உங்கள் ஒளியை வைத்து என்ன செய்வீர்கள்? - தீபிகா நல்லதம்பி கேட்கும் கேள்வி...

ரெடினிடிஸ் பிக்மெண்டோஸா எனும் பார்வை குறைபாடு நோய் இருந்தும் தன் அசாதாரண வாழ்வை எளிதானதாக்கி, வெற்றி அடைந்து கொண்டிருக்கும் தீபிகா நல்லதம்பியின் உத்வேகக் கதை!

1

பிறருடைய தத்துவங்களின்படி வாழ்வதைவிட, நாம் வாழ்ந்தறிந்து ஒரு தத்துவத்தை பின்பற்றுவது கூடுதல் வசதியானது என்பது தான் தீபிகா சொல்லும் பாடம்.

இண்டியன் ஆயில் நிறுவனத்தில் ஒரு முழு நேர வேலையை பார்த்துக் கொண்டே எழுத்துப்பணியையும் செய்துக் கொண்டிருக்கும் தீபிகாவின் பூர்வீகம் மதுரை. சிறு வயது தொடங்கியே பள்ளிகளுக்கு இடையான கட்டுரைப் போட்டிகளில் எல்லாம் கலக்கிக் கொண்டிருந்த தீபிகா, இளநிலை தகவல் தொழில்நுட்பத்தில் பட்டமும், 2007 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.பி.ஏ கோல்ட் மெடலும் பெற்றிருக்கிறார். மைதாஸ் கை வைத்ததெல்லாம் பொன்னாக மாறுவது போல தீபிகாவின் கனவுகள் எல்லாமே யதார்த்தமாகும் தன்மையுடையவை.

தீபிகா நல்லதம்பி
தீபிகா நல்லதம்பி
“எனக்கு ரெடினிடிஸ் பிக்மெண்டோஸா (Retinitis pigmentosa) எனும் பார்வை குறைபாடு நோய் இருக்கிறது. எனக்கு எப்போதுமே முழு பார்வையும் இருந்தது இல்லை என்றாலும், முன்னர், நல்ல வெளிச்சத்தில் என்னால் படிக்க முடிந்தது. ந்யூஸ்பேப்பர், புத்தகங்கள் எல்லாம் கண்ணுக்கு கொஞ்சம் பக்கத்தில் வைத்து படித்திருக்கிறேன்,”

எனும் தீபிகா வளர வளர பார்வையை இழந்துக் கொண்டே இருந்திருக்கிறார். பனிரண்டாம் வகுப்பு படிக்கும் போதும் பழக்கப்பட்ட பாதையாக இருப்பதனால் வீட்டிலிருந்து நடந்து தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். ஆனாலும், பள்ளிக்காலத்தில் கரும்பலகையை பார்த்து எழுத முடியாத தீபிகாவிற்கு உடன் இருந்த நண்பர்கள் உதவியிருக்கின்றனர்.

கல்லூரியில் மாலை நேரங்களில் வகுப்பு நடந்தால் சூரிய வெளிச்சம் மங்கும் போது இரண்டாம் தளத்திலிருந்து கீழிறங்கி வருவது சிரமமாக இருந்திருக்கிறது. எம்.பி.ஏ கடைசி செமஸ்டரின் பரீட்சை காலத்தில் பகல் வெளிச்சம் இருக்கும்வரை மட்டும் தான் படிக்க முடியும் எனும் அளவு பார்வை குறைந்திருக்கிறது. அதனால், கல்லூரி முடிந்து வந்ததும் பகல் வெளிச்சம் போவதற்கு முன்னர் படித்து முடித்து பரிட்சை எழுதி தான் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறார். இப்படி வாழ்க்கை போய்க்கொண்டிருந்த போது தன்னுடைய இருப்பந்தைந்து வயதில் முழு பார்வையையும் இழந்திருக்கிறார் தீபிகா.

“ஒரு கையில் சிப்ஸ் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே மறுகையில் புத்தகத்தை வைத்து படிக்க முடியாததை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். முழு பார்வையையும் இழந்த பிறகு எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது, என்னால் இனி ஒரு புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியாது என்பது தான். இதயமே நின்று விடுவது போல இருந்தது,”

என அந்த கணத்தின் அதிர்ச்சி மாறாமலே சொல்கிறார். இந்த சமயத்தில் தீபிகா உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

“எனக்கு ந்யூஸ் பேப்பரில் விளையாட்டுப் பகுதி ரொம்ப பிடிக்கும். அம்மாவை ந்யூஸ்பேப்பரை படித்துக் காட்டச் சொல்லி நச்சரிப்பேன். அப்படி இருக்கும் போது என் நண்பர்கள் தான் பிற தொழில்நுட்பங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அப்போது வரை எனக்கு அவை தேவையாக இருந்தது இல்லை. தேவை வரும் போது தானே தேடிக் கண்டுபிடிப்போம்? ஸ்க்ரீன் ரீடர் கணினிகள், ஆடியோ ஈ - புக்குகள் என தொழில்நுட்பம் தான் எனக்கு ஆதரவாக இருந்தது. அதுவும் நான் அதிகம் நன்றி சொல்ல வேண்டியது கிண்டிலுக்கு (kindle) தான். என்னிடம் கிண்டில் கருவி இல்லை. ஆனால், என்னுடைய ஐஃபோனில் கிண்டில் செயலி இருக்கிறது,” என தன்னுடைய வாசிப்பு தொடர்ந்ததை பற்றி உற்சாகமாக சொல்கிறார்.

’பில்லியன் டாலர் ட்ரீம்’ எனும் இவருடைய புத்தகத்தை எழுத எது உந்துதலாக இருந்தது எனக் கேட்ட போது, 

“நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லா சமயத்திலும் நமக்கு தோதானவர்களாக இருப்பார்கள் என சொல்ல முடியாது. நான் வளர்கையில் எனக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும் வேறு சில சந்தர்ப்பங்களால் நான் ஒரு இண்ட்ரோவெர்ட்டாக வளர்ந்தேன். என்ன தான் இருந்தாலும், என்னுடைய உணர்வுகளை முழுதாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதனால் நான் எழுதத் தொடங்கினேன்,” என்கிறார்.

பதினோரு வயதில் எழுதத்தொடங்கிய தீபிகா, பள்ளிகளுக்கு இடையே நடந்த கட்டுரைப் போட்டியொன்றில் வென்ற பிறகு தான் தன்னால் நன்றாகவே எழுத முடியும் என தீர்மானித்திருக்கிறார். பார்வை முழுமையாக குன்றிய போது அதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலிருந்து மீண்டெழ, ஸ்க்ரீன் ரீடர் கருவியை வைத்து தன்னுடைய எழுத்து வேலையை செய்யும் தீபிகா முதலில் எழுதத் தொடங்கியது ஒரு த்ரில்லர் நாவலை.

(புத்தக வெளியீட்டு விழாவில்)
(புத்தக வெளியீட்டு விழாவில்)
“அந்த கதை எழுதிக் கொண்டிருக்கும் போதே எனக்கு தோன்றிய மற்றொரு கதை தான் பில்லியன் டாலர் ட்ரீம். இந்த கதையின் ஐடியா உதித்த பிறகு என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை,” என்கிறார். 

முப்பாகக் கதையின் முதல் பாகம் தான் ‘பில்லியன் டாலர் ட்ரீம்’. தற்போது அடுத்தடுத்த பாகத்தை எழுதிக் கொண்டும், 2011-ல் எழுதப்பட்ட அந்த கதையை தற்காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்துக் கொண்டும் இருக்கிறார் தீபீகா. எழுதுவது தவிர வேறெதில் நேரம் செலவழிப்பது இஷ்டம் என்பது பற்றி பேசும் போது இசையும், விளையாட்டும் தான் தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்கிறார்.

“எனக்கு சாஃப்ட் ராக் வகை பாடல்கள் ரொம்பவும் இஷ்டம். எனக்கும் என் தம்பிக்கும் பனிரண்டு வருட இடைவேளை இருப்பதால், என்னுடைய ரசனையை கிண்டல் செய்து கொண்டே இருப்பான். ஆனாலும், எனக்கு ‘மைக்கெல் லேர்ன்ஸ் டு ராக்’ பாடல்கள் எல்லாம் தான் இப்பவும் ஃபேவரைட். மற்றபடி ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். நான் எதுவும் விளையாட மாட்டேன் என்றாலும் நீச்சலும், டென்னிஸும் பார்ப்பேன். எனக்கு நீச்சல் கற்றுக் கொள்ள ஆசை இருக்கிறது. என்னுடைய பள்ளிகாலத்தில் மதுரையில் ஒரேயொரு நீச்சல்குளம் தான் இருந்தது. அது கார்ப்பரேஷன் நீச்சல் குளம்,” எனும் தீபிகா அக்காலத்தில், நீச்சல் குளத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கவனம் செலுத்துமளவுக்கு வசதிகள் இருந்தனவா என்ற சந்தேகத்தால் நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை.

 ஆனால், இப்போது தன்னுடைய வேலை நேரத்தையும் மற்ற பணிகளையும் சரிவர ஒழுங்குபடுத்திவிட்டு நீச்சல் கற்றுக் கொள்ள ஆயத்தமாகியிருக்கிறார். வெகு விரைவில் நீச்சலிலும் சாதனைகள் செய்வார் என எனக்கு தோன்றுகிறது. வாசிப்பில் நிறைய நேரம் செலவிடும் தீபிகா, கென் ஃபோலெட் , ஜெஃப்ரி ஆர்ச்சர் என பலரை வாசித்து வந்தாலும் எந்த எழுத்தாளரைப் பற்றி உங்களால் பேசிக் கொண்டே இருக்க முடியும் எனக் கேட்டதற்கு ‘ஹெலன் கெல்லர் மற்றும் ஜான் மில்டன்’ என பதிலளிக்கிறார்.

“ஜான் மில்டனின் ‘ஆன் ஹிஸ் பிளைண்ட்நஸ்’ (On his blindness) கவிதை ஸ்கூலில் பாடமாக இருந்தது. மனப்பாடம் செய்ய வேண்டியதாக இருந்ததால் மற்ற கவிதைகளைப் போலவே இதையும் திரும்ப திரும்ப படித்து மனனம் செய்தேன். அதற்கு பிறகு தான் அந்த கவிதையின் வரிகளை துல்லியமாக உணரத் தொடங்கினேன்,” என்கிறார்.

‘இருண்டு விரியும் இந்த பேருலகில் என்னுடைய ஒளியை எப்படி செலவிடுகிறேன் என யோசிக்கும் போது’ என்பது தான் ஜான் மில்டனுடைய அந்த கவிதையின் முதல் வரி.

“நான் எனக்குக் கிடைக்கும் ஒளியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பது பற்றி யோசித்தேன். இந்த உலகில் இருக்கும் அத்தனை பேரும் திறமையானவர்கள். திறமையை வீணாக்குவது எவ்வளவு தவறு? கிடைக்கும் வளம் எல்லாவற்றையும் நாம் சரியாக உபயோகிக்க வேண்டுமல்லவா?” எனக் கேட்கிறார்.

எலக்ட்ரோலைட் பானம் போல புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகள் வழியே சாதாரணமாக நம்பிக்கை ஒளியை கடத்தி விடுகிறார் தீபிகா நல்லதம்பி.

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha