அசத்தல் வழியில் திருமண நிகழ்ச்சி: விவசாயிகளுக்கு உதவியபடி கரம்கோத்த காதலர்கள்!

0

இந்திய திருமணங்கள் என்றாலே பிரம்மாண்டம், ஆரவாரம், மற்றும் விதவிதமான அறுசுவை உணவுவகைகள் என்பது எல்லோருடைய நினைவுக்கும் வரும் விஷயம். கல்யாணம் என்றால், வசதியான பணக்காரக் குடும்பங்கள் மட்டும் பணத்தை வாரி இறைப்பது இன்றி சாதரண நடுத்தர மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களும் தங்கள் வீட்டுத் திருமணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடவே ஆசைப் படுகின்றனர். ஆனால் அமராவதியைச் சேர்ந்த இந்த இளம் ஜோடி, தங்கள் திருமணத்தை எளிய முறையில் நடத்த முடிவு எடுத்து, தங்கள் திருமண செலவை, கஷ்டத்தில் வாடி தற்கொலை வரை செல்லும் விவசாயிகளுக்காக தியாகம் செய்ய முடிவு செய்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  

அபெய் தெவாரே மற்றும் ப்ரீத்தி கும்பரே இருவரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தனர். திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணத்தை வறுமையில் வாடி வாழ வழியில்லாமல் தவிக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி புரிய, தங்களது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவெடுத்தனர். நாக்பூரில் பயிற்சி ஐஆர்எஸ் அதிகாரியான மாப்பிள்ளை, ஐடிபிஐ பேங்க் துணை மேலாளரான மணப்பெண்ணும், யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.  

கடந்த ஞாயிறு அமராவதியில், அபியந்த பவன் எனும் இடத்தில் மிக எளிய முறையில் மணம் புரிந்தனர் இந்த ஜோடி. அது ஒரு திருமண நிகழ்ச்சி போலல்லாமல் ஒரு கருத்தரங்கம் போல காட்சியளித்தது. திருமண மேடையில் விவசாயிகள் நலனுக்காக போராடும் சமூக ஆர்வலர் சந்தரகாந்த் வாங்கடே திருமண விருந்தினர்களிடம் விவசாயிகள் நிலை குறித்து பேசினார். இது சம்பந்தமான போஸ்டர்களும், பேனர்களும் கூட திருமண ஹாலில் ஒட்டப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

திருமணங்களுக்கு நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்?

ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் கோடிரூபாய் வரை, திருமணங்களுக்காக இந்தியாவில் செலவு செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த பட்ஜெட்டின் மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்திகளின் படி, அபெய் தெவாரே, ப்ரீத்தி கும்பரே இந்திய திருமண முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுத்தனர். தங்கள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தை அவர்கள் நன்கொடை செய்ய முடிவு செய்தனர்:

1. 10 விவசாய குடும்பங்களுக்கு தலா 20000 ரூபாய் நன்கொடை வழங்கினர். இந்த 10 குடும்பங்களின் குடும்பத்தலைவர்கள் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தற்கொலை செய்துகொண்டதால் அவர்களின் குடும்பத்துக்கு உதவ முடிவெடுத்தனர். 

2. அமராவதியில் உள்ள தங்களின் பூர்வீக கிராமம் உட்பட ஐந்து லைப்ரரிகளுக்கு 52000 ரூபாய் மதிப்புள்ள போட்டி தேர்வு புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

3. திருமண விருந்தில் உணவுவகைகள் எளிமையாக இருந்தது. 

4. பிரபலமான சமூக ஆர்வலர்களின் உத்வேகம் மற்றும் அறிவுப்பூர்வமான மேடை பேச்சுகள் திருமணத்தில் இடம் பெற்றது. 

இந்த இளம் ஜோடியின் முயற்சியை உத்வேகமாக எடுத்துக் கொண்டு இவர்களை போல் பலரும் சமூகத்தை பற்றி சிந்தித்து, ஏழ்மையில் வாடுவோர்களுக்கு உதவ முன் வரவேண்டும். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்