ஃபேஸ்புக்கில் வைரலாகிய இந்தியா-பாகிஸ்தான் தேசிய கீதத்தின் மிக்ஸ் பாடல்...

0

அகமது ஜி சக்லா, பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதத்தை 1949-ம் ஆண்டு இயற்றினார். அதே போல் இந்திய தேசிய கீதத்தை ரபிந்திரநாத் டாகூர் 1950-ம் ஆண்டு எழுதினார். அன்று தனித்தனியாக இயற்றப்பட்ட அந்த இரு தேசிய கீதமும் 70 ஆண்டுகள் கடந்து இன்று ஒன்றிணைத்து இசைக்கப்படும் என்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். ‘வாய்ஸ் ஆப் ராம்’ என்ற ஃபேஸ்புக் குழு ஒன்று இரு பாடல்களையும் இணைத்து ஒரே பாட்டாக இயற்றி அதை வெளியிட்டுள்ளது. அப்பாடலுக்கு அமோக வரவேற்பும் கிட்டியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பல இசைக்கலைஞர்கள் தோன்றும் அந்த பாடலில், ‘பாக் சர்சமான்’ மற்றும் இந்தியாவின் ’ஜன கன மன’ பாடலும் சேர்த்து ஒரு புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. 

“நாம் நம் எல்லையை கலைக்காக திறந்தோமானால், அமைதி தானாக வந்துவிடும். நாம் அமைதிக்காக ஒன்றிணைந்து நிற்போம்,” என்ற வரிகளோடு தொடங்குகிறது அந்த வீடியோ.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கீதத்தின் கலவையாக உள்ள இப்பாடல் சமூக ஊடகங்களில் பெரிய ஹிட் ஆகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் அப்பாடலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அன்பு மற்றும் அமைதியை முதன்மையாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த பாடல் இரு நாட்டு மக்களுக்கு அமைதியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

ஃபேஸ்புக்கில் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளுடன், 15 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த பாடல். இது போன்ற வீடியோக்களை வருங்காலத்தில் இயக்க தேவைப்படும் செலவை கூட்டு நிதி மூலம் பெற அந்த குழுவினர் முயற்சித்து வருகின்றனர். 

வாய்ஸ் ஆப் ராம், குழுவின் தலைவரும் இயக்குனருமான ராம் சுப்ரமணியன் கூறுகையில்,

“மக்கள் பலரும் அமைதி பற்றி பேசவே அஞ்சுவதால், நான் இந்த வீடியோவை தயாரித்தேன். அது தேவையில்லாத பயம். என்னைப் பொறுத்தவரையில் இந்த பாடல் ஆரம்பம் மட்டுமே. அமைதிக்கான ஒரு சிறிய முயற்சி,” என்றார். 

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகஸ்டு 14,15 என்று அடுத்தடுத்து தங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் இச்சமயத்தில் வெளிவந்துள்ள இந்த வீடியோ இரு நாடுகளுக்கும் ஒரு அழுத்தமான விஷயத்தை முன் வைத்துள்ளது. 

கட்டுரை: Think Change India