சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான அடுப்புகளை வடிவமைத்து கோவையில் விற்பனை செய்யும் ஜெயப்பிரகாஷ்!

22

47 வயதான வி ஜெயப்பிரகாஷ் மண் அடுப்புகளை கேரளாவின் கொயிலாண்டி பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று வீடு வீடாக விற்பனை செய்தது குறித்து நினைவுகூர்ந்தார்.

”என் அம்மா தனது ஆறு குழந்தைகளின் படிப்புச் செலவுகளை சமாளிக்க கோயமுத்தூரில் இருந்து இந்த அடுப்புகளை வாங்கி விற்பனை செய்வார். சிறு வயதில் நானும் அவருக்கு உதவுவேன்.”

இந்த பயோமாஸ் அடுப்புகள் அதிகளவில் புகையை வெளியேற்றுவதைக் கண்ட ஜெயப்பிரகாஷ், இந்த பிரச்சனைக்குத் தீர்வுகண்டு சமையலறையில் பெண்கள் சமைக்கும்போது புகையினால் மூச்சுத்திணறி அவதிப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு உதவுக்கூடிய பல்வேறு வழிகளை ஆராயத் தொடங்கினார்.

இந்த அடுப்புகளுக்குப் பின்புறம் புகைபோக்கி போன்று செயல்பட்ட ஒரு சிறிய குழாயை பொருத்த முயன்றார். 

“இந்த முயற்சி தோற்றுப்போகலாம் என்று பயந்ததால் முதலில் அருகாமையிலிருந்த கிராமங்களில் மட்டும் முயற்சி செய்து பார்த்தேன்,” 

என்று தனது ஆரம்பக்கட்ட முயற்சி எவ்வாறு வெற்றியடைந்து பல கிராமப்புற வீடுகளுக்கு பயனளித்தது என்று நினைவுகூர்ந்தார் ஜெயப்பிரகாஷ்.

குழந்தைப்பருவம் முதலே புதுமைகளில் ஆர்வம்

புகைபோக்கி போன்ற இந்த புதுமையான கண்டுபிடிப்பு மட்டுமல்லாமல் அவரது சிறு வயதிலேயே பாரம் சுமப்பதற்கான ஒரு கப்பி, குறிப்பிட்ட தொலைவு வரை சென்றுவிட்டு தானாகவே திரும்ப வரும் ஒரு சிறிய பொம்மை மோட்டார் படகு போன்றவற்றை கண்டுபிடித்துள்ளார்.

பள்ளியில் நடைபெறும் பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் தொடர்ந்து பங்கேற்பவராக இருப்பினும் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. அப்போதும் தனது ஆர்வத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். தினக்கூலியாக பணியாற்றியபோதும் எதிர்காலத்தில் புகையில்லா அடுப்பை உருவாக்கவேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் இருந்தார்.

ஆரம்பகட்ட தடங்கல்கள்

ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து சோதனை செய்து வந்தபோதும் கேரளாவின் ANERT ஏற்பாடு செய்திருந்த சூரிய சக்தி தொடர்பான பத்து நாள் பயிற்சி வகுப்பு அவரது புதுமையான திட்டங்களை முறைப்படுத்த உதவியது.

மருத்துவமனை கழிவுகள் விவசாய நிலத்தில் கொட்டப்படுவது குறித்து உள்ளூர் செய்தித்தாளில் படித்தார். இது குறித்து ஆராய மருத்துவமனை மேலாளரைத் தொடர்பு கொண்டார். இவர் மொத்த மருத்துவனை கழிவுகளையும் எரிக்க உதவும் அடுப்பை உருவாக்க ஆரம்பத் தொகையாக 20,000 ரூபாய் வழங்கினார்.

இந்த குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக ஜெயப்பிரகாஷ் வெற்றிகரமாக ஒரு அடுப்பை கண்டுபிடித்தார். இருந்தபோதும் இந்த அடுப்பின் புகைபோக்கியின் அருகில் அதிக தீப்பிழம்புகள் உருவாவதைக் கண்டு ஜெயப்பிரகாஷும் அவரது உதவியாளரும் ஆச்சரியப்பட்டனர். இது குறித்து ANERT-ன் அப்போதைய இயக்குனரான ஆர் என் ஜி மேனன் அவர்களிடம் கேள்வியெழுப்பி வளிமயமாக்கல் மற்றும் முழுமையான எரிக்கும் பணி போன்ற செயல்முறைகள் குறித்து அதிக தகவல்களை கேட்டறிந்தார்.

ஆற்றல் மிகுந்த அடுப்பை சொந்தமாக உருவாக்கினார்

ஜெயப்பிரகாஷின் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறிய அடுப்பின் தனித்துவம் என்ன?

இதில் இரண்டடுக்கு எரியும் முறை உள்ளது. இதிலிருந்து வெளியாகும் பயோமாஸ் எரிபொருள் மற்றும் புகை முழுவதுமாக எரிந்து குறைந்த மாசையே உருவாக்குகிறது.

வார்ப்பிரும்பினால் தயாரிக்கப்பட்ட தனது தனித்துவமான அடுப்பின் செயல்பாடு குறித்து அவர் மேலும் விவரிக்கையில், 

“கிட்டத்தட்ட நான்காண்டுகள் பல்வேறு பரிசோதனைகள் செய்த பிறகு ஒரு மாதிரியை தீர்மானித்தேன். இதில் ஒரு பீங்கான் குழாயில் நான் துளையிட்டதால் இரண்டாம் நிலையில் கார்பன் துகள்கள் முழுமையாக எரிவதற்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அத்துடன் குறைவான புகையை வெளியேற்றி சிறப்பாக பணியாற்றியது.”

பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் பயன்படுத்தவும் ஏற்ற ஜெயப்பிரகாஷின் ஆற்றல் மிகுந்த அடுப்பு பொன்னிற மஞ்சள் நிறத்துடன்கூடிய நீல நிற பிழம்புகளை வெளியேற்றுகிறது. சமூகத்திற்கு பயனுள்ள புதுமையான இந்த கண்டுபிடிப்பிற்காக ஜெயபிரகாஷ் 1998-ம் ஆண்டு கேரளாவின் ஆற்றல் மேலாண்மை மையம் சார்பாக ஆற்றல் பாதுகாப்பு விருது பெற்றார். மேலும் 2012-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலிடமிருந்து தேசிய புதுமை விருது (National Innovation Award) பெற்றார்.

தொழில்முனைவுப் பயணம்

மரத்தை எரிபொருளாக பயன்படுத்துகையில் அடுப்பின் எரிப்பு செயல்திறன் 36.67 சதவீதம் இருப்பதாகவும் தேங்காய் ஓடுகளை எரிபொருளாக பயன்படுத்துகையில் அடுப்பின் எரிப்பு செயல்திறன் 29.48 சதவீதம் இருப்பதாகவும் கேரளாவில் முண்டூரில் உள்ள ஒருங்கிணைந்த கிராமப்புற தொழில்நுட்ப மையம் அறிக்கை தெரிவிக்கிறது.

புதுமையான கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த இவர் 1-100 கிலோ வரை திறன் கொண்ட பல்வேறு அடுப்புகளை உருவாக்க இதே எரிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். ANERT-ஐ சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று இந்த வகை அடுப்புகளின் திறனை பரிசோதித்தது. அதில் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 40 கிலோ அரிசியை சமைக்க 75 ரூபாய் மதிப்பிலான 75 தேங்காய் ஓடுகள் மட்டுமே தேவைப்பட்டதைக் கண்டனர். இதே அளவு சமையலுக்கு 10 கிலோ எல்பிஜி பயன்படுத்தினால் சுமார் 4,000 ரூபாய் வரை செலவாகும்.

இரு வகையான அடுப்புகளின் தொழில்நுட்பத்திற்கும் காப்புரிமை பெற்றதுடன் ஜேபி டெக் (JP Tech) என்கிற க்ளீன் எனர்ஜி ஸ்டார்ட் அப்பையும் நடத்திவருகிறார் ஜெயபிரகாஷ். இந்த ஸ்டார்ட் அப் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த அடுப்புகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறது. இதுவரை ஜெயப்பிரகாஷ் குறைவான ஆற்றல் தேவைப்படும் இந்த வகையான 7,500 அடுப்புகளை கேரளா முழுவதும் உள்ள வீடுகளில் பொருத்தியுள்ளார். 

இந்த தொழில்முனைவோர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் (UNDP) இணைந்து மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளில் மதிய உணவு தயாரிப்பதர்கான 200 அடுப்புகளை நிறுவியுள்ளார். இதில் 1,000 அடுப்புகள் ஏற்கெனவே விற்பனை ஆன நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள், குழு பயன்பாட்டிற்கான சமையலறைகள், கல்யாண மண்டபங்கள் போன்றவற்றிலிருந்து ஜெயபிரகாஷிற்கு ஆர்டர் குவிந்து வருகின்றன.

மேலும் பல கண்டுபிடிப்புக்கள்…

கோயமுத்தூரில் உள்ள தனது சிறிய தொழிற்சாலையில் 6-7 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள ஜெயபிரகாஷ் பலரது வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக மகிழ்ச்சியடைகிறார்.

”தொழில்முனைவில் நான் ஈடுபட்டுள்ளதால் எனக்கு அதிகளவு மனநிறைவும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.”

ஜெயப்பிரகாஷின் திறன் வாய்ந்த சிறியளவிலான அடுப்புகள் விலை மலிவானதாகும். 1 கிலோ அடுப்பு 4,000 ரூபாயிலும் 10 கிலோ அடுப்பு 15,000 ரூபாயிலும் (மிகப்பெரிய அளவிலான 100 கிலோ அடுப்பு 65,000 ரூபாய்) விற்பனையாகிறது. வருங்காலத்தில் இந்த அடுப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர் விவரிக்கையில், “முழுமையான நீல நிற தீப்பிழம்புகளைப் பெறுவதில் நான் வெற்றியடைவேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார். 

அவரது புதுமையான கண்டுபிடிப்புகளில் அதிக பாராட்டுகளை வென்ற அடுப்புகள் மட்டுமல்லாமல் சானிட்டரி நேப்கின் கழிவுகளை திறம்பட எரிக்கும் இயந்திரமும் அடங்கும். ”நடமாடும் தகனம் செய்யும் அமைப்பு ஒன்றையும் வடிவமைத்துள்ளேன். இது பயோபாஸ் எரிபொருளை எரிப்பதன் மூலம் இயங்கும். அதிக புகையையோ துர்நாற்றத்தையோ வெளியிடாது,” என்றார்.

இது போன்ற புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க உந்துதலாக இருந்த அம்சம் குறித்து அவர் கூறுகையில்,

”மக்களின் பல்வேறு பிரச்சனைகளைகள் மற்றும் தேவைகளை உற்று நோக்கி படைப்பாற்றல் திறன் வாயிலாக அவர்களுக்கு தீர்வுகாண்பதே ஊக்கமளிக்கும் விஷயமாகும்.”

ஆங்கில கட்டுரையாளர் : அமூல்யா ராஜப்பா