தொழிலாளர்களின் கண்ணியம் காக்கும் 'லேபர்நெட்' களம்!

0

நம்மில் பலரும் 30 வயதாக இருந்தாலும்கூட, மானுடவியலில் முதுகலைப் படிப்பு அல்லது தொல்லியல் துறையில் ஆய்வுப் படிப்பு என எதுவாக இருந்தாலும் தேர்ந்தெடுப்பதில் எந்தத் தயக்கமும் இருக்காது. நம் தொழில் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் புதிய திருப்பம் ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், 14 வயதில் தொடங்கி நிற்காமல் சுழலும் ஒரு தொழிலாளிக்கு இது சாத்தியமில்லை. அடிப்படைக் கல்வியே முழுமையாகக் கிடைக்காதவருக்கு செல்வாக்கான படிப்புகள் பற்றிய அறிமுகமே இருந்திருக்காது. தற்போதையச் சூழலில் எந்த பட்டப்படிப்பும் அவர்களின் தொழிலையும் விதியையும் மாற்றிடாது என்பது தெளிவு. நம்மில் பெரும்பாலானோரின் தொழில்சார்ந்த முன்னேற்றமும் 35 வயதில் ஆரம்பிக்கும்போது, உடலின் தெம்பை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளிகளின் பணிசார்ந்த வாழ்க்கை 30 வயதில் சரியத் தொடங்கும்.

"ஒரு தொழிலாளிக்கு தினமும் சரியான ஊதியத்தை ஈட்டும் வகையில் வேலை வாய்ப்பு அமைவதில்லை. தங்கள் நாட்களை வீணாக்கும் அந்தத் தொழிலாளிக்கு வேலையின்மையால் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. அவர்களது உழைப்பையும் திறமைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது" என்கிறார் லேபர்நெட் (LabourNet) இணை நிறுவனர் காயத்ரி வாசுதேவன்.

பாலின ஆய்வுகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்ட காயத்ரி, கூர்க் அருகே ஒரு சிறிய கிராமத்தில் 6 மாதமாக முகாமிட்டு, அங்குள்ள சூழலியலை ஆய்வு செய்தவர். அங்குள்ள மக்களின் தேவைகள், நிலைகள், வாழ்க்கைத் தரம் முதலானவற்றை ஆய்வு செய்தார். ஓர் ஆய்வளாராக பணிபுரிந்ததில் அவர் நிறைய கற்றுக்கொண்டார். குறிப்பாக, கொள்கை நடைமுறைப்படுத்துதல் விவகாரங்களில் கவனம் செலுத்தினார். அதுவே இந்திய தொழிலாளர் அமைப்பு ஒன்றை நோக்கி அவரை உந்தித் தள்ளியது. லேபர்நெட் மற்றும் அதன் துணை நிறுவனமான இளைஞர் விழிப்புணர்வுக்கான மாற்று இயக்கம் (Movement for Alternatives for Youth Awareness - MAYA - மாயா) மூலம் தாம் உறுதிபட நம்புகின்ற கொள்கைகளையும் மதிப்பீடுகளையும் உள்ளடக்கி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அமைப்பு சாரா துறைகளில், 85 முதல் 90 சதவீதம் வரையிலான தொழிலாளர்களும், தினக் கூலிப் பணியாளர்களும் பள்ளி அல்லது கல்லூரிகளில் இடைநின்றவர்கள். 2017-ல் 50 லட்சம் பேர் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பர்; அதில், 90 சதவீதம் பேர் நிலையான ஒப்பந்தங்கள், பலன்கள், பணிப் பாதுகாப்புகள் இல்லாத அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களாகவே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. வாய்மொழி ஒப்பந்தங்கள் மூலமே அவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்களே தவிர நிறுவனத்தின் ஊதிய ஒப்பந்த முறைக்குக் கீழ் வரமாட்டார்கள். விபத்து நேர்ந்தாலோ அல்லது உயிழப்பு ஏற்பட்டாலோ உரிய இழப்பீடு கிடைப்பதற்கும் எந்தக் கொள்கை முடிவுகளும் இல்லை. அமைப்பு சாரா துறைகளில் தெளிவான வாழ்க்கைப் பாதை இல்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப வேலைகளின் தன்மையை மாற்றிக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் அப்படிச் சேரும் புதிய வேலைகளும் மிகக் கடினமானதாக இருக்கும்.

இந்தச் சூழலின் பின்னணியில், வேலை தேடும் தொழிலாளர்களையும், வேலை வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நிறுவனமாக தொடங்கப்பட்டது, 'லேபர்நெட்'. எனவே, அமைப்பு சாரா துறைகளில் வேலைகளை முறைப்படுத்துவதே அவர்கள் முதன்மைப் பணியாக இருந்தது. ஊரக மற்றும் நகர்ப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்காக கால் சென்டர் வசதிகளும் நிறுவப்பட்டது.

ஆனால், வேலையில்லாத தொழிலாளர்களுக்கு வேலையும், நிறுவனங்களின் தேவைகளுக்காக தொழிலாளர்களையும் கிடைத்திடச் செய்வது என்பதைத் தாண்டி, லேபர்நெட் மூலமாக பணியாற்றும் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் உரிய மதிப்புகளைப் பெற்றிட வழிவகுக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஏக்னஸ் ஃபண்டிங் மற்றும் சீரிஸ் ஏ, ஆக்யுமென்னிடம் 2 மில்லியன் டாலர்கள் மற்றும் மைக்கேல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் முதலான பின்புலத்துடன் தொழிலாளர்களை நிபுணத்துவம் பெறச் செய்து அவர்களின் சந்தையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உறுதுணையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

"இதை திறன் அளிப்பதன் மூலம் செய்யவே விரும்புகிறோம். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு மார்க்கெட்டிங்தான் சரியானத் தீர்வு என்பதை என் அனுபவத்தின் மூலம் அறிந்தேன். அவ்வாறு சந்தைப்படுத்துவதால் மட்டுமே உழைப்புக்கு ஏற்ற மதிப்பும் ஊதியமும் கிட்டும். ஒருவர் தன் கேரியரில் ஏற்றம் காண வேண்டும் என்றால், அவர் தன் மார்க்கெட் மீது கவனம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். உற்பத்தியும் வேலைத்திறனும்தான் இங்கு மார்க்கெட்டுக்கான மதிப்பை உயர்த்துபவை. உற்பத்தித் திறன் உயரும்போது, வாய்ப்புகளும் வாழ்க்கைத் திறனும் உயர வேண்டும். தொழிலாளர்களுக்கு உண்மையான ஊதியம் கிடைக்க வேண்டும். எனவே, பல்வேறு துறைகள் திறன்சார்ந்த தொழில் பயிற்சிகளுக்கும் நாங்கள் வலியுறுத்தி செயல்படுகிறோம்."

தொழிலாளர்களுக்கு தொழில் பயிற்சிகள் என்பது மிக முக்கிய அம்சமாகத் திகழக்கூடியது. அதேவேளையில், அவர்களுக்கு பயிற்சி வழங்குவதும் எளிதான செயல் அல்ல. "ஒரு தொழிலாளரை பணிபுரியும் இடத்தில் இருந்து வரச் செய்து வேறு இடத்தில் பயிற்சி அளிப்பது என்பது முடியாத ஒன்று. எனவே, தொடர் பயிற்சி - விடுமுறை கால பயிற்சி மற்றும் பயிற்சியின்போதே சம்பாதித்தல் என கட்டமைத்து செயல்படுத்துகிறோம். தங்கள் தொழில் துறையின் புதிய விஷயங்கள், புது தொழில்நுட்பங்கள், தேவையான திறன்கள் முதலானவற்றை அவர்களுக்குச் சொல்லித் தருகிறோம். அவர்களது வேலை சார்ந்து பயிற்சி அளிப்பதுதான் முக்கிய நோக்கம்."

இந்தியா நெட்வொர்க் ஆறு ஆண்டுகளில் 18,000-ல் இருந்து 1.5 லட்சம் பயிற்சியாளர்கள் என்ற எண்ணிக்கையை எட்டியது. ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேர். 50 சதவீதத்துக்கும் மேலான பயிற்சியாளர்களை உள்ளடக்கிய 1000 வேலையாட்கள் கொண்ட ஒரு நெட்ஒர்க்குடன், தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சிகளும் பணிகளும் கிடைக்க வழிவகுக்கப்படுகிறது. வேலையில்லாமல் பயிற்சி பெறுவோர் ரூ.6,000-ல் இருந்து ரூ.10,000 வரையிலான ஊதியத்துக்கு பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இந்த சமூக நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகளும் பெரிய நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி நிதியத்தில் இருந்து பெறப்படும் நிதிகளைக் கொண்டு நடக்கின்றன. தங்களுக்கு திறன் மிக்க தொழிலாளர்கள் தேவை என்பதன் அடிப்படையில் நிதி வழங்கும் இந்தப் பெரிய நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியக் கூடிய தொழிலாளர்களை மேம்படுத்தும் நோக்குடன் நிதி அளித்து வருகின்றன.

லேபர்நெட்டில் பயிற்சி பெறுவதற்கு முன்பும் பயிற்சி பெற்றதற்கு பின்பும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மதிப்பிடப்படுகிறது. கழிவுகள் கழிக்கப்படுவதற்கு இணையாகவே உற்பத்தித் திறன் உயர்வும் பதிவு செய்யப்படுகிறது.

தங்கள் பயிற்சிப் படையில் 40-50 சதவீதத்தினர் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். "இவர்களின் நம்பிக்கை, அவர்களின் அதிகாரம், வாழ்க்கையில் மனநிறைவு கிடைத்திடச் செய்கிறோம். குறிப்பாக, வேலை இல்லாத விடுமுறை நாட்களிலும் அவர்களின் திறனை மிகச் சிறப்பாக பயன்படுத்தும் வகையில் பகுதி நேரப் பணிகளுக்கு வகை செய்யப்படுகிறது.

தொழில் பயிற்சி பெறும் பெரும்பாலான பெண்கள் தொழில்முனைவர்களாக உயர்கின்றனர். குறிப்பாக, அழகு சேவைத் துறையில் அசத்துக்கிறார்கள். இதனால், அவர்களது மதிப்பு, வருவாய் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது."

தொழிலாளர்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு, தொடர்ச்சியாக பயிற்சிகளையும் வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் ஏணியாகவே லேபர்நெட் திகழ்கிறது. தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறன் பெறச் செய்வதுதான் கவனிக்கத்தக்க அம்சம்.

லேபர்நெட் தற்போது என்எஸ்க்யூஎஃப் உடன் இணைந்து தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்படும் ஒவ்வொரு துறை - களத்துக்கும் வேண்டிய திறமைகள் மற்றும் வேலையின் தரங்களை பகுப்பாயும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம், ஒவ்வொரு துறைக்கும் தகுந்த தொழிலாளர்களைத் தயார்ப்படுத்துவதும், ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தேவையான தொழிலாளர்களை வழங்குவதும் எளிதில் சாத்தியப்படுத்த முடியும்.

லேபர்நெட் குறித்து முழுமையாக அறிய labournet.in

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்