டீனேஜ்களை குறி வைக்கும் சாத்தான் ‘மோமோ சேலஞ்ச்’- உஷாரா இருங்க...!

இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் கொடூரனான மோமோ சேலஞ்ச் தமிழகத்திலும் காலெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பரவும் இந்த உயிர்க்கொல்லி விளையாட்டில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

0

பருவமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு உதவ பல வகைகளில் சமூக வலைதளங்கள் உதவியாக இருக்கின்றன. அதேபோல், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும் வாட்ஸ் அப், முகநூல் ஆகியவை பயன்படுகின்றன. ஆனால், இந்த செயலிகள் உயிர் கொல்லும் காரணிகளாக மாறவும் செய்யும். 

அப்படித்தான், ப்ளூவேல் என்ற ஆபத்தான விளையாட்டு கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் 150 பேரின் உயிரை பறித்தது. தமிழகத்திலும் ப்ளூவேலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ப்ளூவேல் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ரத்தக்காட்டேரி விளையட்டு இணையத்தில் உலா வருகிறது. அந்த விளையாட்டின் பெயர் மோமோ சேலஞ்ச் என அழைக்கப்படுகிறது.

தொடக்கத்தில் உங்களுக்கு ஹாய் சொல்லி உங்களது நண்பரைபோல் அணுகும் மோமோ பேசிக்கொண்டே செல்போனை ஹேக் செய்யும். பிறகு பழகிக்கொன்றுவிடும் என போலீசார் எச்சரிக்கின்றனர். 

மோமோ சேலஞ்ச் - பிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் உலகம் முழுவதும் தற்போது வாட்ஸ் அப் வழியாக பிரபலமாகி வருகிறது.

எப்படி தொடங்கியது?

அர்ஜென்டினாவில் 12 வயதுடைய சிறுமியின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் அவளது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் மோமோ சேலஞ்ச் கொடூரம் வெளிச்சத்துக்குவந்தது. வாட்ஸ் அப் மூலம் அச்சிறுமியிடம் பேசி செல்போனை ஹேக் செய்து, பின்னர் பல்வேறு சவால்களை கொடுத்து இறுதியாக தற்கொலை செய்ய தூண்டியுள்ளது அந்த விளையாட்டு. உளவியல் ரீதீயாக தாக்கத்தை ஏற்படுத்தி 18 வயதுக்கு குறைவானவர்களை குறிவைக்கிறது மோமோ. போலீசார் விசாரணையில் மோமோ சேலஞ்ச் விளையாட்டை யார் தொடங்கியது என தெரியவில்லை. ஆனால், பின்னணியில் இருக்கும் ஒரு நபர் செல்போன் எண் மாற்றிக்கொண்டே இருப்பது தெரியவந்துள்ளது.

மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது. முதலில் உங்களது செல்போனில் உள்ள புகைப்படங்கள், தரவுகளை ஹேக் செய்து எடுத்துக்கொள்ளும் மோமோ பின்னர் நட்பு வலையை வீசும். மோமோ சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும். அதற்கும் அசையவில்லை என்றால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படும் என மிரட்டல் வெளியாகும் என போலீசார் கூறியுள்ளனர்.

மோமோ சேலஞ்ச் விளையாட்டு அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, நேபாளம், இந்தியா என உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே காவல்துறையினர் மோமோ சவாலை குழந்தைகள் மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் மோமோ சேலஞ்ச் விளையாட்டை கட்டுப்படுத்தமுடியவில்லை.

மோமோவின் கொடூரமான முகம் எங்கிருந்து வந்தது?

2016-ல் ஜப்பான் டோக்கியோ நகரத்தில் உள்ள வெண்ணிலா கலைக்கூடத்தில் நடைபெற்ற கண்காட்சியில் அருவருப்பான முகம் கொண்ட சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சாத்தானின் உருவம் என சொல்லப்பட்ட அந்த சிலை பறவையின் உடல், கால்களை கொண்டிருந்தது. அந்த சிலையை புகைப்படம் எடுத்தவர்கள் உலகம் முழுவதும் பரப்பினர். அந்த புகைப்படமே தற்போது மோமோவின் முகமாக காட்சியளிக்கிறது.

மோமோவின் உரிமையாளர் யார்?

மோமோ சேலஞ்ச் விளையாட்டு செயலி வடிவில்லை இல்லை என்பதால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. அதேபோல், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மோமோவுக்கென தனிப்பக்கங்களும் இல்லை. இதனால், யார் இந்த விளையாட்டை பரப்புகிறார்கள் என்பதையும் கண்டறியமுடியவில்லை என்கிறது காவல்துறை. ஆனால், மோமோவின் கொடூர முகத்திற்கு பின்னால் இருப்பவர்களை உலகம் முழுவதும் இருக்கும் போலீசார் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். 

மோமோ நிச்சயம் ரோபோவால் நடத்தப்படும் விளையாட்டு அல்ல; மனநிலை பாதிக்கப்பட்டு, உலகத்தை வெறுத்தவர்களால் நடத்தப்படும் அபாயகரமான விளையாட்டு என்கிறது காவல்துறை.

தமிழகத்தில் பரவும் மோமோ கொடூரம்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தைச் சேர்ந்த பலரது வாட்ஸ் அப் மூலம் மோமோ சேலஞ்ச் நட்பு வலையை விரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஹாய் ஐயம் மோமோ.., உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது... இப்படி தொடங்கும் உரையாடலில் செல்போன் பிராண்டு பெயர், பயன்படுத்துபவரின் பெயரை மோமோ சேலஞ்ச் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், இது தொடர்பாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என தமிழக காவல்துறை கூறியுள்ளது.

படஉதவி : டைம்ஸ் நவ்
படஉதவி : டைம்ஸ் நவ்

என்ன செய்யவேண்டும்?

மோமோ சவால் வாட்ஸ்அப் மூலம் அதிகம் பரவுவதால், முன்பின் அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் செய்திகள் பரிமாறிக் கொள்ளவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதின்பருவத்தைச் சேர்ந்தவர்களிடம் ஸ்மார்ட்போன்களை கொடுக்கக்கூடாது. செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தவோ, கேம்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்கிறது காவல்துறை. 

இதில் பெற்றோர்களின் பங்கே அதிகம். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். தவறினால், மோமோ சவால்கள் உங்களின் குழந்தைகளை தற்கொலை பாதையை நோக்கி அழைத்து செல்லும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories

Stories by Priyadarshini