இரும்பு ஆணிகளை பயன்படுத்தி ஒரு உருவ படத்தினை உருவாக்க முயற்சி செய்தேன். நிறைய கற்றுக்கொள்ளவும் செய்முறைகளை மேற்கொள்ள எண்ணிய நான், 2004 ஆம் ஆண்டு இந்தூர் நகரத்திற்கு வந்தேன். தற்போது எனக்கு இந்தூர் மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களிலும் அடித்தளம் உள்ளது" என்கிறார் வாஜித். 

2005 ஆம் ஆண்டு, இரும்பு ஆணிகளை கொண்டு மகாத்மா காந்தி உருவப் படத்தை செய்து முடித்தார். இதை வாஜித், மூன்று ஆண்டுகள் கடின உழைப்பால் 1.25 லட்சம் இரும்பு ஆணிகளை கொண்டு உருவாக்கினார். அதே ஆண்டு, உலகின் முதல் 3டி (3D)எனும் முப்பரிமாண ஓவியம் என கருதப்படும் ஓவியத்தை அக்ரலிக் வண்ணங்கள் கொண்டு கேன்வாஸ் எனும் கித்தான் துணியில் வாஜித் உருவாக்கினார். ஆனால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவரின் முதல் உருவப் படத்தை ரூ. 20 லட்சத்திற்கு விற்ற போது தான் அங்கீகாரமே கிடைத்தது. 

"என் மனதில் நீங்கா இடம்பிடித்த காந்திஜியின் உருவப் படத்தினை ரூ.50 லட்சத்திற்கு விலை கேட்டார்கள். ஆனால் அதை விற்க வில்லை" என மேலும் கூறினார். 

அன்னை தெரசா, இயேசு நாதர், திருபாய் அம்பானி உள்ளிட்ட எண்ணற்ற பிரபலங்களின் இரும்பு ஆணிகள் கொண்டு உருவப் படத்தினை செய்துள்ளார். சிறப்பு தளத்தில் அதாவது இறக்குமதி செய்யப்பட்ட தாளில் பென்சில் கொண்டு வெளிக் கோடு வரைந்து கொள்வார். இது உருவப் படத்தின் ஆரம்ப புள்ளி மற்றும் இறுதி புள்ளிகளை குறிக்க உதவுகிறது. "நான், உருவப் படத்தை தாளில் முன்கூட்டியே வரைவதில்லை. என் மனதில் முன்னதாகவே பதிந்த சித்திரத்தை அப்படியே பின் பற்றுவேன்", என விவரிக்கிறார் வாஜித்.

ஆனால், இரும்பு ஆணிகளுடன் மட்டும் அவர் நின்றுவிட வில்லை. வாஜித் தனது கைவண்ணத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த நிலத் தோற்ற (Portrait) மற்றும் உருவப் படங்களை, ஆட்டோ உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருங்கற்கள் கொண்டு உருவாக்கினார். "பெண் குழந்தை காப்போம்" எனுன் இயக்கத்திற்காக அவர் உருவாக்கிய அழும் இளம் பெண்ணின் உருவ கைவினையானது பெரும்பாலோரை கவர்ந்தது.

வாஜித் கானின் புல்லட் கைவினை வேலைப்பாடு
வாஜித் கானின் புல்லட் கைவினை வேலைப்பாடு

"புல்லட் என்பது வன்முறையின் அடையாளம். ஆனால், காந்தியடிகள் நமக்கு அகிம்சையை கற்றுத்தந்தார். அகிம்சை தத்துவத்தை வெளிப்படுத்த இதை விட சிறந்ததொரு முரண்பாடான விளக்கம் இருக்க முடியாது" என்கிறார் வாஜித். அவரின் எல்லா படைப்புகளிலும் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். ஏனென்றால் கருப்பு நிறம் என்பது வலிமையை குறிப்பதாக வாஜித் கருதுகிறார்.

கலைஞர்கள் நலனுக்காக அங்கீகாரத்தை பயன்படுத்துதல்

வாஜித் தனது இரும்பு ஆணிகள் கொண்டு செய்த கலைப்படைப்பினை 2009 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றார். கின்னிஸ் சாதனை தவிர, கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் (Golden Book of World Records), லிம்கா உலக சாதனை புத்தகம், இந்திய உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய உலக சாதனை புத்தகம் ஆகியவற்றில் அவர் இடம் பெற்றுள்ளார். மேலும் அவர், தனது 140 கண்டுபிடிப்புகள் மற்றும் கலை வேலைப்பாடுகளுக்காக காப்புரிமை பெற முனைந்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி ஐஐஎம் - இந்தூர் ரில் விரிவுரை நிகழ்த்த வாஜித்தை அழைத்தனர். அதில் அவர் மேலாண்மையில் கண்டுபிடிப்புகள் குறித்து உரையாற்றினார்.

கலைஞர் வாஜித் கான்
கலைஞர் வாஜித் கான்
"ஆனால் எனக்கு நன்றாக தெரியும் காசும் புகழும் நிலைத்து நிற்காதென்று. 'உனக்காக வாழாமல், பிறருக்காக வாழ்' என்று புனித குரான் கூறுகிறது. இக் கலையில், மாற்று திறனாளிகள் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை ஈடுபடுத்த முயற்சி செய்துவருகிறேன். எனக்கு இணையாக எனது மனைவி மரியமும் இக்கலையில் ஈடுபாடு இருப்பதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. இருவரும் இணைந்து மும்பை, இந்தூர் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் பயிலரங்குகளை நடத்தி சிறந்த கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம்", என்கிறார்.

கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள 2020 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான (2022 FIFA World Cup) தனித்தன்மை வாய்ந்த கலை சிற்பத்தை வடிவமைக்கும் பொறுப்பினை வாஜித் கான்னிடம் வழங்கியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், "எனது புகழை கொண்டு நலிந்த கலைஞர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு உலகில் அங்கீகாரம் பெரும் வகையில் உதவி செய்வேன். எனக்கு அரசு சாரா அமைப்பினை தொடங்க விருப்பமில்லை. நான் கலைஞர்களுக்கு அமைதியான முறையில் உதவி செய்து அவர்களை சுய சார்புடையவர்களாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்".

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஹாலிவுட் திரைபடத்தில் வாஜித் படைப்புகள் தோன்றினாலும், அவர் தொடர்ந்து ஆராய்வதிலும் கலையினை கற்பித்தல் ஆகியவற்றையே விரும்புகிறார். 2016 ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.

காண்க: வாஜித் கான் தனிச்சிறப்பு வாய்ந்த கலையினை எவ்வாறு உருவாக்குகிறார்...

இணையதள முகவரி

ஆக்கம்: முக்தி மசி | தமிழில்: விஷ்ணு ராம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மார்த்தாண்டம் முதல் லண்டன் வரை: கின்னஸ் சாதனை ஓவியர் ராஜசேகரனின் கதை!

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அவள் ஒரு தேவதை என்று!