மூத்த குடிமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் சீனியர் வேர்ல்ட்

70 வயதை தாண்டியவர்கள் சாதாரண போன்களை பயன்படுத்தவே கடுமையாக போராடுகின்றனர்.

0

நமது இந்தியாவில் மூத்த குடிமக்களின் ஜனத்தொகை 12 கோடியை நெருங்கிவிட்டது. இந்த எண்ணிக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு மக்கள் தொகையை இணைத்து வருவதை விட அதிகம். இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக மூத்த குடிமக்களின் வளர்ச்சி விகிதம் அமைந்துள்ளது. வரும் 2026 இல் முதியவர்களின் தொகை 17 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

ராகுல் குப்தாவிற்கு 50 வயதாகும்போது மூத்த குடிமக்களை பற்றி சிந்திக்க துவங்கினார். ஒரு மிகப்பெரிய குடும்பத்தின் உறுப்பினரான ராகுல், முதியவர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். அவர்களது அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றபட முடியாமல் இருப்பதை நேரில் கண்டுள்ளார்,

சில வருடங்களுக்கு முன், தனியார் தொலை தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ராகுல், அந்த நிறுவன வேலையை உதறிவிட்டு சொந்தமாக ஒரு நிறுவனம் துவங்க முடிவு செய்தார். அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, அவர்களது தேவைகளுக்குத் தீர்வை ஏற்படுத்தும் வகையிலான தொழில் தளத்தை உருவாக்க திட்டமிட்டார். இதனையடுத்து, ராகுல் அவரது நண்பர் தீபுவுடன் இணைந்து சமூகத்தில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தொழிலைத் துவங்கினார்.

தொடர்ந்து, இருவரும் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் "சீனியர் வேர்ல்டு" என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினர். மூத்த குடிமக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் களமாக சீனியர் வேர்ல்ட் உருவானது. அத்துடன் ஈசிபோன் என்றொரு வகை போனையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த வகை போன், மூத்த குடிமக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. கூடவே, துணிகள், குளியலறையில் பயன்படுத்தும் விரிப்புகள் உட்பட மூத்த குடிமக்கள் எளிதில் சுலபமாக பயன்படுத்தும் வகையிலான பல பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டனர்.

“அநேகமாக மூத்த குடிமக்கள் பயன்படுத்தும், அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். நான் 60 வயதினை தொடும்போது, அவற்றை பயன்படுத்தும் நபர்களில் ஒருவராக இருப்பேன். “ என நகைச்சுவையுடன் கூறுகிறார் ராகுல்.

மூத்த குடிமக்களை உற்சாகமாகவும், சுதந்திரமாகவும், அவர்கள் தேவையை அவர்களாகவே நிறைவேற்றி கொள்ள செய்வதும் தான் இத்திட்டத்தின் நோக்கம். பொருட்கள் மற்றும் சேவைகளை மூத்த குடிமக்களுக்கு வழங்குவதையும் தாண்டி சீனியர்வேர்ல்ட் நிறுவனம் அவர்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு வழிவகை செய்கிறது. இந்த அமைப்பின் ஃபேஸ்புக் சீனியர் கம்யுனிட்டி குழுவில், 33000 உறுப்பினர்களை கடந்து நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தங்களது பொருட்களை பற்றி ராகுல் கூறும்போது, மூத்த குடிமக்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் அதே வேளையில் அவர்களது சுதந்திரத்தையும் உறுதிபடுத்தும் நோக்கில் ஈசிபோன் உருவாக்கப்பட்டது. எளிதில் டயல் செய்து கொள்ள கூடிய வகையில் 8 புகைப்படத்துடன் கூடிய தொடர்புகளும், ஒரு எஸ்ஓஎஸ் பட்டனும், அதனை அழுத்தினால் ஒரு சைரன் ஒலியும், 5 பேருக்கு குறுந்தகவல்கள் போய் சேரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ தகவல்கள், டார்ச் உள்ளிட்ட பயனுள்ள பல பயன்பாடுகள் இதில் உள்ளன.

“பல மூத்த குடிமக்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில், மிகப்பெரிய எண்ணிக்கையிலான மூத்த குடிமக்கள், குறிப்பாக 70 வயதை தாண்டியவர்கள் சாதாரண போன்களை பயன்படுத்தவே கடுமையாக போராடுகின்றனர். வயது தொடர்பான பிரச்சினைகளே இவற்றிற்கு காரணம். ஈசிபோனை பயன்படுத்தும் 65 வயது முதல் 95 வரை வயதான முதியவர்கள் பலர் எங்களிடம் உள்ளனர். அவர்களில் சிலர் முதன்முதலாக பயனபடுத்தும் செல்போனாக ஈசிபோன் உள்ளது. இது பெரிய அளவில் அவர்களுக்கு பயனளிப்பதால் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார் ராகுல்.

வளர்ச்சி

மாதமாதம் 35 சதவீத விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றத்தைத் தருகிறது. கடந்த நான்கு மாதங்களில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறுகிறார் ராகுல்.

சொந்தமாக நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் இதுவரை 1.5 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் குழுக்களை கட்டமைக்கவும், பொருட்கள் உற்பத்திக்காகவும், அவற்றை விற்பனை செய்வதற்காகவும், ஈசிபோனின் இருப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

“அதிக மக்கள் இணைந்து வருவதால், எங்களது முதலீட்டை இனி வரும் மாதங்களில் தொடர்ந்து அதிகப்படுத்த உள்ளோம். அடுத்த மூன்று மாதங்களில் தொழில்நுட்ப ரீதியாகவும், சுகாதாரம் சம்பந்தமான பல பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 2016 இல் 1 மில்லியன் டாலர் வருவாயைக்கான திட்டமிட்ட இலக்கை நிர்ணயித்துள்ளோம்” என கூறுகிறார் ராகுல்.

உத்தேச கணக்குகளின்படி, 35000 கோடி ரூபாய்க்கான சந்தை இந்த பொருட்களை மையமாக வைத்துள்ளது. இது இனிவரும் வருடங்களில் 29 சதவீதம் வளர்ச்சியடைந்து 96000 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக பல கம்பெனிகள் இந்தத் துறையில் களமிறங்கியுள்ளன. குட் ஹான்ட்ஸ், சீனியர் ஸெல்ப், பிரமாதி கேர், சீனியர் வேர்ல்ட் , மற்றும் சில்வர் டாக்கீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அவற்றில் குறிப்படத்தக்கவை. இவைகள் அனைத்துமே தங்கள் முதிய உறவினர்கள் சந்திக்கும் மோசமான அனுபவங்களைக் கொண்டு, அவர்களுக்குச் சேவை செய்வதற்காக இளைஞர்களால் துவங்கப்பட்டவை.

இணையதள முகவரி: Senior World

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற முதியோர்களுக்கு சேவை புரியும் நிறுவனம் தொடர்பு கட்டுரைகள்:

முதியோர்களின் வாழ்வில் இளங்காற்றை வீசும் ட்ரிபேகா கேர்!

மூதியோர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் 'சில்வர் சர்ஃபர்ஸ் கிளப் '