வங்காளப் பஞ்சம்- லாபவெறி பிடித்த பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மிருகத்தனம்!

0
நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் காட்டுமிராண்டிகள். அவர்களின் மதம் காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் முயல்களைப் போல வதவதவென இனப்பெருக்கம் செய்வதால்தான் பஞ்சம் வருகிறது.   - வின்ஸ்டன் சர்ச்சில்

இந்தியாவிற்கென, இந்திய மக்களுக்கென வரும்போது பிரிட்டிஷ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இரக்கமற்றதாக மாறிவிடும். அவர்களின் ஆட்சிக்கு கீழ் இந்தியா பல பஞ்சங்களில் சிக்கித் தவித்தது. அவற்றில் மிக மோசமானது வங்காளப் பஞ்சம். 1770ல் முதன்முதலாக அந்த மக்களை வதைக்கத் தொடங்கிய இந்த பஞ்சம் பின் 1783, 1866, 1873, 1892, 1897, இறுதியாக 1943-44 என வரிசையாக வாட்டி சித்ரவதை செய்தது. அதற்கு முன்பு வரை, இப்படியான பஞ்சங்கள் தோன்றியபோது ஆட்சியாளர்கள் துரிதமாக செயல்பட்டு பெரிய அசம்பாவிதங்களை தவிர்த்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்ததே வேறு. வெறிகொண்டு இந்திய இயற்கை வளங்களை வேட்டையாடிய பிரிட்டிஷ் அரசு, பருவமழைகளை பொய்க்க வைத்த இயற்கையின் வஞ்சனை போன்ற காரணங்களால் இந்தியா அடுத்தடுத்து பஞ்சங்களை சந்தித்தது. ஆனால் இந்த பலத்த சேதங்களை சரி செய்ய ஒருமுறை கூட அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக, அடிக்கடி பஞ்சம் வருவதால் வரிகளை சரியாக வசூலிக்க முடியவில்லையே என்ற கடுப்புதான் அவர்களிடம் இருந்தது.

1770ல் தோன்றிய முதல் பஞ்சம் பயமுறுத்துவதாய் இருந்தது. பஞ்சத்திற்கான முதல் அறிகுறி 1769ல் தொடங்கியது. பின் மெல்ல தீவிரமடைந்து 1773 வரை நீடித்தது. இந்த பஞ்சம் பத்து மில்லியன் மக்களை பலி வாங்கியது. இரண்டாம் உலகப்போரில் பலியான யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகம். வங்காளத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவையே கலங்கடித்த பிளேக் நோயைவிட இந்த பஞ்சம் கொடுமையானதாக இருந்தது என தன் “The Unseen World” புத்தகத்தில் கூறுகிறார் ஜான் பிஸ்க். முகலாய ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைச்சல் லாபத்தில் 15 சதவீதத்தை வரியாக கட்டி வந்தார்கள். இது ஆள்பவர்களின் கஜானாவை நிறைத்ததோடு மட்டுமில்லாமல் வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் இருந்தது. 1765ல் அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் வரி வசூலிக்கும் உரிமை முகலாய மன்னர் இரண்டாம் ஆலம் ஷாவிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது. ஒரே இரவில் வரி 50 சதவீதமாக உயர்ந்தது. வரி உரிமை கைமாறியது கூட அந்த பரிதாப குடியானவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் இன்னும் மன்னருக்கு வரி கட்டுவதாக நினைத்துத் தான் கட்டினார்கள்.

வறட்சி இந்திய விவசாயிகளுக்கு பழக்கமான ஒன்றாய் மாறிக் கொண்டிருந்தது. இதனால்தான் அவர்கள் செலுத்தும் வரி அரசுக்கு மட்டுமின்றி அவர்களுக்குமே அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் வரி அதிகப்படுத்தப்பட்டபின் அவர்களால் முன்பு போல் வரி செலுத்த முடியவில்லை. இதனால் பஞ்ச காலங்களில் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. 1769ல் மழை பொய்க்க, கடும் பஞ்சத்திற்கான அறிகுறி தோன்றியது. இன்றைய மேற்கு வங்காளம், பீகார், ஒரிஸா, ஜார்க்கண்ட், பங்களாதேஷ் ஆகிய இடங்கள் இந்த பஞ்சத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிக மோசமாக பாதிக்கப்பட்டது வங்காளம். பிர்பம், முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் நினைத்துப் பார்க்க முடியாத சேதம். ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்புத் தேடி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால் போன இடமெல்லாம் பஞ்சம் நிலவியதால் அவர்களுக்கு மரணமே முடிவானது. சொந்த ஊரிலேயே இருந்தவர்களுக்கும் இதே முடிவுதான். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உரிமை கோர யாருமின்றி அனாதையாயின. விளைவு அந்த இடங்கள் எல்லாம் மெல்ல மெல்ல காட்டுப் பகுதிகளாயின. திர்ஹுட், சம்பாரன், பெட்டையா போன்ற இடங்கள் இப்படி உருவானவைதான்.

இதற்கு முன்னால்வரை பஞ்சம் ஏற்பட்டால், உடனே இந்திய ஆட்சியாளர்கள் வரியைக் குறைத்து, விளைச்சலை மீட்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் துரிதமாக எடுப்பார்கள். ஆனால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பஞ்சம் குறித்த எச்சரிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். 1770ல் தொடங்கிய வறட்சிக்கு 1771ல் இருந்து மரணங்கள் நிகழத் தொடங்கின. இந்த மரணங்களால் தங்களுக்கு நிகழ்ந்த இழப்புகளை சரிக்கட்ட, வரியை 60 சதவீதமாக உயர்த்தியது இரக்கமில்லா கிழக்கிந்திய கம்பெனி. பஞ்சத்தில் தாக்குப்பிடித்தவர்கள் கூட இந்த வரிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தார்கள். இவர்களின் ரத்தத்தை பலியாகக் கொண்டு பிரிட்டிஷ் கஜானா நிரம்பி வழிந்தது.

முகலாயர்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ் நிர்வாகம் விவசாயிகளை பணப்பயிர்களை விளைவிக்க சொல்லிக் கட்டாயப்படுத்தியது. அவற்றை ஏற்றுமதி செய்து லாபம் பார்ப்பது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் நோக்கம். இதனால் உணவுப்பயிர்களை விடுத்து பணப்பயிர்களை விளைவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது பஞ்ச காலத்தில் விளைவுகளை மேலும் மோசமாக்கியது. வழக்கமான வறட்சியை பஞ்சமாக மாற்றியது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் இந்த லாபவெறிதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக அவர்கள் மேல் வரிச்சுமையை மேலும் மேலும் ஏற்றியது பிரிட்டிஷ் நிர்வாகம். விளைவு முன்பு எப்போதும் இல்லாத லாபத்தை கண்டது கிழக்கிந்திய கம்பெனி.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான காரணம் தெரியாவிட்டாலும், இந்த பஞ்சத்திற்கும் இதைத் தொடர்ந்து வந்த பஞ்சங்களுக்கும் அளவில்லா லாபவெறியே காரணம். 1771 கொடூரத்திற்குப் பிறகு மிக மோசமாக மக்களை பாதித்தது 1943ல் வந்த பஞ்சம்தான். மூன்று மில்லியன் மக்களை பலி வாங்கிய அந்த பஞ்சத்தை சமாளிக்க மக்கள் புற்களையும் நரமாமிசத்தையும் உட்கொள்ள வேண்டியதாக இருந்தது.

ஹிட்லரின் அரக்கப்பிடியிலிருந்து ஐரோப்பாவை காப்பாற்றிய நாயகன் எனப் புகழப்படும் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கு இந்திய பஞ்சம் குறித்த தகவல்கள் தொடர்ந்து சென்றவண்ணம் இருந்தன. ஆனால், அலட்டிக்கொள்ளாமல் இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் போரில் ஈடுபட்டிருந்த தன் நாட்டு வீரர்களுக்கு திருப்பிவிட்டார். 'பஞ்சமோ இல்லையோ இந்தியர்கள் முயல்களைப் போல பெருகுவார்கள்' என்பது அவரின் அபத்த நியாயம். மனசாட்சி அழுத்த, டெல்லி அரசு பஞ்ச பாதிப்புகளை படங்களாக எடுத்து அவருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு அவரின் பதில், 'இந்த பஞ்சத்தில் காந்தி சாகவில்லையா?' என்பதுதான்.

மேலை நாட்டு செல்வ செழிப்பிற்கு பின்னால் இருப்பது அடிமை நாட்டு மக்களின் ரத்தம் நிறைந்த சரித்திரம்தான். ராணுவ வீரர்களுக்கு, தீயணைப்பு வீரர்களுக்கு சற்றும் குறையாதது இந்த மக்களின் உயிர் தியாகம். அந்த வகையில் இவர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரமும் அவர்களின் உயிர் தியாகத்தில் வந்ததுதான். இப்படி குரல் எழுப்ப முடியாமல் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இனி நாம் ஒலிப்போம். ஒரு நாயகன் சொன்னதுபோல், மிகப்பெரிய சுதந்திரத்திற்குப் பின்னால் மிகப்பெரிய பொறுப்பும் இருக்கிறது.

ஆக்கம் : ராக்கி சக்ரபோர்த்தி | தமிழில் : சமரன் சேரமான்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்