1000 ரூபாயில் தொடங்கி ரூ.3 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்திய முத்துகுமார்!

20

வேலை இல்லா திண்டாட்டம், நிராகரிப்பு என பல சறுக்கல்களை ஆரம்பக்காலத்தில் சந்தித்து இன்று 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தின் நிறுவனர் முத்துகுமார்.

PRINTFAAST என்னும் அச்சகத்தின் நிறுவனர் தான் முத்துகுமார். 1992-ல் 1000 ரூபாய் முதலீட்டுடன் தொடங்கிய இந்நிறுவனம் இன்று 3 கோடி மதிப்புள்ள அச்சகமாக உயர்ந்துள்ளது. முத்துகுமார் ஒரு பி.எஸ் சி வேதியியல் பட்டதாரி, எல்லா பட்டதாரிகளைப் போலவும் படிப்பை முடித்தவுடன் பல நிறுவனங்களில் வேலை தேடி அனுகியுள்ளார். ஆனால் போதிய ஆங்கில தகுதி இல்லாததால் நிராகரிக்கப்பட்டார்.

நிறுவனர் முத்துகுமார்
நிறுவனர் முத்துகுமார்
“1992-ல் ஆறு மாதம் வேலை தேடி அலைந்தேன் ஆனால் நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன். அதன் பின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அச்சகத்தில் ஆபீஸ் பாய் ஆக இணைந்தேன்,”

என தன் ஆரம்ப கால சிரமங்களை பகிர்ந்தார் முத்துகுமார். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டும் என்று காத்திருக்காமல் ஆபீஸ் பாய் வேலையில் சேர்ந்தார். அப்பொழுது அதுவே தன் வாழ்க்கை பாதையை மாற்றும் என அவர் அறிந்திருக்க மாட்டார். 

தொழில் பயணத்தின் தொடக்கம்:

அலுவலக பணியாளர் ஆக பணிப்புரிந்த ஆறு மாத காலத்திற்குள் முடிந்த வரை அச்சகத் தொழிலை கற்றுக்கொண்டார் முத்துகுமார். திரை அச்சிடுதலை கற்றுக்கொண்டு சுயமாக ஒரு அச்சகத்தை நிறுவினார்.

“திரை அச்சிடுதலை கற்றுக்கொண்டு என் அக்கா வீட்டில் இருந்தே என் அச்சக பயணத்தை தொடங்கினேன். அப்பொழுது நான் போட்ட முதலீடு 1000 ரூபாய். முதல் மூன்று ஆண்டுகள் பல சவால்களை எதிர்கொண்டேன்,” என்கிறார்.

தொழில் ரீதியான பல சவால்களை சந்தித்துள்ளார், ஆனால் அவை எல்லாம் ஒரு படிப்பினையே என்கிறார் முத்துகுமார். 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி தன் அயராத உழைப்பால் இன்று பல மடங்காக தொழிலையுன், வருவாயையும் உயர்த்தியுள்ளார்.

தொழில் வளர்ச்சி:

மூன்று வருட காலத்திற்குள் தொழில் முனைவைப் பற்றிக் கற்றுக்கொண்டார் முத்துகுமார். அதன் பின் தன் தொழில் நல்ல வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறார். திரை அச்சிடுதலில் தொடங்கி, தற்பொழுது ஆஃப்செட் அச்சிடுதல் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு என வளர்ந்துள்ளனர் இவர்கள்.

“காலத்திற்கு ஏற்றவாறு என் தொழிலையும் மேம்படுத்தி வருகிறேன். சமீபத்திய மென்பொருள், அச்சிடும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துகிறோம்,”

என தன் தொழில் வளர்ச்சியின் காரணத்தை குறிப்பிடுகிறார். வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தும் Prinfaast 2014-ல் ஆன்லைன் சேவையை அறிமுகப் படுத்தியது. நாட்காட்டி, நாட்குறிப்பு, பிளானர், விசிடிங் கார்ட், டிஜிட்டல் வடிவமைப்பு, லோகோ வடிவமைப்பு என பல பிரிவுகளில் இ-சேவை செய்கின்றனர். மேலும் ஆன்லைனிலே அச்சக ஆர்டர்களை பெற்று விநியோகம் செய்கிறார்.

ஆன்லைன் வசதி மூலம் மற்ற இ-காமர்ஸ் நிறுவனத்துடனும் இணைந்துள்ளது Prinfaast, இதன் மூலம் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்கிறார் முத்துகுமார். தேதி இல்லா நாட்குறிப்பே தங்கள் அச்ககத்தின் தனித்துவமான தயாரிப்பு என்கிறார். வாடிக்கையளர்களிடம் இருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

“ஒரு ஆராய்ச்சியின் படி, தேதி இருப்பதால் 40-60% விகித நாட்குறிப்பு பயன்படாமல் போகிறது. மேலும் ஒரு நாட்குறிப்பு செய்ய 4-6 மரங்கள் தேவைப் படுகிறது, அதனால் அதை வீணாக்காமல் இருக்க, ஒரு சமூக நலத்துடன் தேதி இல்லா நாட்குறிப்பை இணைத்துள்ளோம்,” என்கிறார் சமூக அக்கறையுடன்.

தொழில் யோசனை மற்றும் முதலீடு இருந்தால் மட்டுமே தொழிலில் முன்னேற முடியாது. நம் தொழிலை காலத்திற்கு ஏற்றவாறு மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே நாம் தொழில் முன்னேற பெரும் உதவியாக இருக்கும் என பலருக் முன் மாதரியாக இருக்கிறார் முத்துகுமார்.

வருங்கால திட்டம்:

இப்பொழுது இருக்கும் தன் நிறுவனத்தை பல மடங்காக கட்டமைக்க பெரிய இலக்கை தன் முன் வைத்திருக்கிறார் முத்துகுமார்.

“கூடிய விரைவில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக இதை ஆக்கவேண்டும். மேலும் 300 பேருக்கு மேல் வேலைவாய்ப்பை அளித்திட வேண்டும்.”

இது போன்ற பெரிய குறிக்கோளை தன் முன் வைத்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் 100 சதவீத திருப்தியே தனக்கு எப்பொழுதும் முக்கியம் என்கிறார். 25 வருடமாக Printfaast நிலைத்திருக்கக் காரணம்; தனி நபராய் தன் உழைப்பும், வாடிக்கையாளர்களிடன் தான் ஏற்படுத்திய நம்பகத்தன்மையே காரணம் என்கிறார்.

தோல்வியை கண்டு பயந்து தொழில் தொடங்க முன் வராத காலத்தில் தோல்விகளை தாண்டாமல் வெற்றி இல்லை என்று தன் உழைப்பில் நம்பிக்கை வைத்து இன்று ஒரு வெற்றித் தொழில்முனைவராய் ஜொலிக்கும் முத்துகுமாருக்கு பாராட்டுக்கள்.

இணையதள முகவரி: Printfaast

Related Stories

Stories by Mahmoodha Nowshin