விளைநிலத்தில் இருந்து ஊட்டச்சத்து உணவை தட்டிற்கு கொண்டு சேர்க்கும் ’Nourish You’

உயர்ரக கினோவா மற்றும் சியாவில் துவங்கி தற்போது பல்வேறு ஆர்கானிக் பொருள்களை வழங்குகிறது இந்நிறுவனம்.

0

ராகேஷ் கே மற்றும் ராகேஷ் சி இருவருக்கும் பெயர் மட்டுமல்ல பல விஷயங்கள் பொதுவாகவே இருந்தது. பயோடெக்னாலஜி மற்றும் அக்ரிடெக் எனப்படும் விவசாயத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகிய இரு பிரிவுகளிலும் இருவருக்கும் ஆர்வம் இருந்தது. இருவரும் VIT வேலூரில் ஒன்றாக பயோடெக்னாலஜி பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டனர். NTU சிங்கப்பூரில் தொழில்நுட்ப தொழில்முனைவு பிரிவில் முதுகலை படிப்பையும் ஒன்றாகவே படித்தனர்.

அவர்களது பொதுவான விருப்பங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இருவரும் விதைகள் சார்ந்த பிரிவில் தனித்தனியாக பணிபுரிந்தனர். கலப்பின பருத்தி விதைகள் பகுதியில் முதலில் பணிபுரிந்த மிகச்சிலரில் இவர்களும் அடங்குவர். விதைகள் சந்தையில் அதிகம் பேர் செயல்பட்டு போட்டியிடும் நிலையில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் என்கிற துணைப் பிரிவிலும் கவனம் செலுத்தப்படுவதை இவர்கள் உணர்ந்தனர்.

சியா மற்றும் கினோவாவின் புகழ் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வளர்ந்துகொண்டிருப்பதை இவர்களது ஆய்வு தெளிவுப்படுத்தியது. இது உணவுப் பகுதியில், குறிப்பாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் பகுதியில் கவனம் செலுத்தத் தூண்டியது. கினோவா ஊட்டச்சத்து குறைப்பாட்டை அகற்றக்கூடிய ஒரு அபார தானியம் என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் 2013-ம் ஆண்டை கினோவா ஆண்டாக அறிவித்தது. அந்த சமயத்தில்தான் இவர்களது ஆய்வுகள் சரிபார்க்கப்பட்டது.

”நுகர்வோர்களுக்கு மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்களுக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது. நாங்கள் ஏற்கனவே சந்தையில் செயல்பட்டு வருவதால் இந்த தயாரிப்பின் ஹோம் ப்ராண்டாக மாறினோம்,” என்றார் ராகேஷ் சி.

நரிஷ் யூ (Nourish You) அமைத்தல்

2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் ’நரிஷ் யூ’ நிறுவனத்தை அமைத்தனர். சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் ஆர்கானிக் வீகன் பொருள் வகைகளை வழங்குகிறது. கினோவா மற்றும் சியாவை வீட்டில் வளர்க்கத்துவங்கினர். அதைத் தொடர்ந்து தர்பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள், முசலி மற்றும் கினோவா மற்றும் சியாவால் தயாரிக்கப்படும் ஸ்நேக்ஸ் என பல்வேறு வகைகள் வழங்குகின்றனர்.

”நாங்கள் முதலில் பணியிலமர்த்திய விஜேந்திர குமார் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தைச் (MANAGE) சேர்ந்தவர். அப்போது அவர் ஆப்பிரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருந்தார். எங்களது வாய்ப்பை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைய ஒப்புக்கொண்டார்,” என்றார் ராகேஷ்.

ஸ்டார்ட் அப் துவங்குவதில் சந்தித்த சவால்கள்

ஆனால் ஸ்டார்ட் அப் அமைக்கும் செயல்முறை அவ்வளவு எளிதாக இல்லை. சரியான ஆதார விதையை கண்டறிவதும் விதைகளை ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் விதத்தில் ப்ராசஸ் செய்யும் இயந்திரத்தை கண்டறிவதும் கடினமாக இருந்தது.

”இந்தியாவில் கினோவா விதைகளை ப்ராசஸ் செய்வதற்கு வெளிநாட்டு இயந்திரங்களுக்கு இணையான உள்நாட்டு இயந்திரம் இல்லை. ராகி போன்ற இதர இந்திய தானியங்களை ப்ராசஸ் செய்யவே இவை ஏற்றதாக உள்ளது,” என்றார் ராகேஷ்.

நில ஆய்விற்காக மட்டுமல்லாமல் சரியான இயந்திரத்தை இறக்குமதி செய்யவும் இக்குழுவினர் பெருவிற்கு (Peru) பயணம் செய்யவேண்டியிருந்தது. ஆழமாக ஆய்வு செய்தல், சரியான நபரைக் கண்டறிதல், நம்பகத்தன்மையை உறுதிசெய்தல், விரிவான அறிவைப் பெறுதல், நவீன இயந்திரத்தையும் ஆதார விதைகளையும் வாங்குதல் போன்றவற்றிற்கு கணிசமான நேரம் எடுத்துக்கொண்டது என்று ராகேஷ் விவரித்தார்.

குழுவினர்களுக்கு விதைகளும் இயந்திரமும் கிடைத்த பிறகு விதைகளை வாங்க சரியான விநியோகஸ்தர்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. சந்தையில் சாத்தியக்கூறுகள் இருப்பதை இவர்கள் நம்பவில்லை. இதனால் இத்திட்டத்தில் எந்தவித வளத்தையும் செலவிடத் தயங்கினர்.

தயாரிப்புப் பணி

விநியோகஸ்தர்களின் சுற்றுசூழலில் தயாரிப்பைக் கொண்டு சேர்க்க அதிக நேரம் எடுத்ததுக்கொண்டது. ஆரம்பத்தில் இந்த தயாரிப்பின் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்களுக்கு புரியவைப்பது கடினமாக இருந்தது.

”அதன் பிறகு விநியோகஸ்தர்களை தவிர்த்துவிட்டு நேரடியாக சில்லறை வர்த்தகர்களிடம் வழங்க தீர்மானித்தோம். Q-mart ஒப்பந்தத்தில் கையொப்பமிட சம்மதித்தது திருப்புமுனையாக அமைந்தது. பிரத்தேயகமான இந்த மளிகை மார்ட் முதன் முதலில் எங்கள் ப்ராடக்டை அவர்களது அலமாரியில் மக்கள் பார்வைக்கு வைத்தனர். அப்போதிருந்து ஹெரிடேஜ் ஃப்ரெஷ், ரத்னாதீப், ஹைப்பர்சிட்டி, மோர் (ABRL), SPAR என தற்போது பெரும்பாலான சில்லறை மளிகை ஸ்டோர்களில் வைக்கப்பட்டுள்ளது,” என்றார் ராகேஷ்.

நிறுவனத்தினுள் அமைக்கப்பட்ட தாவரங்களின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்து ஆராயும் R & D குழு சிறந்த வகைகளைக் கண்டறிய வருடம் முழுவதும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

குழுவினர் 35-க்கும் அதிகமான கினோவா மற்றும் சியா விதைகளை கண்டறிந்து உருவாக்கியுள்ளதாக ராகேஷ் தெரிவித்தார். ’நரிஷ் யூ’ ஆதார விதைகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கி உடன் பணியாற்றி அவை நிலையாக வளர்க்கப்படுவதை உறுதிசெய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அறுவடை செய்யப்பட்ட கினோவா மற்றும் சியா எங்களது நவீன ஆலையில் பயோடைனமிக் முறையில் ப்ராசஸ் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக பேக் செய்யப்படுகிறது. செயல்முறையின் ஒவ்வொரு நிலையும் கண்காணிக்கப்படுவதால் வெளிப்புற காரணிகளால் மாசுபடுவதற்கான வாய்ப்பே இல்லை,” என்றார் ராகேஷ்.

வருவாய் மாதிரி

’நரிஷ் யூ’ நிறுவனத்தின் வருவாய் மாதிரி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மொத்தம் மற்றும் சில்லறை ஆர்டர்கள். மொத்த ஆர்டர் பிரிவில் கோஹினூர் ஃபுட்ஸ், Bagrry’s, ஃப்யூச்சர் க்ரூப் போன்ற மிகப்பெரிய உணவு நிறுவனங்களுக்கு வழங்குவதாக குழு தெரிவிக்கிறது. சில்லறை ஆர்டர்கள் பிரிவில் அனைத்து பெரிய மளிகை ஸ்டோர்களுடன் செயல்படுகிறது. மேலும் அமேசான் பிக்பாஸ்கெட் போன்ற ஆன்லைன் தளங்களுடனும் செயல்படுகிறது.

2013-ம் ஆண்டில் துவங்கப்பட்டபோது மாதத்திற்கு 2 முதல் 3 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தற்போது பி2சி வருவாயாக 30 லட்ச ரூபாயும் பி2பி பகுதியில் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படுவதாகவும் குழு தெரிவிக்கிறது.

’நரிஷ் யூ’ வியட்னாம், தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சியாவை ஏற்றுமதி செய்கிறது. ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளுக்கு கினோவாவை ஏற்றுமதி செய்வதாகவும் குழு தெரிவிக்கிறது. ’நரிஷ் யூ’ ஏற்றுமதியில் சிறப்பிக்கக் காரணம் மலிவான விலை. இவர்களது மொத்த வருவாயில் 10 சதவீதம் ஏற்றுமதி வாயிலாகவே பெறப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவின் GDP-யில் 22 சதவீதம் விவசாயத்தின் மூலமாகவே பெறப்படுகிறது. IBEF அறிக்கையின்படி இந்தியாவில் விவசாயத் துறையில் பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் திட்டங்களால் உந்தப்பட்டு இந்தத் துறையில் முதலீடு செய்யப்படுகிறது.

BigHaat, Truce, Cropln, Aavishkar போன்ற பல்வேறு அக்ரிடெக் ஸ்டார்ட் அப்கள் உள்ளன. BigHaat ஒரு அக்ரிடெக் மின் வணிக நிறுவனம். Accel வாயிலாக செயல்படும் நிறுவனம் Ninjacart. எனினும் ’நரிஷ் யூ’ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளில் கவனம் செலுத்தி ஒரு வேறுபட்ட மாதிரியில் செயல்படுகிறது.

மேலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களிலும் இதே மாதிரியை பின்பற்ற விரும்புகிறோம். இது எங்களது வருவாயை நான்கு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் ராகேஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து கஷ்யப்

Related Stories

Stories by YS TEAM TAMIL