நீங்கள் பணக்காரரா? ஏழையா? என்பதை ஃபேஸ்புக் விரைவில் தெரிவிக்கப் போகிறது! 

1

பயனரின் சமூக மற்றும் பொருளாதார நிலையைக் கண்டறிந்து அவர்களை தொழிலாளர் வர்க்கம், நடுத்தர வர்க்கம், மேல் வர்க்கம் என தாமாகவே வகைப்படுத்தும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளது ஃபேஸ்புக்.

இந்த காப்புரிமையின்படி சமூக ஊடகங்களில் பிரபலமான ஃபேஸ்புக் தனது பயனர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை கணிக்க உதவும் வகையில் கல்வி, சொந்த வீடு, இணைய பயன்பாடு என பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் முறையை உருவாக்க விரும்புவதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

இந்த காப்புரிமை குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் தனது இலக்கை மேம்படுத்தி பயனர்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை வழங்க உதவும் வழிமுறைகள் இந்த காப்புரிமையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

”பயனர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை கணிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கேற்ற தயாரிப்புகளையோ அல்லது சேவைகளையோ வழங்குவோர் தங்களது தயாரிப்பு / சேவை குறித்த தகவல்களை சாத்தியக்கூறுகள் நிறைந்த பயனர்களிடம் கொண்டு சேர்க்க ஃபேஸ்புக் உதவும்,” 

என்று காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிப்பு அல்லது சேவை வழங்குவோர் தகுந்த வாடிக்கையாளர்களை சிறப்பாக சென்றடையலாம். இந்த ஆன்லைன் தளமானது பயனர்களுக்கு தயாரிப்பு/சேவை சார்ந்த சிறப்பான அனுபவத்தை வழங்கும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பயனர்களிடம் முதலில் அவர்களது வயதைக் கேட்டறியும். அதனைக் கொண்டு அவர்களது வயதிற்கு ஏற்றவாறான கேள்விகள் கேட்கப்படும்.

”20 முதல் 30 வயதுள்ளோரிடம் எத்தனை இணைய பயன்பாட்டு சாதனம் வைத்துள்ளனர் என்றும் 30 முதல் 40 வயதுள்ளோரிடம் அவர்களிடம் சொந்த வீடு உள்ளதா என்றும் கேட்கப்படும்,” என அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும் பயனர்களை இலக்காகக் கொண்டு செயல்படும் நோக்கத்திற்காகவே இந்தக் காப்புரிமை பயன்படுத்தப்படுமா என்பது தெளிவாகவில்லை.

சமூக ஊடகங்களில் பிரபலமான இந்நிறுவனம் பயனர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை தெரிந்துகொள்ள அவர்கள் பயணம் மேற்கொண்ட விவரங்கள், எந்த வகையான சாதனங்களை பயன்படுத்துகிறார்கள், இணையதள இணைப்புகள் கொண்ட எத்தனை சாதனங்கள் வைத்துள்ளனர், எதுவரை படித்துள்ளனர் போன்ற தகவல்களையும் ஃபேஸ்புக் கேட்கலாம்.

பயனர்கள் தங்களது ஆண்டு வருமானம் குறித்து பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள் என்பதால் அப்படிப்பட்ட கேள்விகளை ஃபேஸ்புக் தவிர்த்துள்ளது.

”பொதுவாகவே ஆன்லைன் முறையில் பயனர்களின் வருவாய் குறித்த தகவல்கள் இடம்பெறாது. ஏனெனில் பயனர்கள் தங்களது வருவாய் குறித்து ஆன்லைன் முறையில் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள்,” 

என காப்புரிமையில் கூறப்பட்டுள்ளதாக ‘டெய்லி மெயில்’ தெரிவிக்கிறது. பயனர்கள் ஃபேஸ்புக்கில் நிகழ்த்திய செயல்கள் வாயிலாகவும் ஃபேஸ்புக் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

தகவல் உதவி: IANS