நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் தலையீடுகள்!

0

வங்கி சேவைகளை எளிதில் பெறமுடியாத பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக இந்திய அரசு "ஜன்தன்யோஜ்னா", ஆதார் அட்டைகள், வங்கி உரிமைகள் என பல வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம், தொழில்நுட்பம் வாயிலாக நிதி சேவைகளை வழங்கும் ஃபின்டெக் நிறுவனங்கள் பின் தங்கியவர்களுக்கான நிதி வசதிகளை பெறுவதை சிக்கலாக்குகின்றன. 2020-ல் இந்தியாவில் மொபைல் வாலெட்டின் மதிப்பு 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்கிறது ஒரு அறிக்கை. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள், மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே செல்வது, அரசின் அதீத கவனம் ஆகியவயே இந்த பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு காரணம்.

ஜனவரி 26-ல் நடந்த ஸ்டார்ட் அப் இந்தியா நிகழ்ச்சியில், ஃபின்டெக் நிறுவனங்களின் உரிமையாளர்களும், தொழில் வல்லுனர்களும் வளர்ந்துவரும் தொழில்முனைவோர்களுடன் ஒரு சின்ன டிஸ்கஷனை நடத்தினார்கள். iSPRIT நிறுவனத்தை தோற்றுவித்த சரத் ஷர்மா வழி நடத்திய அந்த நிகழ்ச்சியில், பேடிஎம் நிறுவனர் சேகர் ஷர்மா, Eko Financials நிறுவனர் அபிஷேக் சின்ஹா, டிஜிட்டல் பைனான்ஸ் பிளஸ் அமைப்பு, மூத்த நிதித்துறை வல்லுனர் கபீர் குமார், Atherton Capital எம்.டி நிதின் மேத்தா, நிறுவனர் கார்ல் மேத்தா, Edcast நிறுவன தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

'இங்கே எத்தனை பேர் இந்தியாவிற்கு இன்னொரு உபெர் வேண்டும் என நினைக்கிறீர்கள்? -இந்த சுவாரசியமான கேள்வியோடுதான் அந்த நிகழ்ச்சி தொடங்கியது.

அடுத்த உபெர் போன்ற நிறுவனம், நிதித்துறையிலிருந்துதான் வரும் என்கிறார் சரத் ஷர்மா, ஆதார் எண் வைத்திருக்கும் 942 மில்லியன் மக்களுக்கும் சேவைகளை வழங்கஃ பின்டெக் நிறுவனங்களால் முடியும். இப்படி ஒரு கட்டுமான அமைப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும், இதன் மூலம் பின் தங்கிய, ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் வங்கி சேவைகளை வழங்க முடியும் எனவும் பெருமையாகக் கூறினார் சரத்.

சின்ஹாவை பொறுத்தவரை, கட்டண சேவைத்துறையில் நுழைய இதுவே சரியான தருணம். அடுத்த 2,3 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களும் ஆதார் எண்ணும் உள்ள 400 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்தத் துறையில் நுழைவார்கள். அரசு எக்கச்சக்கமான வங்கிக் கணக்குகளை தொடங்குவதால் நம்மிடம் ஏராளமான தரவுகள் வந்துசேர்ந்த வண்ணம் உள்ளன. ரிசர்வ் வங்கி முதல்முறையாக 20 உரிமங்களை வழங்கியுள்ளது. கட்டண சேவைத்துறையின் அமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக மாறவில்லை.

இந்தியாவின் நிதித்துறை சேவைகளில் இருக்கும் குறைபாடுகளை பற்றி பேசிய குமார், அந்தக் குறைகளை களைவதில் முதலடி எடுத்துவைத்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவை புகழ்ந்தார். நிதித்துறை சேவைகளுக்கு இந்தியா ஏன் அமுதசுரபியாக இருக்கிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறினார் அவர். ஒன்று, வங்கிக் கணக்கு இல்லாத மக்கள் இங்குதான் அதிகம். இரண்டாவது, முறையான கொள்கைகள், சரியான கட்டமைப்பு, வளர்வதற்கான சூழல் ஆகியவை ஒருங்கே இங்கே அமையப் பெற்றிருப்பது.

நிதித்துறை சேவைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கினால் வறுமையை ஒழித்துவிடலாம் என்பது கார்ல் மேத்தாவின் வாதம். இந்தியாவின் நிதியமைப்பில் யார் வேண்டுமானாலும் மாற்றத்தைக் கொண்டு வரலாம், ஆனால் அமெரிக்க நிதித்துறையில் இது முடியாது என்கிறார் அவர்.

"நான் பேடிஎம்மை தொடங்கும்போது மிகப்பெரிய ரிஸ்க்கை எடுப்பதாக எச்சரிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் மக்கள் சில்லறை வணிகத்தில் அதிக ஈடுபாடு காட்டினார்கள். ஆனால், ஸ்மார்ட்போன்களின் வருகை மக்களின் வழக்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. 15 மாதங்களில் எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக உயர்ந்தது" என்கிறார் விஜய் சேகர் ஷர்மா.

பேடிஎம் நிறுவனம் சீனாவின் அலிபாபா நிறுவனத்திடமிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது. ஜூலை மாதம் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற எண்ணிக்கையை எட்டிய இந்த நிறுவனத்தின் ஜி.எம்.வி 10,000 கோடி.

"இந்தியாவில் எல்லாருக்கும் வேலை கிடைக்கும். அதனால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை முன்னேற்றுவது நம் கடமை. ஒரு ஓலா கேப் ஓட்டுனர் மாதம் 60 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். நாம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண் ஒருவருக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தால் அவர் முன்னேறிவிடுவாரே" என்றார் நிதின் மேத்தா.

"இனி வரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சி அனைத்தும் ஸ்மார்ட்போன்களை சார்ந்தே இருக்கிறது. நாம் சீக்கிரமே பிளாஸ்டிக் யுகத்திலிருந்து மொபைல் யுகத்திற்கு மாறிவிடுவோம். அதனால் இன்னும் நிறைய நிறைய சேவைகளை மக்களுக்கு வழங்கமுடியும். ஸ்மார்ட்போன்களும், இணைய சேவையும் இந்தியாவில் பல மேஜிக்களை நிகழ்த்த இருக்கின்றன" எனக் கூறி நிறைவு செய்தார் விஜய் சேகர் ஷர்மா.

ஆக்கம் : அபராஜிதா சவுத்ரி, ஆயுஷ் ஷர்மா | தமிழில்: சமரன் சேரமான்