ஆன்லைனில் பொருட்களை வாங்க தென்னிந்திய கிராம மக்களுக்கு உதவும் 'ஸ்டோர்கிங்'

0

கர்நாடக மாநிலத்தின் உள்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிக்கு மஞ்சள் நிற ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து சென்ற போது அடுத்த சில நாட்களில் மேலும் 114 சக மாணவர்கள் அதே போன்ற ஷூவை அணிந்து வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.

இது எப்படி நிகழந்தது? "நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் எப்படி இந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை வாங்கினர்? ஃபிளிப்கார்ட், மிந்தரா அல்லது ஜபாங் மூலமா?

இல்லை என்பது தான் இந்த கேள்விக்கான பதில். சமீபத்திய ஆய்வு ஒன்று 91 சதவீத கிராமப்புற வாடிக்கையாளர்கள் இணைய முகவரியை ஆங்கிலத்தில் ஊள்ளீடு செய்ய முடியாதவர்களாக இருப்பதாக தெரிவிக்கிறது. எனில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது பற்றி கேட்கவே வேண்டாம். உண்மையில், கன்னட மொழி மூலம் ஆர்டர் செய்ய உதவும் இ-காமர்ஸ் இணையதளம் மூலமே இது சாத்தியமாகி இருக்கிறது.

பெங்களூருவைச்சேர்ந்த இ-காமர்ஸ் ஸ்டார்ட் அப்பான "ஸ்டோர் கிங்" (StoreKing) தான் உள்ளூர் மொழிகளின் ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு இப்படி லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை சாத்தியமாக்கியுள்ளது.

"நாம் இதை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் சமீபத்தில் நடத்திய சர்வே இதை தான் உணர்த்துகிறது” என்கிறார் ஸ்டோர்கிங் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீதர் குண்டய்யா(Sridhar Gundaiah ) .

பின்னணி

இந்த பெங்களூரு இளைஞர் தொழில்முன்முயற்சிக்கு புதியவர் அல்ல. லண்டனின் கிரீன்விச் பல்கலைகழகத்தில் ஐடி அண்டு இ-காமர்ஸ் முடித்தப்பிறகு 2007 ல் யூலோப் (Yulop ) ஸ்டார்ட் அப்பை துவக்கினார். வாடிக்கையாளர்களுக்கு இருப்பிடம் சார்ந்த சேவை வழங்க முற்பட்ட முதல் இந்திய நிறுவனமாக இது அறியப்படுகிறது.

2009 ல் அவர் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அடிமட்ட அளவில் பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காணவேண்டும் என அவர் உணர்ந்தார். இதுவே கிராமப்புற இந்தியாவின் தொழில்நுட்ப பற்றாக்குறையை தீர்ப்பதில் கவனம் செலுத்துவதாக மாறியது.

யுரேக்கா கணம்

"ஒரு முறை சீனா சென்றிருந்த போது சீனர்கள் அனைவரும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அந்நாட்டு மொழியை பயன்படுத்துவதை பார்த்தேன். இது எனக்கு ஊக்கமளித்தது. எல்லாவற்றிலும் உள்ளூர் வாசனை வீசியது. டெக்ஸ்டின்ங், மெயில், இ-காம்ர்ஸ் என எல்லாவற்றிலும் உள்ளூர் தன்மை இருந்தது” என்று ஸ்டோர்கிங்கிற்கான எண்ணம் உண்டான தருணம் பற்றி ஸ்ரீதர் விவரிக்கிறார். 2012 ல் ஸ்டோர் கிங் பிறந்தது.

செயல்படும் விதம்

ஸ்டோர்கிங் 50,500 க்கும் மேற்பட்ட பொருட்களை கொண்ட இ-காமர்ஸ் தளமாகும். முக்கிய வேறுபாடு என்ன என்றால் இதன் பயனர் இடைமுகம் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் அமைந்திருப்பது தான். சமீபத்தில் கோவா மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.

"கிராம பகுதி வீடுகளுக்கு சரியான முகவரி கிடையாது. பொதுவாக பெயர் விவரங்களை மட்டுமே கொண்டு தபால்காரர் கடிதங்களை கொண்டு சேர்க்கிறார். எனவே கிராம பகுதிகளில் முகவரி முறை சரியாக செயல்படாது என அறிந்து இதற்காக என்று தனிப்பட்ட முறையை உருவாக்கினோம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் குண்டய்யா
ஸ்ரீதர் குண்டய்யா

இந்த நிறுவனம், கிராமங்களில் உள்ள மொபைல் விற்பனை அல்லது மளிகை கடை போன்ற ஒரு கடையை தொடர்பு கொள்கிறது. பின்னர் ஸ்டோர்கிங்கின் டேப்லெட் அல்லது கியோஸ்க் மையத்தை அங்கு நிறுவ ஒப்புக்கொள்ள வைக்கிறது. இந்த சாதனத்தை நிறுவ கடைகளுக்கு 10,000 க்கும் குறைவாகவே ஆகிறது.

"கிராம மக்கள் மத்தியில் நம்பிக்கை மிக்க கடைக்காரரை தேர்வு செய்கிறோம். மக்கள் அவரை நாடி வந்து தாங்கள் வாங்க விரும்பும் பொருளுக்காக அவரிடம் முன்கூட்டியே பணம் செலுத்த தயராக இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

பின்னர் கடைக்காரர் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உதவுகிறார். ஆர்டர் ஏற்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் அவரிடம் பணம் செலுத்துகிறார். அவருக்கு உள்ளூர் மொழியில் ஸ்டோர்கிங்கிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.

"வாடிக்கையாளரை அடையாளம் காண செல்போன் எண் மட்டுமே தேவை. அவரது போனுக்கு எல்லா விவரங்களையும் அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் ஸ்ரீதர்.

பெங்களூருவில் வேர்ஹவுஸ் கொண்டுள்ள ஸ்டோர்கிங் 48 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளிக்கிறது. நுகர்வோர் பொருள் விநியோக அமைப்பை இதற்காக பயன்படுத்திக்கொள்கிறது. போட்டி இல்லாத நிலையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யாமல் இருக்கும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அதிக தள்ளுபடி அளிக்கும் தேவை இல்லை. மேலும் கடைக்காரர்கள் 6-10 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். இது எல்லோருக்கும் சாதகமானது என்கிறார் ஸ்ரீதர்.

வரவேற்பு

ஸ்டோர்கிங் தென்னிந்தியா முழுவதும் 4,500 விற்பனை மையங்களை பெற்றுள்ளது. மாதந்தோறும் 75,000 ஆர்டர்களை பட்டுவாடா செய்கிறது. ரூ.500 குறைந்தபட்ச ஆர்டர் எனும் வரையறை இருந்தாலும் சராசரி ஆர்டர் ரூ.1,200 எனும் அளவில் உள்ளது.

நிறுவனம் லக்சம்பர்கை சேர்ந்த விசி நிறுவனமான மேன்க்ரோ கேபிடல் பாடனர்சிடம் இருந்து பல சுற்றுகளில் 6 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. 2014 டிசம்பரில் ஒரு சுற்று நிதி திரட்டியது.

எதிர்கால திட்டம்

அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.”அடுத்த சில வருடங்களில் 500 மில்லியன் மக்களை சென்றடைய விரும்புகிறேன். ஏனெனில் ஃபிளிப்கார்ட் அல்லது அமேசானால் எங்களைப்போல உள்ளுக்குள் இருக்கும் பகுதிகளுக்கு சென்றடைய முடியாது என எனக்குத்தெரியும் “ என்கிறார் ஸ்ரீதர்.

இணையதள முகவரி: StoreKing