கடத்தப்பட்டு மீட்கப்பட்ட 30 பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த பிறந்தநாளை கொண்டாடும் பெண்!

0

வெவ்வேறு மக்கள் தங்களது பிறந்தநாளை வெவ்வேறு விதத்தில் அணுகுவார்கள். சிலர் வயதானதை நினைத்து கவலை அடைவார்கள். சிலர் அதை கொண்டாடும் தருணமாக கருதுவார்கள். ஆனால் த்ரினா தத்தா 30-வது வயதில் அடியெடுத்து வைப்பதை சிறப்பான தருணமாகவே கருதுகிறார். இந்தத் தருணத்தில் 30 இளம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தீர்மானித்தார். 

இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் (ISB) எம்பிஏ பட்டதாரியான த்ரினா கூட்டுநிதி முயற்சி ஒன்றை துவங்கத் தீர்மானித்தார். அவரது பிறந்த நாளை ஒட்டி அவர் மேற்கொள்ளும் இந்த முயற்சியானது ’ஸ்மால் சேஞ்ச்’ என்கிற லாபநோக்கமற்ற நிறுவனம் 30 பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும். இந்நிறுவனத்தின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கோ அல்லது ஏதேனும் ஒரு நோக்கத்திற்காகவோ நிதி உயர்த்தி இதுபோன்ற சிறப்பு தருணங்களைக் கொண்டாட இந்நிறுவனம் வாய்ப்பளிக்கிறது. இங்குள்ள பெரும்பாலான பெண்கள் கொடிய சூழ்நிலைகளிலிருந்து மீட்கப்பட்டு இங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

கொடையாளர்கள் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து உதவ முன்வருமாறு வலைதளத்தில் குறிப்பிடுகையில்,

“இது என் 30வது பிறந்தநாள். இந்த நாளில் சிலர் எனக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பலாம். இந்த ஆண்டு எனக்கான பிறந்தநாள் பரிசாக கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட 30 பெண்கள் தகவல் தொழில்நுட்பத் திறனை வழங்க உதவுங்கள்,” என்றார்.

த்ரினா ரஹத் (Rahat) என்கிற அரசு சாரா நிறுவனத்தின் கூட்டணியுடன் iPartner India-வின் திட்டத்திற்காக நிதி உயர்த்தத் தீர்மானித்தார். ரஹத் வங்காளம் மற்றும் நேபால் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வு அளித்ததும் அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக தகவல் தொழில்நுட்பத் திறனில் பயிற்சி அளிக்கின்றனர். மூன்றாண்டுகளாக செயல்பட்டு வரும் ரஹத் நிறுவனம் இதுவரை 50,000-க்கும் அதிகமான பெண்களை மீட்டுள்ளது.

த்ரினாவின் குடும்பம் எப்போதுமே சமூக நலனில் அக்கறை எடுத்துக்கொண்டதாகவும் அதனால் இந்த முயற்சி எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இயற்கையாகவே வந்ததாகவும் அவர் ’தி பெட்டர் இண்டியா’ உடனான உரையாடலில் குறிப்பிட்டார்.

”இது குறித்து நான் கேள்விப்பட்டபோது என்னுடைய பிறந்தநாளை இதைவிட சிறப்பாக கொண்டாட முடியாது என்றே நினைத்தேன். நான் எப்போதும் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் இதுவரை பெரிதாக எதிலும் பங்களித்ததில்லை. எனக்குத் தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளது. எனக்குப் பிடித்தமான பரிசுப்பொருட்களின் பட்டியல் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும் பல நண்பர்களும் சக பணியாளர்களும் என்னுடன் இருக்கையில் ஏன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது என வியந்தேன். 

"முதலில் தயங்கினேன். மக்கள் என் பிறந்தாளுக்கு நிச்சயம் பரிசுப்பொருட்கள் வழங்குவார்கள் என யூகிப்பது சற்றே தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதனால் 30 பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் தயக்கம் காட்டவேண்டாம் என நினைத்தேன்,” என விவரித்தார்.

த்ரினாவின் முயற்சிக்கு 2.10 லட்ச ரூபாய் தேவைப்பட்ட நிலையில் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு 30 நன்கொடையாளர்களிடமிருந்து 2.25 லட்சத்திற்கும் அதிகமாக நிதி உயர்த்தினார்.

கட்டுரை : THINK CHANGE INDIA