சக்கர நாற்காலியில் வெற்றியை எட்டிப் பிடித்த சிவபிரசாத்!

0

சிவப்பிரசாத்துக்கு அப்போது இரண்டு வயது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயது. ஆனால் அவரது இரண்டு கால்களையும் போலியோ நோய் தாக்கியது. அப்போதிருந்து அவர் தனது நடமாட்டத்திற்கு ஊன்று கோலையும் செயற்கைக் கால்களையும்தான் நம்பி இருக்க வேண்டியிருந்தது. 2015 செப்டம்பரில் பாங்காங்கில் நடந்த சர்வதேச சர்க்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார் சிவப்பிரசாத். சர்க்கர நாற்காலி டென்னிஸ் போட்டியாளர்கள் மத்தியில் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்பதுதான் அவரது கனவு. 

விளையாட்டில் சந்தோஷம்

சின்ன வயதில் மற்ற குழந்தைகளைப் போலவே சிவப்பிரசாத்தும் கிரிக்கெட் பிரியராகத்தான் இருந்தார். கிரிக்கெட் விளையாட்டில் நான் எப்போதும் எனது டீமின் தலைவராக இருந்து எப்படி விளையாட வேண்டும் என அவர்களை வழிநடத்துவேன் என்று அதை நினைவு கூர்கிறார் அவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் டென்னிஸ் அவருக்கு அறிமுகமானது. இந்திய சர்க்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளின் செயலாளர் சீதாராம் தான் அவருக்கு சர்க்கர நாற்காலி டென்னிஸ் போட்டியை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு டென்னிசில் நுழைந்த அவர் அதில் இருந்து பின்வாங்கவே இல்லை.

எளிதானதோ விரைவானதோ அல்ல

லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஷா போன்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுபவர்கள், அவர்களின் தோல்வியை ஆராய்ப்பவர்கள், அதே அளவு அங்கீகாரத்தை சிவாவின் சாதனைகளுக்குக் கொடுப்பதில்லை. 

சிவாவின் சாதனைகள்

• பாங்காங்க் கோப்பை – சர்க்கர நாற்காலி டென்னிஸ், இன்டர்நேஷனல் ஐடிஎப் ப்யூச்சர் சீரிஸ் - ஒற்றையர் பிரிவு, செப்.2015, கன்சோலேசன் சுற்றில் ரன்னர்.

• ஆர்எம்ஐசி ஆர்டிஎன். கிட்டு சர்க்கர நாற்காலி டென்னிஸ் டோர்னமென்ட் – ஒற்றையர், நேஷனல்ஸ், குவார்ட்டர் பைனலிஸ்ட்.

• ஆர்எம்ஐசி ஆர்டிஎன். கிட்டு சர்க்கர நாற்காலி டென்னிஸ் டோர்னமென்ட் – இரட்டையர், நேஷனல்ஸ், ரன்னர், பிப்.2015.

• ஆர்ஒய்டிஎச்எம் தேசிய சர்க்கர நாற்காலி டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2014, இரட்டையர், நேஷனல்ஸ், செமி பைனலிஸ்ட், டிச.2014.

• ஆர்ஒய்டிஎச்எம் தேசிய சர்க்கரநாற்காலி டென்னிஸ் சாம்பியன்ஷிப் – 2014, ஒற்றையர், நேஷனல்ஸ், குவார்ட்டர் பைனலிஸ்ட், டிச.2014.

சமீபத்தில் சிவாவின் தந்தை மரணமடைந்தார். அதிலிருந்து குடும்பச் செலவை சிவாதான் கவனித்துக் கொள்கிறார். அவரும் அவரது தாயாரும்தான் குடும்பம். எக்சிக்யூட்டிவ் செர்ச் நிறுவனம் ஒன்றில் செர்ச் கன்சல்ட்டன்ட் ஆக பணியாற்றுகிறார். கேஎஸ்எல்டிஏ எனப்படும் கர்நாடக மாநில டென்னிஸ் அசோசியேசனில் வார இறுதி நாட்களில் தானாகப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார் சிவா. அவருக்கென்று பயிற்சியாளர் யாரும் இல்லை. 

பிறகு எப்படித்தான் அந்த விளையாட்டைக் கற்றுக் கொள்கிறார். விளையாட்டு நுணுக்கங்களில் பயிற்சி திட்டங்களில் யார்தான் அவருக்கு வழிகாட்டி? 

“ஸ்டீபன் ஹோடெட் (சர்க்கர நாற்காலி டென்னிஸ் வீரர்களில் நம்பர் ஒன்) அல்லது டேவிட் ஹால்(சர்க்கர நாற்காலி டென்னிசில் பிரபலமானவர்) போன்ற விளையாட்டு வீரர்களின் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்துத்தான் இதுவரையில் கற்றுக் கொண்டிருக்கிறேன். சர்க்கர நாற்காலி டென்னிசில் முன்னாள் நம்பர் ஒன் விளையாட்டு வீரர் சிங்கோ குனிடா எனக்குப் பிடித்தமானவர். அவர்தான் எனக்கு முன்மாதிரி. நான் எப்போதுமே அவரைத்தான் காப்பி அடித்து விளையாட முயற்சிக்கிறேன்.” என்று கூறுகிறார் சிவா.

பாங்காங் அனுபவம் கண்களைத் திறந்தது

பாங்காங் போட்டியில் பங்கேற்றது சிவாவுக்கு முற்றிலும் புதிய அறிவு வெளிச்சத்தைக் கொடுத்தது. “அங்கு சர்க்கர நாற்காலி டென்னிசில் அவர்களுக்கு இருந்த பேரார்வத்தையும் போட்டியின் மீதிருந்த தாகத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன்” என்கிறார் சிவா. அந்த விளையாட்டில் அங்கு அவர் சர்வதேசத் தரத்தைக் கண்டார். மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய விளையாட்டுக் குழுவினரோடு அவர் கலந்துரையாடிய போது இந்திய சர்க்கர நாற்காலி டென்னிஸ் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை அவரால் உணர முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் பிரதான டென்னிசுக்கு இணையாக பாரா அத்லெட்டுகளும் வசதி வாய்ப்புகளைப் பெற முடிகிறது என்று சிவா சொன்னது நமக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அதிகம் செலவழிக்கும் நாடு ஆஸ்திரேலியா.

பாங்காங்க்கில் பிற விளையாட்டு வீரர்களுடன்
பாங்காங்க்கில் பிற விளையாட்டு வீரர்களுடன்

மலேசிய விளையாட்டு வீரர்களுக்கு நல்ல தரமான பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். பயிற்சி பணியாளர்கள் இருக்கின்றனர். அந்தப் பணியாளர்கள், எதிர் அணியினரின் விளையாட்டுகளை வீடியோ எடுத்து வைத்து அவர்களின் பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்வார்கள். இதை விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் கொண்டு செல்வார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களும் சர்க்கர நாற்காலியை கையாள்வதில் தேர்ந்த நிபுணர்களாக இருந்தனர். அது அவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தியது. இது தவிர மலேசிய விளையாட்டு வீரர்களுக்கு 500 மலேசிய ரிங்கிட்டுகள் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

பிற விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடுகையில் சிவா மலேசிய போட்டியில் பங்கேற்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. மற்ற விளையாட்டு வீரர்களெல்லாம் தங்களது விளையாட்டில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் தீவிரமாக இருந்தனர். ஆனால் சிவா மலேசியாவுக்குப் போவதே கவலையாக இருந்தது. அவரது விமானப் பயணத்திற்குரிய பணத்தை அவரே திரட்ட வேண்டியிருந்தது. எப்படியோ தனது நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப், சில நண்பர்களின் நிதி உதவி ஆகிய உதவிகளால் அவர் பாங்காங்க் சென்றார். 

நமது விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படுவது என்ன?

பிரதான விளையாட்டுகள் அல்லாமல் இது போன்ற துணை விளையாட்டுகளுக்கு எந்த உதவியும் இல்லை. இது என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களின் ஆர்வத்தைக் குறைத்து இந்த விளையாட்டை விட்டே வெளியேறும் படி நிர்ப்பந்திக்கிறது. இப்போது வரையில் நான் டென்னிசைக் கைவிடவில்லை. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இது நீடிக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை

என தனது கவலையைப் பகிர்ந்து கொள்கிறார் சிவா.

மலேசியாவிலிருந்து சிவா திரும்பியதும் அவரது விமான பயணச் சீட்டுக்கான தொகை 30 ஆயிரத்தை அரசு திருப்பிக் கொடுத்தது. இதைப் பற்றி சிவாவின் கருத்து இது:

அரசு 30 ஆயிரம் ரூபாய் வரையில்தான் உதவித் தொகை வழங்குகிறது. இந்தத் தொகையில் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் போட்டிகளில் எல்லாம் எங்களால் பங்கேற்க முடியாது. தெற்காசிய நாடுகளுக்கு மட்டுமே எங்களால் செல்ல முடியும்.

சிவாவைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் உதவிகள் என்ன என அவர் பட்டியலிடுகிறார். அவற்றில் ஒரு சில உதவிகளும் உபகரணங்களும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை:

• அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷன் (AITA - All India Tennis Association) அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவி (SAI - Sport Authority of India)

• தரமான பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி பணியாளர்கள்

• தினந்தோறும் பயிற்சி மேற்கொள்வதற்கு டென்னிஸ் கோர்ட் மற்றும் உடற் பயிற்சிக் கூட வசதிகள்

• டென்னிஸ் போட்டிக்கென்ற மேம்படுத்தப்பட்ட சர்க்கர நாற்காலிகள். (குயிக்கி மேச் பாயின்ட் வீல்சேர் எனப்படும் தனிச்சிறப்பான சர்க்கர நாற்காலிகளை உற்பத்தி செய்வதற்கு நிதி திரட்டுவதற்கான பிரச்சார இயக்கத்தை சிவா நடத்துகிறார். நன்கொடை அளிக்க

• வெளிநாடுகளில் நடைபெறும் டோனமர்ன்ட்டுகளில் பங்கேற்க நிதி உதவி

வீல்சேர் டென்னிசை கார்ப்பரேட் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொண்டு, அதற்கு ஆதரவு தெரிவித்தால், டென்னிஸ் வளர்ச்சிக்கு அது பேருதவியாக இருக்கும் என்கிறார் சிவா.

ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டத்திற்கிடையில், பெங்களூருவில் 2016 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் நேஷனல்ஸ் போட்டிக்குத் தயாரானார் சிவா. அடுத்து 2016 அக்டோபரில் நடைபெறும் பாங்காங் மற்றும் மலேசிய கோப்பை போட்டிக்கு செல்ல திட்டமிடுகிறார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு விருதைப் பெற்றுத் தர வேண்டும் என்பது சிவாவின் நெடுநாள் கனவு.

பாராப்லெஜிக் அத்லெட்டுகளை உருவாக்குவதற்கு தேவையான நிதி திரட்ட வேண்டும். சின்ன வயதில் இருந்தே விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பராமரிக்க வேண்டும். இதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது சிவாவின் எதிர்காலத் திட்டம். “சொந்தக் காலில் நிற்க முடியும், நாமும் விளையாட முடியும் பங்கேற்க முடியும் என்ற விழிப்புணர்வை உருவாக்குவதும் விளையாட்டுத் துறையிலும் அதன்மூலம் தேசத்திலும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வரும்” என்கிறார் சிவா.

ஆக்கம்: ஸ்னிக்டா சின்ஹா | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பக்கவாத குறைபாடுடன் பிறந்த மதுமிதா ஸ்னாப்டீலின் மனிதவளத் துறை இணை இயக்குனர் ஆன கதை! 

தன் குறையை மாற்றியமைத்து வெற்றி கண்ட மாதவி லதாவின் பயணம்!