மக்கள் பணிக்காக அமெரிக்க வேலையை தவிர்த்தேன்: மயிலை தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார்  

1

இதோ தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. பிரச்சாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியேவிட்டது. பெரிய கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் அவரவர் கட்சி சார்ந்த தொலைக்காட்சி வாயிலாக ஒரு முறை, இரு முறையல்ல பலநூறு முறை தேவைக்கேற்ப ரீடெலிகாஸ்ட் ஆகி வருகிறது. போதாததற்கு பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளம் என எங்கு பார்த்தாலும் பெரிய தலைகளின் விளம்பரங்கள்.

வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களில் சுரேஷ்குமாரும் ஒருவர். தான் போட்டியிடும் தொகுதியில் வீடு வீடாகச் சென்று "நான் சுரேஷ்குமார் எம்.இ., எம்.பி.ஏ., நீங்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? அப்படி என்றால் எனக்கே வாக்களியுங்கள்" என கேட்டுக்கொண்டிருக்கிறார் பாமக மயிலாப்பூர் வேட்பாளர்.

எம்.பி.ஏ. படித்த பிறகு கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் அமெரிக்க வேலைக்குச் செல்லாமல், தமிழகத்திலேயே ஏழைக் குழந்தைகளுக்காக கல்விப் பணியில் கவனம் செலுத்துபவர். இப்போது, மக்களுக்காக தொண்டாற்ற அரசியல் களம் கண்டுள்ளார்.

ஒரு மைக்கும் கையுமாக வீதிப் பிரச்சாரங்களில் பரபரப்பாக இருக்கும் சுரேஷ்குமார் தனது பிரச்சார பயணத்துக்கு இடையே 'தமிழ் யுவர் ஸ்டோரி'க்காக அளித்த பேட்டி.

சுரேஷ்குமார்... உங்களை அறிமுகப்படுத்துங்கள்?

நான் சுரேஷ்குமார் எம்.இ., எம்.பி.ஏ. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தேன். பின்னர் எம்.பி.ஏ.வும் பயின்றேன். எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. ஆனாலும் கைநிறைய சம்பளம், வெளிநாட்டு வேலை எல்லாம் எனக்கான வேலை இல்லை என்று எப்பவுமே தோன்றிக் கொண்டிருந்தது. மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். என் தேசத்தைவிட்டு எங்கேயும் செல்வதில்லை என முடிவிடுத்தேன். இதோ மக்கள் பணியாற்றுவதற்காக எம்.எல்.ஏ. வேட்ப்பாளராக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அரசியல்வாதியாக மட்டுமே மக்கள் பணியாற்ற முடியுமா?

மக்களுக்கு யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். சேவை செய்ய உள்ளம் இருந்தால் போதும். அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே நான் என்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டேன். என்னை பொருத்தவரை கல்விச் சேவை தலைசிறந்த சேவை. நான் கற்ற கல்வி பிறருக்கு பயன்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே நான் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணாக்கார்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி இலவசமாக கல்வி பயிற்றுவிக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கும் பாடம் பயிற்றுவிக்கிறேன். கணிதப் பாடத்தை எளிமையாக கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னிடம் மாலை நேர வகுப்புகளில் கற்ற மாணவர்கள் பலர் பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர்.

இந்த நாட்டின் பலமே இளைய சமுதாயத்தினர்தான். அந்த இளைய சமுதாயம் முற்றிலும் கல்வி கற்ற சமுதாயமாக இருந்தால் நம் தேசம் வல்லரசாவதை யாரும் தடுக்க முடியாது. கல்விச் சேவையை செய்துவந்த நான் ஏன் அரசியலைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கும் வலுவான காரணம் இருக்கிறது. ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமானாலும் அங்கு புதிய சிந்தனைகளுக்கான இடம் இருக்க வேண்டும். புத்தாக்க சிந்தனைகளை இளைஞர்களால்தான் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும். அதற்கு இளைஞர்கள் அரசியல் பழக வேண்டும். அரசியல் அழிவுசக்தியல்ல. நேர்மையாக அரசியல் செய்தால் அதுவே மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றத்தை தரக்கூடிய சிறந்த பாதை. அதை உணர்ந்ததாலேயே அரசியல் களம் கண்டிருக்கிறேன்.

அரசியலுக்கான காரணம் சொன்னீர்கள். பாமகவை ஏன் தேர்வு செய்தீர்கள்?

தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து மக்களை இலவசங்களுக்கு மட்டுமே அடிமையாகியிருக்கின்றன. ஒரு இளைஞர் அரசியலுக்கு வரத் தூண்டும் புதுமை இந்த இரண்டு கட்சிகளிடமுமே இல்லை. அப்போதுதான் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். பாமக தேர்தல் அறிக்கை மட்டுமே கல்வியை இலவசமாக வழங்குவதாகக் கூறுகிறது. தமிழக மக்களுக்கு ஏதாவது இலவசமாக வழங்க வேண்டும் என்றால் அது கல்வியும், மருத்துவமும்தான். அந்த இரண்டையுமே பாமக இலவசமாக வழங்க வாக்குறுதி கொடுத்துள்ளது. ஒரு இளைஞனாக இலவச கல்வியின் மகத்துவத்தை நான் அறிவேன். அதுபோல், முழுமதுவிலக்கையும் பாமக தான் முதலில் முன்வைத்தது. இந்த சமூக சீர்திருத்த கொள்கையும் என்னைக் கவர்ந்தது. எனவேதான் நான் பாமகவின் பாதையில் பயணிக்கிறேன்.

மயிலாப்பூர் பிரச்சாரத்தில் உங்கள் கவனம் ஈர்த்தவை..

ஒட்டுமொத்த தொகுதியுமே என் கவனத்தில், என் சிந்தையில் இருக்கிறது. இது எனது தொகுதி. இந்தத் தொகுதி மக்களுக்காக நான் நிறைய நலத்திட்டங்களை மனதில் வைத்திருக்கிறேன்.

மாட மாளிகைகள் ஒருபுறம், சேரிகள் மறுபுறம் என ஏழை பணக்கார பேதத்தை பளிச்சென பார்த்த மாத்திரிலேயே புரிய வைத்துவிடும் இந்த தொகுதி. இப்பகுதியில் குடிசைவாழ் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் மனதில் புதிதாக தேர்தல் களம் காணும் நான் இடம்பெற வேண்டுமானால். அதற்கு சற்று கூடுதலாகவே மெனிக்கிட வேண்டும்.

எனவேதான் வீதிவீதியாக நடந்தே சென்று வீடுவீடாக ஓட்டு கேட்டு வருகிறேன். அதுமட்டுமல்ல மக்களோடு மக்களாக குடிசைவாழ் பகுதியில் தங்குகிறேன். அவர்களது அன்றாட வாழ்வின் இன்னல்கள் என்னவென்று தெரிந்து கொண்டால்தான் அவர்களுக்காக பணியாற்ற முடியும். உதாரணத்துக்கு மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள சேரிப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அங்கு அமைந்துள்ள குப்பைக் கிடங்கு. அந்த குப்பைக்கிடங்கால் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும், சுவாசக் கோளாறும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இத்தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் நாள்தோறும் குப்பை துர்நாற்றத்துக்கு இடையே வாடும் அந்த மக்களுக்கு தேவையானவற்றை நிச்சயம் செய்வேன்.

எனவே ஊழலற்ற சமுதாயம், மது இல்லாத தமிழகம், கல்வியும், மருத்துவமும் இலவசமாக தரும் அரசாங்கம் உருவாக வேண்டுமானால் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

கோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்!  

'என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்'- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்! 

Stories by gangotree nathan