தொண்டைப் புற்றுநோயாளிக்கு 50 ரூபாயில் குரல் கருவி: பெங்களூரு மருத்துவர் அசத்தல்

0

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பேச்சுத்திறன் பெறுவதற்கு உறுதுணை புரிய ரூ.50 விலையில் ஒரு குரல் கருவியை, பெங்களூருவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் விஷால் ராவ் கண்டுபிடித்துள்ளார். இதுவரை, நோயாளிகள் ஒரு செயற்கை குரல் பெட்டிக்கு பல்லாயிரம் ரூபாய் செலவிட்டு வந்தது கவனிக்கத்தக்கது. தனது இந்தக் கண்டுபிடிப்பு மூலம் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு குரல் திரும்பக் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்பதே டாக்டர் விஷால் ராவின் நோக்கம்.

விஷால் ராவ் டைம் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், "நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளின்போது குரல் பெட்டி அகற்றப்பட்டு, அவர்கள் பேசுவதற்கு இயலாத நிலை உண்டாகும். நோயின் வலியுடன், தங்கள் குரலை இழப்பதும் நோயாளிகளுக்கு பெருந்துயரை ஏற்படுத்தும். செயற்கைக் குரல் பெட்டியைப் பொறுத்தவரையில், அதன் சந்தை மதிப்பு ரூ.22,000 (இது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாறும்.) இந்த அளவுக்கு பணம் கொடுத்து பயன்பெறுவது என்பது ஏழை மக்களால் எளிதில் முடியாத காரியம். ஏழை நோயாளிகளின் குரல்களை மிகக் குறைந்த செலவில் மீட்டுத் தருவதுதான் எனது நோக்கம்" என்றார்.

இந்த 25 கிராம் எடை கொண்ட கருவிக்கு 'ஓம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. "ஓம் என்பது பிரபஞ்சத்தில் அனைவராலும் உதிர்க்கப்படும் முதல் ஒலி. இழந்த குரலை மீண்டும் பெறுவது என்பதே ஒரு மறுபிறப்புதான்" என்றார் ராவ்.

இந்தக் கருவியானது நோயாளியின் கழுத்து வழியாக பொருத்தப்படும். அது, அவரது உணவுக் குழலில் இணைக்கப்பட்டு ஒரு குரல் பெட்டியாக இயங்கும்.

ஆக்கம் - திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்