குழந்தைத் திருமணத்தில் இருந்து விடுபட்டு இன்று இந்திய ரக்பி அணியில் விளையாடும் அனுஷா!

0

பி அனுஷா ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். உடனே அவரது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்துவைக்க தீர்மானித்தனர். பத்தாம் வகுப்பு முடித்ததும் திருமணம் செய்துவைப்பது சகஜம்தான் என நினைத்து 15 வயதான அனுஷா திருமணத்திற்குச் சம்மதித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காவல் துறை மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் இந்தத் திருமண ஏற்பாடு குறித்து கேள்விப்பட்டனர். அனுஷா சார்பாக அவர்கள் தலையிட்டு அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

ஓராண்டிற்குப் பிறகு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ரக்பி அணிக்கு தேர்வானார். அவர் சுயமான முடிவெடுக்க அவரது அம்மா அனுமதித்தார்.

அனுஷாவின் குடும்பத்தினர் நல்கொண்டா மாவட்டத்தின் கண்டுகுர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அனுஷாவின் அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு அவரது அம்மா அனுஷாவையும் அவரது சகோதரரையும் அழைத்துக் கொண்டு ஹைதராபாத் சென்றார். அங்கு செக்யூரிட்டியாக பணியாற்றினார்.

அனுஷா பத்தாம் வகுப்பு முடித்ததும் அவரது அம்மா அனுஷாவிற்கு திருமண வயது வந்துவிட்டதாக நினைத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முற்பட்டார். அனுஷாவிற்கு கிரிக்கெட் மற்றும் ரக்பி விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதிகம் யோசிக்காமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இது குறித்து ’தி நியூஸ் மினிட்’ உடனான நேர்காணலில் அவர் தெரிவிக்கையில்,

நான் திருமணத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. என்னுடைய குடும்பத்தை கருத்தில் கொண்டு நான் சரியான முடிவெடுத்ததாகவே நினைத்தேன்.

ஆனால் இந்த நிலை மாறியது. குழந்தை நல ஆர்வலர்கள் அனுஷாவின் அம்மாவிற்கு ஆலோசனை வழங்கினர். அதன் பிறகு இளம் வயதில் தனது மகளுக்கு திருமணம் முடிப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்தார். திருமணம் மட்டுமே வாழ்க்கையின் இறுதி நோக்கமல்ல என்பதையும் உணர்ந்தார். எனவே தனது மகளுக்கு அதிக ஆர்வமிருந்த விளையாட்டில் ஈடுபட அனுமதித்தார்.

அனுஷா தனது அம்மா மற்றும் பயிற்சியாளரின் ஆதரவுடன் கடுமையாக உழைத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான ரக்பி அணியில் இந்திய அணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிக்கெட் விளையாட்டிலும் சிறப்புற்று தேசிய அளவில் பங்கேற்று விளையாடினார். விளையாட்டு மீதான ஆர்வம் குறித்து ஏஎன்ஐ-யிடம் தெரிவிக்கையில்,

”ஒன்பதாம் வகுப்பு முதல் பயிற்சியைத் துவங்கினேன். பின்னர் கிரிக்கெட் அணியில் தேர்வானேன். இண்டோரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசியளவிலான போட்டியில் விளையாடினேன். தற்போது தேசிய அளவிலான ரக்பி அணியில் விளையாடுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்," என்கிறார்.

கட்டுரை : Think Change India