தோல்வியில் இருந்து பாடம் கற்க வழிகாட்டிய டேனியல் ஜாங்: ஜாக் மா கண்டெடுத்த புதிய சி.இ.ஓ

0

கடந்த வாரம் அலிபாபா நிறுவனர் ஜேக் மா, 54 வயதில் தனது ஓய்வு முடிவை அறிவித்த போது, நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு அடுத்தபடியாக தலைமை ஏற்க இருப்பவர் என டேனியல் ஜாங் (ஜாங் யாங்) பற்றி குறிப்பிட்டிருந்தார்.

டேனியல் ஜாங், 46, அலிபாபா குழும பொறுப்பை அதன் நிறுவனர் ஜேக் மாவிடம் இருந்து ஏற்கிறார்.
டேனியல் ஜாங், 46, அலிபாபா குழும பொறுப்பை அதன் நிறுவனர் ஜேக் மாவிடம் இருந்து ஏற்கிறார்.

“அலிபாபா குழுமத்தில் டேனியல் 11 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றது முதல் அபாரமான திறமையை, வர்த்தக ஆற்றலை, உறுதியான தலைமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வழிகாட்டுதலில், அலிபாபா குழுமம் தொடர்ந்து 13 காலாண்டுகளாக சீரான வளர்ச்சி கண்டுள்ளது. அவரது அலசி ஆராயும் மனது நிகரில்லாதது. அவர் நம்முடைய நோக்கம் மற்றும் தொலைநோக்கை முக்கியமாக கருதுகிறார், பொறுப்பை ஈட்பாட்டுடன் மேற்கொள்கிறார், புதுமை செய்ய மற்றும் புதுமையான வர்த்தக மாதிரிகளிலும் ஈடுபடும் உறுதி அவரிடம் இருக்கிறது. 

மிகவும் பொருத்தமாக சீனாவின் வர்த்தக மீடியா அவரை 2018ன் சிறந்த சி.ஒ.ஓவாக அறிவித்துள்ளது. இந்த காரணங்களினால் அவரும், குழுவினரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெற்றுள்ளனர். டேனியல் மற்றும் அவரது குழுவிடம் அலிபாபா ஜோதியை ஒப்படைப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாக கருதுகிறேன். ஏனெனில் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தில், அவர்கள் தயாராக இருக்கின்றனர் என அறிவேன் மற்றும் நம்முடைய அடுத்த தலைமுறை தலைவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது."

டேனியலை தேர்வு செய்ததற்கு ஜாக் மா’விடம் 100 காரணங்கள் (அல்லது ஒன்று ) இருக்கலாம். ஆனால், நான் உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புவது, சி.இ.ஓ.வாக அவர் பெற்ற வெற்றியை அல்ல, பணியிடத்தில் அவர் கொண்டு வந்துள்ள மனநிலையை தான். அவரை எது மாறுபட்டு சிந்திக்க வைக்கிறது. தலைவர்களை அவர்கள் மனநிலை மற்றும் அணுகுமுறை தான் வேறுபட்டவர்களாக்குகிறது. ஒரு மாநாட்டில் கேள்விகளுக்கு பதில் அளித்த விதம் டேனியல் ஜாங்கை வேறுபடுத்திக்காட்டுகிறது. இந்த வீடியோ யூடியூப்பில் இருக்கிறது.

2016 ல் அமெரிக்காவில் பி.அண்ட் ஜி நடத்திய சிக்னல் மாநாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை பார்த்தால், அவரது உரைய தொடர்ந்து கேள்வி பதிலின் போது தோல்வி பற்றி பெண்மணி ஒருவர் கேட்ட கேள்விக்கான பதில் அவரை தனித்து நிற்கச்செய்வதை புரிந்து கொள்ளலாம்.

"புதுமையாக்கம் மற்றும் அவை எப்படி கீழிருந்து மேலே வருகின்றன, அவற்றில் நிறைய தோல்விகள் இருக்கின்றன என்றும், அவை உங்களுக்கு நிறைய கற்றுத்தருகின்றன என்றும் நீங்கள் ஆற்றிய உரையை மிகவும் விரும்புகிறேன். எனவே தோல்வியில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் சிலவற்றை அறிய விரும்புகிறேன்,” என அவர் கேட்டார்.

இதற்கு ஜாங் அளித்த பதில்: 

"சரி, அண்மை ஆண்டில் நடைபெற்ற நல்ல உதாரணத்தை குறிப்பிடுகிறேன். மக்களுக்கு வீசேட் சேவை பற்றி தெரியும். சீனாவில் வீசேட் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே மூன்று ஆண்டுகளுக்கு முன், சரி நமக்கும் வீசேட் போல சொந்தமாக ஒரு அரட்டை செயலி தேவை என்றோம். எனவே அதில் அதிகம் முதலீடு செய்து, பிரபலமாக்கினோம். அதை உருவாக்க திறமையானவர்களை நியமித்தோம். ஆனால் இது போன்ற மேலிருந்து வரும் புதுமையாக்கம் செயல்படுவதில்லை என நிரூபனமானது.

"ஆனால், இதற்கு பின் நடந்தவை தான் சுவாரஸ்யமானவை. சமூக அரட்டை செயலி வெற்றி பெறவில்லை, மக்கள் அதிலிருந்து விலகிச்சென்றனர். ஆனால் எங்கள் ஊழியர்கள் (வெளியில் இருந்து நாங்கள் கொண்டு வந்த மேலதிகாரிகள் அல்ல) இந்த செயலியில் பணியாற்றியவர்கள், அவர்களில் சிலர் இதிலிருந்து கிடைத்த பாடங்கள் மற்றும் அனுபவத்தை பயன்படுத்தத் தீர்மானித்தனர்.”

"அவர்கள் டிங் டாக் என அழைக்கப்படும் புதிய செயலியை உருவாக்கினர். இதுவும் சமூக அரட்டை செயலி தான் என்றாலும், பணியிடத்திற்கானது. சக ஊழியர்களுடன் உரையாடுவதற்கான அரட்டை செயலி இது. இதில் அற்புதம் என்னவெனில் செய்தி அனுப்பியவர்கள் அதன் நிலையை, படிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிய முடியும். இது மேலாளர் அல்லது முதலாளிக்கு மிகவும் பயனுள்ளது அல்லவா? ( பார்வையாளர்கள் சிரிப்பு) ஒரு குழுவுக்கு பணியை ஒப்படைத்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என பார்க்கலாம். இமெயில்களை பலரும் வாசிக்கின்றனரே தவிர, உடன் பதில் அளிப்பதில்லை ஆனால் இந்த செயலியில் யாரும் மறைந்து கொள்ள முடியாது”. ( மீண்டும் சிரிப்பலை).

“ஆக, மீண்டும் புதுமையாக்கத்திற்கு வருவோம். யாராலும் ஒவ்வொரு புதுமையாக்கமும் வெற்றி பெறும் என உறுதி அளிக்க முடியாது. இரண்டாவதாக இது தோல்வி அடைந்துவிட்டது என விட்டுவிடவும் முடியாது. அதிலுருந்து பாடங்களை கற்க வேண்டும். நம்முடைய இளைஞர்கள், இளம் தலைமுறை, அவர்கள் உண்மையான வேலை செய்தாக வேண்டும். ஒன்று ஏன் தோல்வி அடைந்தது ஏன் வெற்றி பெற்றது என அவர்கள் உணர்ந்தாக வேண்டும். எனவே அவர்களுக்கு வெளி அளிக்க வேண்டும். அவர்கள் முதல் முறை தோல்வி அடைந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் அடுத்த முறை தோல்வி அடைய மாட்டார்கள். ஏதேனும் புதிதாக உருவாக்குவார்கள்.”

நம்மில் பலரும் கூட, டிங் டாக் போல தோல்வியில் இருந்து உருவான வெற்றிக்க்கான ஊக்கத்தை பெறலாம். விஷயம் என்னவெனில் தோல்வியை நாம் பார்க்கும் லென்சை மாற்ற வேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர்: ஷரத்தா ஷர்மா | தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL