அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டின் 2-வது தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்பு ஆதரவு மையம் (TISC) ஏற்படுத்த அறிவிப்பு!

0

மத்திய அரசின், வர்த்தகத் தொழில் துறை அமைச்சகத்தின் தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை இந்தியாவின் இரண்டாவது தொழில்நுட்பப் புதுமை படைப்பு ஆதரவு மையத்தை (TISC) அமைப்பதற்கான நிறுவன ஒப்பந்தத்தை அண்ணா பல்கலைகழகத்துடன் செய்து கொண்டுள்ளது. இந்த மையம் அண்ணா பல்கலைகழகத்தின் அறிவுசார் சொத்து உரிமைகள் மையத்தில் நிறுவப்படும். இந்த புதிய மையம் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் TISC திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது.

உலக அறிவுசார் சொத்து அமைப்பின் TISC திட்டம் வளரும் நாடுகளில் உள்ள புதுமைப் படைப்பாளர்களுக்கு உள்ளூரில் மிக உயர் தரமான தொழில்நுட்பத் தகவல்கள், அது சார்ந்த சேவைகள் ஆகியவற்றை வழங்கி அவர்களது புதுமைப் படைப்புத் திறனை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். அவர்கள் அறிவுசார் சொத்துகளை உருவாக்கி, பாதுகாத்து, நிர்வகித்துக் கொள்ளவும் அது உதவிபுரியும்.

அண்ணா பல்கலைகழகத்தின் அறிவுசார் சொத்து உரிமைகள் மையம் (CIPR) 185 பதிவு உரிமைகள், 29 வர்த்தக சின்னங்கள், 39 பதிப்புரிமைகள், 25 தொழிலியல் வடிவமைப்புகள் போன்றவற்றை தாக்கல் செய்த அனுபவம் கொண்டது. மேலும் 12 சர்வதேச பதிவு உரிமை மனுக்களை தாக்கல் செய்வதற்கும் உதவியுள்ளது. பல்கலைகழகங்கள் தர வரிசையில் 6 –வது இடத்தையும், பொறியியல் கல்லூரிகள் தர வரிசையில் 8–வது இடத்தையும், இந்தியாவில் ஒட்டுமொத்தப் பிரிவு தரவரிசைய்ல் 13-வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. ஒட்டு மொத்த தர வரிசை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி நிர்ணயிக்கப்படுகிறது. CIPR இதுவரை பல IPR விழிப்புணர்வு திட்டங்களை அமைத்து நடத்தியுள்ளது: IPR தொடர்பான 6 சான்றிதழ் வகுப்புகளையும் நடத்தியுள்ளது.

இந்தியாவின் அறிவுசார் சொத்து உரிமைகள் அமைப்பினைத் துடிப்புள்ளதாகவும் சமச்சீர் வளர்ச்சிக் கொண்டதாகவும் மாற்றுவதை TISC நோக்கமாக கொண்டது. இந்தியாவில், TISC கட்டமைப்பை உருவாக்கி படைப்பு திறன், புதுமை படைப்பு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் தொழில்முனைவுத் திறனையும் சமூகப்பொருளாதார பண்பாட்டு மேம்பாட்டையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. உலகெங்கும். 500–க்கும் மேற்பட்ட TISC –க்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் TISC உருவாக்குவதன் மூலம் அது அமைந்துள்ள நிறுவனங்கள் உலக கட்டமைப்புடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகள் பகிர்வு ஆகியவற்றுக்கு TISC உத்வேகம் அளிக்கும். திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துகளை உருவாக்கி வர்த்தகப்படுத்துவதிலும், TISC பெரிதும் உதவும்.