வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி, 26 பஞ்சாயத்துகளின் தலைவியாகிய ‘மொரம் பாயின்’ கதை

0

மொரம் பாய் தன்வார், மேல்படிப்பைத் தொடர விரும்பினார், ஆனால் அவருடைய குடும்பத்தினரால் அதை செய்ய முடியவில்லை. அவரின் தந்தை ஒரு பணிவான விவசாயி, மேலும் மொரம் பாய்க்கு 8 உடன் பிறந்தவர்கள் இருந்ததால் அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டி இருந்தது. எட்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் கனத்த இதயத்தோடு தன் படிப்பை விட்ட அவரை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர் குடும்பத்தினர்.

மொரம் பாயின் திருமணத்தின் போது சொன்னது போல அவருடைய தந்தையால் வரதட்சணை கொடுக்க முடியாததால் மொரம் கொடுமைப்டுத்தப்பட்டார். இறுதியில் கொடுமை தாங்க முடியாமல் தன் கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் அந்த வலியை உணர்ந்த போதும் நம்பிக்கையை தளரவிடவில்லை.

சுயமாக கல்வி கற்க முடிவு செய்தார். சுயமாகவே கணினி பயிற்சி எடுத்துக் கொண்டார், மெட்ரிக் படிப்பை முடித்து ஆசிரியையானார். அவருடைய குறிக்கோள் எளிமையானது – தன்னைப் போல வேறு எந்த பெண்ணுக்கும் இந்த விதி ஏற்படக் கூடாது, அதே போன்று சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் தன்னை சார்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

தன் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இன்று அவர் ராஜஸ்தானின் ஜலவார் மாவட்டம், மனோகர் தானாவின் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார். மேலும் அந்தப் பகுதியில் உள்ள 26 பஞ்சாயத்து குழுக்களை தலைமை ஏற்று நடத்துகிறார். இவருடைய முனைப்பால் அந்தப் பகுதி பெண் கல்வி மற்றம் சுகாரதத்தில் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மரியாதையை இன்றைய நிலையில் பெற்றாலும், அவருடைய எளிமையான வாழ்க்கை முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது மேலும் அவருடைய உயரிய சிந்தனை பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.

தன் உடன் பிறந்த 9 பேர்களில் மொரம் தான் மூத்தவர். அவருடைய தந்தை விவசாயி. பதின் பருவத்திலேயே பள்ளி வாழ்க்கையை விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டாலும் அவர் தன்னுடைய கனவை விட்டுக் கொடுக்கவில்லை. தன் படிப்பைத் தொடர விரும்பிய மொரம் சமுதாயத்தில் தாழ்ந்த மற்றும் நடுத்தரவர்க்கத்தினருக்கு கல்வி கற்பிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமாக ‘லிட்ரசி இந்தியா’வில் சேர்ந்து கொண்டார்.

நாள்தோறும் தன்னுடைய கிராமத்தில் இருந்து 16 கி.மீட்டர் தூரம் கல்வி பயில அவர் நடந்தே சென்றார். அவர் தையல் கற்றுக் கொண்டு விரைவிலேயே அதில் சிறந்தும் விளங்கினார். அதையும் தாண்டி அவர் கணினி கற்றுக் கொண்டார். படிப்பின் மீதான ஆர்வம் அவரை ஆட்கொண்டது, விரைவிலேயே அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மொரமை ஆசிரியையாக சேரச் சொன்னது. தன்னுடைய கிராமத்தில் சுதந்திரமாக செயல்பட விரும்பிய பெண்களுக்கு வாழ்க்கைத் திறன்களை மொரம் கற்றக் கொடுக்கத் தொடங்கினார்.

மொரம் தன்னுடைய கிராம பஞ்சாயத்து குழுவில் கணினி செயல்பாட்டாளராக சேர விரும்பினார். அந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்ட போது, அதற்கு கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கணினி கல்வியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பணியை பெறுவதற்காக மொரம் தன்னுடைய படிப்பை திறந்தவெளி பள்ளியில் தொடர்ந்து மெட்ரிக் படிப்பை முடித்தார். அந்தப் பணிக்குத் தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டு அதை பெற முடியும் என்று நம்பினார்.

ஆனால் விதி அவருக்கு கை கொடுக்கவில்லை, தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தன் வாழ்க்கையின் நீண்ட போராட்ட பாதையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதை விட்டுவிடவில்லை அதே சமயம் ஆசிரியையாகவும் தன் பணியைத் தொடர்ந்தார்.

விரைவிலேயே மொரம், செய்தித்தாள்கள் வாயிலாக அவருடைய மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் தகவலை அறிந்து கொண்டார். விருப்பமுள்ளவர்களிடம் இருந்து அவர்கள் வேட்புமனு கேட்டிருந்தனர். அரசியலில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், தன்னுடைய பணியை மேலும் மெருகேற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு என்று மொரம் கருதினார். நிறைய மக்களை தொடர்பு கொண்டு பெண்கள் மேம்பாட்டுக்கு உதவுவதோடு அந்தப் பகுதியில் வாழ்வோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர் விரும்பினார்.

ஆசிரியையாகவும் பெண்கள் உரிமைகக்காக போராடுபவராகவும் மொரம் ஏற்கனவே அந்தப் பகுதியில் பிரபலம் அடைந்திருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்ததும் அவருக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளித்தனர். 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். முக்கிய குழுவுக்கான தேர்தலிலும் வென்று விரைவிலேயே அந்த மாவட்டப் பஞ்சாயத்து செயலாளராகவும் ஆகிவிட்டார் அவர்.

தன்னுடைய அன்றாட செயல்களான பெண்களுக்கு அடிப்படை வாழ்க்கைத்திறன்களான தையல் மற்றும் கணினியை பயிற்றுவிப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மொரம், பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் செயல்களை செய்து முடிக்கவே போட்டியிட்டதாகவும் கூறுகிறார். ஏழைகள் மற்றும் வருமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் நலனுக்காக அரசு வகுத்துள்ள ஒவ்வொரு கொள்கையையும் அவர்களுக்குச் சென்றடையச் செய்வதே தன்னுடைய குறிக்கோள் என்று சொல்கிறார் அவர்.

தூய்மையான இந்தியா இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மொரம் கடினமாக உழைத்து வருகிறார். மொத்தமுள்ள 26 பஞ்சாயத்துகளில், இரண்டு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற பஞ்சாயத்துகளிலும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே போன்று பெண்கள் நலன் மற்றம் கல்வியை மையப்படுத்தி அவர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

குழந்தைகளின் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் அந்தப் பகுதியில் அங்கன்வாடியை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். ஏழைகளுக்கான குடும்ப அட்டை, ஓய்வூதியம், ஊக்கத்தொகை, பணி உத்தரவாதம், வேலையில்லாதோருக்கு உதவித்தொகை இன்னும் பல அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைவதில்லை என்கிறார் மொரம். இந்த திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பணியாற்ற உள்ள அவர், அதே சமயம் ஒவ்வொரு குடிமகனும் தங்களின் உரிமைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

மொரம், பெண்கள் ஆதார் அட்டையை பெறவும், அவர்களுக்கு காப்பீட்டுக்கான உத்தரவாதம் அளிப்பது, பெண்களை என்ஆர்ஈகிஏ (NREGA) மற்றும் இதர நல உதவித்திட்டங்களில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக செய்த வருகிறார். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கொடுமையை அனுபவித்து தற்போது 26 பஞ்சாயத்துகளின் செயலாளராக மொரம் அசுர வளர்ச்சி கண்ட போதும், அவர் எளிமையான வாழ்க்கையை தொடரவே விரும்புகிறார். மொரம் தன்னுடைய ஓய்வு நேரத்தை பெண்களுக்கு கற்பிக்கவும் அவர்கள் சொந்தக் காலில் நிற்கவும் உதவுகிறார்.