ஷேர் செய்வதற்கு முன் கொஞ்சம் யோசிக்கவும்...

ஒரு வைரல் புகைப்படம் சொல்லும் பாடம்!

0

அந்த வைரல் வீடியோ காட்சியை நீங்களும் கூட பார்த்து ரசித்திருக்கலாம். அதோடு, அந்த வீடியோவை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். இப்படி உங்கள் நண்பர்(கள்) பகிர்ந்து கொண்டதால் தான் நீங்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறீர்கள்.

குட்டி கரடி ஒன்று பனிமலையில் ஏற முயற்சிக்கும் காட்சியை சித்தரிக்கும் வீடியோவை தான் குறிப்பிடுகிறேன். ஊக்கம் தரும் கரடி குட்டி என வர்ணிக்கப்படும் இந்த வீடியோ டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பகிரப்பட்டு வைரலாக பரவியிருக்கிறது. இன்னமுக் கூட பகிரப்பட்டுக்கொண்டிருக்கிறது.

படம்; அட்லாண்டிக்
படம்; அட்லாண்டிக்

தாய்க்கரடியுடன் பனி மலை உச்சியை ஏற முயற்சிக்கும் அந்த கரடி குட்டி, இரண்டு மூன்று முறை தவறி விழுந்தாலும், விடாமல் முயற்சி செய்து முடிவில் எப்படியோ உச்சியை அடைந்துவிடுகிறது. விடாமுயற்சியின் அடையாளமாக அமைந்திருக்கும் இந்த காட்சி ஊக்கம் தருவதாகவே அமைந்திருக்கிறது. பாருங்கள் இந்த குட்டிக் கரடியை, இரண்டு மூன்று முறை தவறி விழுந்தாலும், மனந்தளராமல் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த குட்டியை பார்த்து விடாமுயற்சியின் அருமையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தானாக சொல்லத்தோன்றும்.

அந்த எண்ணத்தில் தான் டிவிட்டரில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளனர். விடாமுயற்சியில் இயற்கை கற்றுத்தரும் பாடம் என்பது போன்ற குறிப்பு அல்லது போதனையோடு இந்த வீடியோவை பலரும் ஸ்லாகித்து தங்கள் நட்பு வட்டத்தில் எல்லாம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனும் விதத்திலும் பலரது பின்னூட்டங்கள் அமைந்துள்ளன. இத்தகைய வர்னணைகளோடு இந்த வீடியோவை பார்த்தால் இன்னும் அழகாக தான் இருக்கிறது. பெரும்பாலானோர் சொல்வது போல், இணையத்தில் காலை பொழுதை இனிமையாக்கித்தரும் வீடியோ தான் இது. நிச்சயமாக இணையத்தில் வைரலாக பரவி வெற்றி பெற்ற வீடியோக்களில், வாழ்க்கை பாடமாக அமையும் வீடியோ பட்டியலில் இந்த வீடியோவையும் சேர்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து மற்றவர்களுக்கு இதை பரிந்துரைக்கவும் செய்யலாம்.

ஆனால் இந்த வைரல் வீடியோ கதைக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. அந்த இன்னொரு பக்கம் இருண்ட பக்கமாகவும் இருக்கிறது. அதை தெரிந்து கொண்டால் உள்ளபடியே திகைப்பாக இருக்கும். இந்த வீடியோவையா பார்த்து ரசித்தோம், பாராட்டினோம் என நம்மை நாமே நொந்துக்கொள்ள வைக்கும்.

அதற்காக வீடியோவில் வரும் கரடிக் குட்டி செயலியில் ஏதோ தவறு இருப்பதாக நினைக்க வேண்டாம். பிரச்சனை வீடியோவில் அல்ல: அது எடுக்கப்பட்ட விதத்தில் இருக்கிறது.

இந்த வீடியோ, கரடிக் குட்டியின் விடா முயற்சியை உணர்த்துவதாக நினைக்கத் தோன்றுகிறது. இது சாமானியர்களின் பார்வை. உயிரியல் வல்லுனர்கள், இந்த வீடியோவை பார்த்து பதறிப்போயிருக்கின்றனர்.

இந்த வீடியோ காட்சி ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் வைரல் ஹாக் எனும் வீடியோ தளம் இதை வெளியிட்டது. அந்த தளத்தில் இருந்து கனடா பத்திரிகையாளர் ஜியா டாங் என்பவர் இதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். இந்த கரடிக்குட்டியிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம், ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள் என அவர் கூறியிருந்தார். அதன் பிறகு இந்த வீடியோ லட்சக்கணக்கான முறை டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வைரலானது. இது பழைய கதை.

எல்லோராலும் பகிரப்பட்டு, பாராட்டப்படும் இந்த வீடியோவை பார்த்த உயிரியல் வல்லுனர்களோ, வேறு கதையை சொல்கின்றனர். இந்த வீடியோ ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தால் எடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டுகின்றனர். அதனால் என்ன என்று கேட்கலாம். ட்ரோன் என்றால் என்னவென்று அறியாத தாய் கரடியும், குட்டியும், அதை கண்டு மிரண்டு போயிருப்பதை தான் இந்த வீடியோ காட்சி உணர்த்துவதாக வல்லுனர்கள் சொல்கின்றனர்.

உண்மையில், கரடி ரிஸ்க் எடுக்கும் விலங்கே அல்ல. ஆனால் டிரோனை பார்த்து தங்களை தாக்க வந்த பொருள் என பயந்து போன நிலையில் தான் தாய் கரடியும், குட்டியும் அதிலிருந்து விலக மலை உச்சியை கடக்க முயற்சித்துள்ளன. இதில் பாவம், குட்டிக் கரடி விழுந்து புரண்டு உச்சியை எட்டிப்பிடித்திருக்கிறது. எனவே, இதில் பார்க்க வேண்டியது விடாமுயற்சியை என்பதை விட, அந்த நிலைக்கு அப்பாவி கரடிகளை தள்ளிய ட்ரோன் வீடியோ பதிவாளரின் பொறுப்பற்ற தனத்தை தான் என்று அவர்கள் விளாசியுள்ளனர். 

அல்ஜஸிரா தொலைக்காட்சி இது பற்றி விளக்கம் அளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் நேஷனல் ஜியாக்ரபிக் இதழ்கள், உயிரியல் வல்லுனர்கள் பார்வையோடு இந்த வீடியோவுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரையை வெளியிட்டுள்ளன.

”இந்த வீடியோவை என்னால் பார்க்கவே முடியவில்லை என சோபி கில்பர்ட் எனும் ஆய்வாளர் அட்லாண்டிக் இதழில் கூறியிருக்கிறார். இந்த வீடியோ ட்ரோனால் தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ள சோபி” 
படம்-டிவிட்டர்
படம்-டிவிட்டர்

தன்னுடைய செயல் கரடிகள் மீது எத்தகைய விளைவு உண்டாக்கும் என்பது பற்றி வீடியோ எடுத்தவருக்கு எந்த புரிதலும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

அழகான காட்சிக்கு ட்ரோன் பதிவாளர் ஆசைப்பட்டதன் விளைவாக அந்த கரடிகள் பீதிக்கு உள்ளாகி இருக்கின்றன என்று சோபியை உயிரியல் வல்லுனர் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். இத்தனை சின்ன கரடியுடன் தாய் கரடி ஒரு போதும் ஆபத்தான பனிமலையில் ஏற முயற்சித்திருக்காது, ஆனால் டிரோனை பார்த்து மிரண்டு போய் அந்த நிலை தள்ளப்பட்டுள்ளதாக வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

எனவே, கரடி குட்டியின் வீரத்தை பாராட்டுவதை விட, அதை இந்த நிலைக்கு தள்ளும் வகையில் ட்ரோனை பறக்க விட்டு மிரட்டியவரின் பொறுப்பற்ற செயலை கண்டிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஒரு சிலர், அந்த கரடி, ட்ரோனை பார்த்து கழுகு என்றும் மிரண்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

ட்ரோன் பயன்பாடு தொடர்பான விவாத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளை படம் பிடிக்க ட்ரோன்களை பயன்படுத்தும் போது, விலங்களின் வாழ்விடம், அவற்றின் தன்மை போன்றவை அறிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துவதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆக, இந்த கரடி வைரல் வீடியோ, நமக்கு சொல்லா சேதியும் ஒன்று இருக்கிறது. எந்த வீடியோவையும் பகிர்ந்து கொள்வதற்கு முன், அதன் உள்ளடக்கம், அது எடுக்கப்பட்டவிதம் போன்றவை குறித்து கொஞ்சம் யோசித்து பார்ப்பது நல்லது எனும் சேதி தான் அது.