நட்டமில்லா நகைத்தொழிலில் நாட்டமில்லாமல் இயற்கை மணமேடைகள் அமைத்து அசத்தும் கலைஞன்!

3

கைநிறைய மாத வருமானம், ஏ.சி. அறையில் வேலை என சொகுசு வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்துக்கு திரும்பியுள்ள இன்றைய இளைஞர்களும், சாலையோரங்களில் முளைத்திருக்கும் ஆர்கானிக் அங்காடிகளும் நம்மாழ்வார் விதைத்த விதையின் அறுவடைகள். அதிலொரு அறுவடை தான் ஆனந்த பெருமாள் எனும் ‘சிரட்டை சிற்பி’. 

கலர்கலராய் பல்புகள், பிளக்ஸ் பேனர்கள், வாயிலில் ஜிகுஜிகு தோரணங்கள் என எக்கச்சக்க செயற்கைகளை புகுத்தி நடக்கும் இன்றைய திருமணப் பாணியையே மாற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் பசுமைத் திருமணங்கள் முற்றிலுமாய் இயற்கை சூழலில் அமைய இயற்கை மணமேடைகள் அமைத்துத் தருகிறார் ஆனந்த பெருமாள். 

ஆனந்த பெருமாள் (இடது)
ஆனந்த பெருமாள் (இடது)

மதுரையை பூர்விகமாகக் கொண்ட ஆனந்த பெருமாள், ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. பட்டம் முடித்த கையோடு வங்கிப் பணியிலும் சேர்ந்து பணி புரிந்திருக்கிறார். சில வருட வங்கி ஊழியர் பணிக்கு பின், தொழில் முனைவராக எண்ணியுள்ளார். அப்போது அவர் கையில் எடுத்தது தங்க நகைப் பிசினஸ். அத்தொழில் நட்டமில்லை என்றாலும், அவருக்கு அதில் நாட்டமில்லை.

அச்சமயத்தில் நம்மாழ்வார் பற்றிய துண்டுச் சீட்டு குறிப்பேடுகள் தொடங்கி முழுநீள வாழ்க்கை வரலாறு வரை அத்தனையும் தேடித்தேடி படித்திருக்கிறார். நம்மாழ்வார் மீது கொண்ட ஈர்ப்பால், பருவ வயதிலே காடு மலையென திக்கெங்கும் பயணித்த அவரது கால்கள், நம்மாழ்வாரை என்றெனும் சந்திப்பதற்கான பயணத்துக்காக காத்திருந்தது. பொது நிகழ்ச்சி ஒன்றில் நம்மாழ்வாரையும் சந்தித்துள்ளார் ஆனந்த பெருமாள். 

இருவருக்கும் இடையே நெடுநேர உரையாடல்கள் எல்லாம் நடந்தேறிடவில்லை. ஆனால், நம்மாழ்வார் வழி பின்தொடர்ந்திட அந்த சில நிமிட சந்திப்புகளே அவருக்கு போதுமானதாக இருந்தது. நம்மாழ்வாரின் இறப்புக்கு பின், அவர் நம் வையகத்துக்காக உருவாக்கி விட்டுச் சென்ற ‘வானகத்துக்கு’ (இயற்கை வேளாண்மை பயிற்சியளிக்கும் திறந்தவெளி பண்ணை) சென்றிருக்கிறார்.

ஃபேஷன் டூ புரோபஷன்

“முன்பே ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சிருந்தேன். அதில் ஒரு பாடப்பிரிவு மர அணிகலன்கள் தயாரிப்பு குறித்தது. நான் அதை அப்படியே தேங்காய் சிரட்டைகள் வைத்து செய்யத் தொடங்கினேன்.” 

பலரும் தேங்காய் சிரட்டையில் கம்மல்களும், கப்புகளும் செய்து வந்ததால், தனிச்சிறப்புடன் முயற்சித்தேன். நம்மாழ்வார் உருவ டாலர்கள் செய்தேன். அய்யாவின் நினைவேந்தல் நாளில், சிரட்டை, மரக்கட்டைகள் வைத்து சிறுசிறு சிற்பங்களை உருவாக்கி வைத்தேன். அதற்கு பலரும் பாராட்டியதுடன், சின்னச்சிறு சிற்பங்களுடன் இக்கலையை நிறுத்திவிட வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். அதே சமயம் சூழலை விரும்புவோர், அவர்களது இல்ல விழாக்கள், திருமணங்களுக்கு இயற்கை பொருள்களை கொண்டு மணமேடையினை அலங்கரித்துத் தரச் சொன்னர். 

”நண்பர்கள் இணைந்து பல நிகழ்ச்சிகளுக்கான மேடையை சிறப்பாக வடிவமைத்தோம். தொடர்ந்து நன்முறையில் சேர்ந்து பயணிக்கலாம் என்ற நோக்கில் நம்மாழ்வாரின் துணைவியார் சாவித்திரி அம்மா கையால், ‘நிகழ்’ என்று எங்கள் முயற்சிக்கு பெயரிட்டோம்,”

என்னும் அவர், அதுவரை வீண் என தூக்கியெறப்படும் கொட்டாங்குச்சிகள், மரக்கட்டைகளை ஆபரணங்கள், அலங்கார பொருள்கள் என்று அழகுப் பொருள்களாக மாற்றி வந்துள்ளார். அவரது கற்பனைக்கு ஏற்றாற்போன்று கைவிரல்களும் ஒத்திசைக்க, நாம் தேவையற்றது என்று உதாசீனப்படுத்தும் பொருள்கள் மறுஉருவம் பெற்று உயிர் பெற்று வந்தன.  

தாத்தா தோட்டத்துக்குள் ஒரு பசுமைத் திருமணம்

2016ம் ஆண்டு இறுதியில் நடந்த தாத்தா தோட்டத்துக்குள் ஒரு பசுமைத் திருமணம் இன்று வரை பலராலும் போற்றப்படுகிறது. ஏனெனில், இருமணங்கள் இணையும் நிகழ்வாக அத்திருமணம் நடந்து முடியவில்லை, பசுமை நிறைந்து திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அதில் பெரும்பங்களிப்பு ஆனந்த பெருமாளுடையது. 

திருமணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஆனந்த பெருமாளை அழைத்த தம்பதியினர், மணமக்கள் நடந்துவரும் பாதைத் தொடங்கி மணமேடை வரை ஒவ்வொரு அங்குலமும் எப்படியிருக்க வேண்டும் என்பதை ஏ டூ இசட் வரை எடுத்துரைத்துள்ளனர். அதற்கு “தாத்தா தோட்டத்துக்குள் ஒரு பசுமைத் திருமணம்” என்றும் பெயரிட்டனர். மணமேடைக்காக மண்மேடு அடித்து, மூங்கில் கம்புகள் பின்புறம் அடுக்கி, பசிலைக் கீரை விதைகளை விதைத்து வளரச் செய்து அந்த கொடிகளை மணமேடையின் அலங்காரங்களாக்கிய ஆனந்த பெருமாளை அந்நாளில் புகழாதோரில்லை. 

அத்திருமணத்தின் தாக்கமாய், பெங்களூரிலிருந்து பல விசேஷ வீட்டாரும் ஆனந்த பெருமாளை தொடர்புக் கொண்டு விழாமேடை அமைத்து தரக் கூறியுள்ளனர். இயற்கை ஆர்வலர் ம.செந்தமிழன் நடத்திய ‘பிறண்டை திருவிழாவில்' விறகுகள், கட்டைகளைப் பயன்படுத்தி அலங்கரித்த இயற்கை மேடை, ஆண்டுத்தோறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் நம்மாழ்வார் புத்தங்கள் விற்கும் ஸ்டாலை அலங்கரித்தது என ஆனந்த பெருமாள் அழகாக்கிய மேடைகள் ஏராளம். 

எங்கு யார் வீட்டு விசேஷமாக இருப்பினும் இருவீட்டாருள் ஒருவராகவே மாறிவிடும் அவர், இருவீட்டார்களிடமும் அவர்களது பாட்டனர் திருமணங்கள் எதுபோன்று அரங்கேறியது என்பதை கேட்டு தெரிந்துக் கொள்கிறார். 

மணமக்கள் வீட்டார் பொக்கிஷமாய் பாதுகாத்துவரும் பாராம்பரியப் பொருள்கள் இருப்பின் அப்பொருளும் மணமேடையை அலங்கரிக்க இணைந்து கொள்கிறது. தவிர, மணமேடை அமைப்பு இப்படித் தான் இருக்கும் என்று வரையறுத்தோ, இந்தெந்த இயற்கை பொருள்கள் பயன்படுத்த போகிறோம் என்று திட்டமிட்டோ அவர் மேடையை அமைப்பதில்லை.

“திருமண வீட்டார் எங்களை அழைத்தவுடன், முதலில் மண்டபத்தை சென்று பார்வையிடுவோம். மண்டபத்தில் இருந்து 5 கி.மீ பகுதியில் உள்ள இயற்கை சார்ந்துள்ள பொருள்களை கலெக்ட் செய்வோம். வெட்டப்பட்ட மரங்கள், வைக்கோல்கள், தென்னை ஓலை, மரவேர்கள், சம்பை புல் என்று கிடைக்கும் பொருள்களையெல்லாம் எடுத்துக் கொள்வோம். அரிவாள், ரம்பம், கடப்பாறை வைத்து தான் வெட்டப்பட்ட மரங்கள், மரவேர்களையெல்லாம் எடுப்பதால், உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும். அதே அளவு, கிரியேட்டிவாக சிந்திக்க வேண்டும். 

”இதுவரை 50 மணமேடைகள் அமைத்திருக்கிறோம். ஆனால், ஒன்றுக்குகூட முன்கூட்டியே மாதிரி வரைப்படம்கூட தயார் படுத்தியது இல்லை. இயற்கை மீது கொண்ட அதீத நம்பிக்கையில் தான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வோம். அந்த இடத்தில் ஒரு மேஜிக் நடக்கும். ஒவ்வொரு பொருள்களும் நம்மிடம் உரையாடும். அதற்கு மறுஉருவம் அளிப்பதற்கு அதுவே யோசனை வழங்கும்,” 

எனும் ஆனந்த பெருமாள், மணமக்கள் வீட்டாரில் மணமக்களோ, அல்லது சொந்த பந்தத்தில் ஒருவரோ மண்ணை நேசிக்கும் மனங்களாக இருப்பர், அதனால் தங்களை அழைத்து மணமேடை அமைக்க கூறினாலும், ஒட்டு மொத்த வீட்டாரும் இதில் ஒத்துபோவதில்லை என்பதால் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கிறது என்கிறார்.

கல்யாண கச்சேரியும், அதன் கலாட்டாவும்

அப்படி, ஒரு முறை பெரம்பலூர் பக்கத்தில் செட்டிக் குளம் எனும் ஊரில் நடந்த திருமணத்துக்காக மேடை அலங்காரம் செய்ய சென்றபோது நடந்த கலாட்டாவை பகிர்ந்துக் கொண்டார்...

“மண்டபத்துக்கு பக்கத்திலே ரோட்டை அகலப்படுத்துறேன்னு மரங்களை வெட்டி சாய்ந்திருந்தனர். வெட்டப்பட்ட மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை வலியுறுத்தும் நோக்கில், அதை வைத்தே மேடை அலங்கரிக்கலாம்னு ஒரு டாட்டா எல்சி நிறையா மரங்களை ஏத்திக்கிட்டு மண்டபத்துக்கு போயிட்டோம். மண்டபத்திலிருந்த காப்பாளர், நாங்க சமையல்காரங்க போல பிரியாணி பண்ண வந்திருக்கோம்னு நினைச்சுட்டு, நாங்க மரவேர்களை இறக்கி வைக்கும்வரை ஏதுமே சொல்லல. மேடைக்கு எல்லாத்தையும் தூக்கிட்டு போகவும், ‘தம்பி, தம்பி நில்லுங்க சமையல்கட்டு கீழ இறக்கு. கட்டைய தூக்கிட்டு என்ன மேடைக்கு போறீங்க’னு கத்த ஆரம்பிச்சுட்டார். இல்லங்க நாங்க டெக்ரேஷன் பண்ண வந்த ஆட்கள் சொல்ல, அவர் விடவே இல்லை. ஓனருக்கு தெரிஞ்சா திட்டுவாரு சொல்லவும், மாப்பிள்ளைட்டயே கேட்டுங்கோங்கனு போன் நம்பர கொடுத்துட்டோம். அந்த கேப்பில் ஜெட்டு வேகத்தில் மரவேர்களை வைத்து ஒரு கப்பலை வடிவமைச்சிட்டோம். அதைவிட, மாப்பிள்ளையோட அப்பா அந்த ஏரியாவில் பெரிய தலைக்கட்டு. அவருக்கு இதில் ஒரு பிடித்தமே இல்லை. விழாவுக்கு வந்தோர் அனைவரும் பாரட்டிய அப்புறம் தான், அவர் ஹாப்பியாகி கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னார்...” என்கிறார் அவர்.

அந்த கப்பல் செட்டிங்காக அவர் வாங்கிய தொகை வெறும் ரூ7 ஆயிரம் மட்டுமே. அழகுக்காக மணமேடை அலங்கரிக்க சொல்பவர்கள், பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவர்களிடம் ஆனந்தபெருமாள் காசுக்கூட வாங்குவதில்லை. 

மாதம் இரண்டு அல்லது மூன்று டெக்ரேஷன் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார். எல்லா செலவும் போக கையில் 40 ஆயிரம் நிற்கிறது எனும் அவர், விரும்பி கேட்போருக்கு பயிற்சியும் அளிக்கிறார். பெரியதாக முதலீடு தேவையில்லாத தொழிலின் மூலதனமே மூளை என்கிறார். 

 “அழகுக்காகவும், பெருமையாகவும் எண்ணி இயற்கைமேடைகளை அமைத்து தரக்கூறினால், வேலையை செய்வதற்கே நெருடலாக இருக்கிறது. இயற்கை வாழ்வியலை நேசித்து, இயற்கையை போற்றி பாதுகாத்து வாழ வேண்டும் என்ற சித்தாந்தை தான் வலியுறுத்த முற்பட்டு வருகிறேன். அதை புரிந்துக் கொண்டாலே போதும்,” என்கிறார் நிறைவாக! 

Related Stories

Stories by jaishree