தமிழக மாணவர்கள் வடிவமைக்கும் ’மூன் ரோவர்’- நிதி திரட்டும் ஸ்ரீமதி கேசன்!

தமிழக மாணவர்கள் உருவாக்கியுள்ள எடை குறைவான 'மூன் ரோவர்' மிஷன் மாடலுக்கு செயல்வடிவம் கொடுக்க நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவன இயக்குனர் ஸ்ரீமதி கேசன்.

0

வானியல் குறித்த படிப்புகளில் உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் வாய்ப்புகள் குறைவு தான். போதுமான கட்டமைப்பு வசதிகள், மாணவர்களை வழிநடத்தி செல்ல சரியான நபர்கள் இல்லாததுமே இதற்கு முக்கியக் காரணம். எனினும் கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அறிவுக்கும், முயற்சிக்கும் அணை போட முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் தமிழக மாணவர்கள்.

64 கிராம் எடை கொண்ட ’கலாம்சாட்’ செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த தமிழக மாணவர்கள் தற்போது நிலவில் இருந்து முப்பரிமாணத்தில் படம் மற்றும் வீடியோவை எடுத்து அனுப்புவதற்கான எடை குறைவான ரோவர் மாடலை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இந்த மூன் மிஷனுக்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ளும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீமதி கேசன் தமிழ் யுவர் ஸ்டோரியிடம் மாணவர்களின் கண்டுபிடிப்பு குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

விண்வெளி ஆராய்ச்சியில் படிப்படியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே முதலில் 2016ல் பலூன் மூலம் செயற்கைகோளை அனுப்பும் திட்டத்தை முயற்சித்தோம். அதைத் தொடர்ந்து 2சாட் என்ற ஒன்றை முயற்சித்து பார்த்ததன் விளைவாகவே 2017ல் உலகத்திலேயே மிகவும் எடை குறைவான 64 கிராமே கொண்ட கலாம் சாட் சாடிலைட்டை தமிழக மாணவர்கள் வடிவமைத்தனர்.

ஒரு போட்டிக்காக தயாரிக்கப்பட்ட அந்த சாட்டிலைட் மற்ற நாட்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றதன் மூலம் நாசா வழியே விண்ணுக்கு செலுத்தப்பட்டது. 2017ல் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினர்.

கூகுள் லூனார் X ப்ரைஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற 70 நாடுகளில் கடைசி சுற்றில் சினர்ஜி மூன் இடம்பிடித்தது. அந்த சினர்ஜி ’மூன் கலாம் சாட்’ செயற்கைகோளை பார்த்து வியந்து போய் எங்களிடம் சந்திரனுக்கு எடை குறைவான ரோவரை அனுப்பும் மாடலை தயாரித்து தர முடியுமா என்று கேட்டுக் கொண்டனர்,”

என்று ரோவருக்கான விதை எங்கிருந்து தோன்றியது என்று கூறுகிறார் ஸ்ரீமதி.

கடந்த ஓராண்டாக கலாம் சாட்டை உருவாக்கிய ரிபாத் ஷாரூக் உள்ளிட்ட 7 மாணவர்கள் ஒன்று சேர்ந்து நிலவுக்கு அனுப்பும் ரோவருக்கான மாடலை உருவாக்கினர்.

"சாட்டிலைட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட உடன் இந்த ரோவர் சந்திரனில் உள்ள மண்ணின் தரம் மற்றும் ஈர்ப்பு விசைக் குறித்து அறியவும், மனிதர்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதை 3டி வடிவில் படங்களாக எடுத்து அனுப்பும். 2.5 முதல் 3 கிலோ அளவிலான எடையிலேயே ரோவர் இருக்கும் என்பதே இதன் சிறப்பம்சம்." 

மேலும் பெரும்பாலான ரோவர்கள் அதன் ஆயுள்காலம் முடிந்தவுடன் மீண்டும் பூமிக்கு கொண்டுவருவதற்கு கூடுதல் செலவாகும். ரோவரை அப்படியே சந்திரனில் விட்டுவிட்டால் அது எலக்ட்ரானிக் வேஸ்ட்டுகளாக அனுப்பப்படும் இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும், ஆனால் இதனை தவிர்க்க எடை குறைவான ரோவரை எளிதில் மக்கக் கூடிய பொருட்களை கொண்டு உருவாக்கவும் மாணவர்கள் முயற்சித்து வருவதாகக் கூறுகிறார் ஸ்ரீமதி.

மூனுக்கான ரோவர் மாடல் ரெடியாகிவிட்டது ஆனால் துரதிஷ்டவசமாக எந்த போட்டிக்காக மாணவர்கள் ரோவரை உருவாக்கினரோ அந்தப் போட்டியை கூகுள் நிறுவனம் கைவிட்டுவிட்டது. இஸ்ரோவின் சந்திராயன் 2 விண்ணுக்கு ஏவுவது தாமதமானதாலும் எந்த நாடும் தற்போது நிலவுக்கு சாட்டிலைட் அனுப்பவில்லை என்பதால் அந்த போட்டி நடக்காமலே முடிவுக்கு வந்தது. எனினும் மாணவர்களின் ஆர்வத்திற்கு தடை போடக் கூடாது என்பதற்காக மாணவர்களின் உருவாக்கத்தை ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

"உலகில் இதுவரை எந்த நாட்டிலும் மாணவர்கள் இது போன்று எடை குறைவான ரோவரை கண்டுபிடித்ததில்லை. எனவே கலாம் சாட் எப்படி உலக அளவில் தமிழக மாணவர்களை திரும்பிப் பார்க்க வைத்ததோ அதே போன்று இந்த மூன் மிஷனையும் செய்து முடித்து இந்திய மாணவர்களின் திறமையை சர்வதேச அளவில் பரைசாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்கிறார் ஸ்ரீமதி. 

மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்த ரோவரிற்கு முழு வடிவம் கொடுக்க ரூ. 250 கோடி முதல் ரூ.300 கோடி வரை செலவாகும். இதுவரை ரோவர் மாடலுக்கான செலவுகள் அனைத்தையும் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனமே ஏற்று செய்து வந்துள்ளது.

பல முறை முயற்சித்தே ரோவருக்கு முழு வடிவம் கொடுக்க வேண்டும், ஏனெனில் இந்த ரோவர் நிலவில் இறங்கி அங்குள்ளவற்றை சென்சார் செய்து படம்பிடிப்பதற்கான கோட்பாடுகளை வகுக்க வேண்டும். இதற்கு மட்டுமே ரூ.20 கோடி செலவாகும், இவையில்லாமல் மற்ற செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கி ரோவர் மாடல் உருவாக ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை செலவாகும்.

மாணவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த ரோவரை உருவாக்குவதற்கு அரசுகள் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள், கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டலாம் என்று முடிவெடுத்துள்ளார் ஸ்ரீமதி. 

பெரு நிறுவனங்கள் மட்டும் தான் இந்த ரோவருக்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று இல்லை இந்த திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் நிதியாக ஒவ்வொரு இந்திய பிரஜையும் ரூ.5 கொடுத்தாலே போதும் என்கிறார். ஏனெனில் இந்திய மாணவர்களிடையே திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன, போதுமான கட்டமைப்பு மற்றும் நிதியுதவி இல்லாத காரணத்தால் அடையாளம் இன்றி தவிக்கின்றனர்.

படித்து முடித்தவுடன் தங்களது பிள்ளைகள் வேலைக்கு போய் லட்சக்கணக்கில் சம்பாதித்தால் போதும் என்ற பெற்றோரின் மனநிலையும் மாற வேண்டும், மூன் ரோவர் மிஷனை செய்து முடிக்க 100 மாணவர்களின் பங்களிப்பு தேவை. 

நம்பர் 1 ரேங்க் வாங்கும் மாணவர்களையோ அல்லது படிப்பில் படு சுட்டியான மாணவர்களையோ தேர்ந்தெடுத்து நாங்கள் பயிற்சி அளிக்கவில்லை. திறமையும் புதுமைகளை கண்டுபிடிக்கும் ஆர்வமும் உள்ள மாணவர்களாக இருந்தால் போதும். 

”கிராமப்புற மாணவர்கள் என்று குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம், ஏனெனில் கலாம் சாட்டை உருவாக்கிய ரிபாத் ஷாருக் +2வில் குறைந்த மதிப்பெண் என்பதோடு கிராமப்புற பகுதியில் இருந்து வந்தவர் தான். எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் ஸ்பேஸ் கிட்ஸை தொடர்பு கொண்டால் தேர்வுகள் வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மூன் ரோவர் மிஷனில் அவர்களின் பங்களிப்பை செலுத்தவும் ஊக்குவிப்போம்,” என்கிறார் ஸ்ரீமதி.

இஸ்ரோவிற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி மூலம் விஞ்ஞானிகள் சாட்டிலைட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் முதன்முறையாக தனியார் நிறுவன முயற்சியோடு முழுக்க முழுக்க மாணவர்களே உருவாக்கும் மூன் ரோவரை செய்து முடிப்பதற்கு போதுமான நிதி தற்போது இல்லாவிட்டாலும், இந்த திட்டத்தை கைவிடாமல் எத்தனை சவால்கள் வந்தாலும் அதனை முறியடித்து ரோவரை வெற்றிகரமாக செய்து காட்டியே தீர வேண்டும் என்ற உறுதியோடு இருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீமதி. 

அடுத்த ஆண்டிற்குள் மூன் ரோவரை செய்து முடித்தே தீர வேண்டும் என்ற ஸ்ரீமதி கேசனின் இந்த மனஉறுதிக்கு ஒரே ஒரு காரணம் நம் மாணவர்களின் திறமை தான், எந்த ஒரு மாணவனின் திறமையையும் யாராலும் மறைத்து விட முடியாது. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் பெற்றோருக்கு சரியான புரிதல் இல்லாததால் மாணவர்கள் தங்களின் ஆசையை நிராசையாகிவிடாமல் சரியாக வழிநடத்திச் செல்லும் ஸ்ரீமதியின் முயற்சி வெற்றி பெற வேண்டும்.

நாசா மையத்திற்கு சென்று தான் விண்வெளி தொடர்பான அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையை மாற்றி அடுத்த 5 ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களும் கூட தமிழகத்தில் இருந்தே இந்த வசதிகள் அனைத்தையும் பெற முடியும் என்று உறுதியோடு கூறுகிறார் ஸ்ரீமதி.

குழந்தைகளால் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று முதலில் பெற்றோர் நம்ப வேண்டும். போட்டிக்காகவோ அல்லது புதிய சாதனை என்று பெருமைபட்டுக் கொள்வதற்காகவோ மட்டும் இந்த மூன் ரோவருக்கு செயல்வடிவம் கொடுக்க நினைக்கவில்லை, மாறாக இந்திய மாணவர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே எடை குறைவான ரோவர் உருவாக்கப்படுவதாகவும் ஸ்ரீமதி கேசன் நம்பிக்கையோடு கூறுகிறார்.