நாற்றம் இல்லா ரயில் பெட்டிகள்: அனைத்து இந்திய ரயில்களிலும் வருகிறது ‘பயோ - டாய்லெட்’

2

இந்தியன் ரயில்கள், ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு பில்லியன் பயணிகளை 55,000 பெட்டிகளில் ஏற்றிக்கொண்டு பயணித்து வருகிறது. இதில் குறைந்த சதவீத மக்கள் ரயில்களில் உள்ள டாய்லெட்டை பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், சிந்தித்து பாருங்கள்... இந்த பயணிகளின் கழிவு அத்தனையும் ரயில் ட்ராக்குகளில் ஓரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வை எப்படி பாதிக்கும் என்று...

ரயிலில் பயணம் செய்பவர் கழிக்கும் மலம் அல்லது சிறுநீர் டாய்லெட் வழி கீழே ட்ராக்கில் விழுகிறது. அது அதே இடத்தில் தங்கிவிடுவதால், நிலத்தடி நீரில் அது கலந்து நச்சுத்தன்மையை பரப்புகிறது. போலியோ வைரஸ் பரப்புவதற்கும் இது காரணமாக உள்ளது. சிறுநீர், ட்ராகுகளின் அருகில் உள்ள சிமெண்ட் அணைப்புகளையும் அரித்துவிடுகிறது. இவையெல்லாம் கூடிய விரைவில் மாறப்போகிறது. 

2017 ஆம் ஆண்டில், எல்லா ரயில்களிலும் உள்ள டாய்லெட்டுகள் பயோ-டாய்லெட்டாக மாறப்போகிறது. சுமார் 1.40 லட்சம் பயோ டாய்லெட்களை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. ஸ்வச் ரயில்-ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இது அமல்படுத்தப்படுகிறது. 

க்வாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இந்த பயோ டாய்லெட்டுகளை தயாரித்து நாடெங்கும் உள்ள ரயில்களில் நிறுவவுள்ளது. 

பயோ டாய்லெட் என்றால் என்ன?

பயோ-டைஜெஸ்டெர் டாய்லெட் என்று சொல்லப்படும் இது, ரயில்களில் டாய்லெட்கள் அடியில் இரு டான்குகளாக அமைக்கப்படும். இது கழிவை உடைத்து, மலத்தின் நாற்றத்தை நீக்கி, வாயு மற்றும் நீர் வடிவிற்கு மாற்றிவிடும். இது வெறும் கார்பன் டை ஆக்சைட், மீதேன் மற்றும் நீர் ஆகும். பாக்டீரியா கலக்கப்பட்ட அந்த டான்குகள் இந்த செயல்களை புரிந்து கழிவின் உருவை மாற்றிவிடும். பின்னர் அதை தேவையான இடத்தில் கொட்டிவிட முடியும். 

இந்த பயோ-டைஜெடர்ஸ் தகுந்த வெப்பநிலையில் இருக்கவேண்டும் என்பதால் இதில் உள்ள உலோகம் அதை அதே வெப்பத்தில் வைக்கும். குளிர்காலத்திலும் இது அவ்வாறே வைத்திருக்கும் சிறப்புடையது. 

’க்ரீன் காரிடார்’ அமைக்கப்பட்டுள்ளது

ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஏற்கனவே பல வழித்தடங்களை மனித கழிவில் இருந்து விடுப்பட்டவை என அறிவித்திருந்தார். இவை ‘க்ரீன் காரிடார்’ என்று அழைக்கப்பட்டன. இந்த மாதம் தொடக்கத்தில் மேற்கு ரயில்வே, குஜராத் மாநிலத்தில் இரு வழித்தடங்களை க்ரீன் காரிடராக அறிவித்தது. சுமார் 650 கோச்சுகளுடன் பயணிக்கும் இவ்வழியில் செல்லும் ரயில்களில் பயோ-டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதே போல் மேலும் பல க்ரீன் காரிடார்களை இந்த ஆண்டு இறுத்திக்குள் பார்க்கமுடியும். 

அண்மையில் டெல்லியில் நடந்த ஸ்வச் அபியான் கூட்டத்தில், 14,000 பயோ-டாய்லெட்கள் இந்த ஆண்டும், 16,000 டாய்லெட்டுகள் அடுத்து நிதி ஆண்டு முடிவிற்குள்ளும் நிறுவப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். அதிவேகமாக இந்த பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். 

உயர் மதிப்புள்ள ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, துரண்டோ போன்ற சூப்பர் பாஸ்ட் ரயில்களில், விமானங்களில் உள்ளது போன்ற பயோ-டாய்லெட்கள் அதாவது குறைந்த தண்ணீர், காற்றோடு உறிஞ்சும் முறையில் இயங்கும். 

DRDE வடிவமைத்துள்ள இந்த பயோ-டாய்லெட்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்தி, ட்ராக் ஓரம் வாழும் மக்களின் வாழ்வுகளை நச்சுத்தன்மைகளில் இருந்து காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது.