'தீர்க்கமான நம்பிக்கை வெற்றிக்கு வித்திடும்' - டாக்டர் வந்தனா ஜெயின்

0

"இந்தியப் பெண்கள், பல்துறைகளிலும் தங்கள் தடம் பதித்து பல சுவாரஸ்யமான செயல்களை செய்து வருகின்றனர். பெண்கள் எக்காரணத்துக்காகவும் தங்கள் கனவுகளை கைவிடக்கூடாது. குழந்தைக்காக வேலையைத் துறந்தேன், எனக்கு பிற பொறுப்புகளின் அழுத்தம் இருந்ததால் வேலையைத் விட்டேன் என்றெல்லாம் சாக்குபோக்கு சொல்லக்கூடாது. உங்கள் கனவுகளை கைவிடாமல் பற்றிக்கொண்டிருந்தீர்கள் என்றால், எத்தகைய சூழலிலும் வெற்றி நிச்சயம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு, தீர்க்கமான நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம். எனவே பெண்களே உங்கள் கனவுகளை சிறிதாக காணாதீர்கள். பெரிய கனவுகள் காணுங்கள் அதற்கேற்கப வலுவாக இருங்கள்" என்கிறார் டாக்டர் வந்தனா ஜெயின். வந்தனா மருத்துவர் மட்டுமல்ல ஒரு தொழில் முனைவரும்கூட.

வந்தனா ஜெயின், "அட்வான்ஸ்ட் ஐ ஹாஸ்பிடள் அண்ட் இன்ஸ்டிடியூட்டின்" (Advanced Eye Hospital and Institute - AEHI) துணை நிறுவனராவார். வந்தனா, கார்னியா (விழி வெண்படலம்) அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த நிபுணர்.

Dr.வந்தனா ஜெயின்
Dr.வந்தனா ஜெயின்


வந்தனாவின் கதை, ஒரு பெரிய கனவை சாத்தியப்படவைப்பது பற்றியது. அவரது வெற்றிப்பயணம், அதில் ஏற்பட்ட இடர்பாடுகள் ஆகியன குறித்து வந்தனா பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆசை பெரிது, கனவு உயரியது

டெல்லியில் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் நான் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். எனது மூத்த சகோதரிக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஏனெனில், எங்கள் குடும்பத்தில் பெண்கள் அதிகம் படிப்பதை யாரும் ஊக்குவிப்பது இல்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதையும் யாரும் விரும்புவதில்லை. என் சகோதரி அவளது விருப்பம் என்ன, கனவு என்ன என்பதை அடையாளம் காண்பதற்குள்ளாகவே அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது.

ஆனால், நான் எனது சிறுவயதிலேயே தீர்மானமாக இருந்தேன். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு என்னுள் இருந்தது. எனக்கு இன்னும் பசுமரத்து ஆணிபோல் நினைவில் இருக்கிறது. நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது, வகுப்பில் நான் இரண்டாவது ரேங்க் எடுத்திருந்தேன். அது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அந்த வேதனையே என்னை முதலிடம் நோக்கி பயணிக்க உந்துதல் அளித்தது. அந்த அணுகுமுறை என்னை மேன்மேலும் செதுக்கியது. நான் எதில் ஈடுபட்டாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். படிப்பில் சிறந்து விளங்கினேன். அதேபோல், விளையாட்டிலும் நல்லதொரு இடத்தைப் பிடித்தேன். தேசிய அளவிளான ஓட்டப்பந்தயப் போட்டிகளில் கலந்து கொண்டேன். விளையாட்டு என் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தது. விளையாட்டில் சிறக்க இடைவிடாத முயற்சி அவசியம். அப்போதுதான் வெற்றி கிட்டும். விளையாட்டு எனக்கு இப்பண்பை கற்றுக் கொடுத்தது.

மேலும், விளையாட்டு எனக்கு ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை கற்றுத்தந்தது. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியனவற்றால் எனக்கு கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிகள் குவிந்தன. எனது பெற்றோர் என்னை ஊக்குவிக்கவில்லை, அதேவேளையில் அவர்கள் என் வெற்றிப்பயணத்துக்கு எவ்வித முட்டுக்கட்டையும் போடவில்லை. ஆனால், நான் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டதற்காக குடும்பத்தினர் மத்தியில், என் தந்தை கடும் எதிர்ப்பையும், ஏச்சு பேச்சுகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

இத்தகைய சூழலிலும், நான் எதை விரும்பினேனோ அதையே செய்ய என் தந்தை எனக்கு பூரண சுதந்திரம் நல்கினார். அந்த சுதந்திரமானது என் தந்தை மீது எனக்கு அதீத மரியாதையை ஏற்படுத்தித் தந்தது.

மருத்துவத் துறை ஏன்?

ஒரு கட்டத்தில் என் தாய், தந்தையருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கண் தொடர்பான உபாதைகள் அவர்கள் இருவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

என் தந்தைக்கு ஒரு கண்ணில் பார்வை மிகவும் மங்கியது. அவர் மிக முக்கியமான அறுவை சிகிச்சைக்கு உட்பட் வேண்டியிருந்தது. ஏற்கனவே அவரது ஒரு கண்ணின் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததால் இரண்டாவது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மிகவும் தயங்கினர். இருந்தும், வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், அவருக்கு அச்சிகிச்சை பலனளிக்கவில்லை. என் தந்தை அமைதி இழந்தார். அப்போதுதான் எனக்கு புரிந்தது பார்வை குறைபாடு ஒரு மனிதனை உளவியல் ரீதியாக எத்தைகைய துன்பத்துக்கு ஆளாக்கும் என்று.

ஒருவேளை எனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தால் நான் கண் மருத்துவராக வேண்டும் என்று அப்போதுதான் தீர்மானித்தேன்.

அதே உத்வேகத்துடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.எஸ். படிப்பை மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் பயின்றேன். பின்னர் எல்.வி.பிரசாத் மையத்தில் மருத்துவ உயர் படிப்பு பயின்றேன். பின்னர் ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியில் விழி வெண்படலம் நோய் சிகிச்சை குறித்து பயின்றேன். அதன்பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றேன். மும்பையில் எனது முதல் மருத்துவப் பணியைத் தொடங்கினேன். தொடர்ந்து 4 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தேன்.

மருத்துவத் துறையில் இருந்து நிர்வாக மேலாண்மை வரை

எனது பணி சிறப்பாகவே சென்றது. ஆனாலும், என் மனது பலமுறை என்னை தட்டி எழுப்பிக் கொண்டே இருந்தது. "உனக்கான பணி இதுவல்ல. நீ இன்னும் பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டும். உன் சாதனை உனக்குப்பின்னர் சுவடுகளை ஏற்படுத்திச் செல்ல வேண்டும்" என மனதில் ஒரு உரத்த சிந்தனை உதித்துக் கொண்டே இருந்தது.

சுகாதாரத் துறையில் வழங்கப்படும் சேவை முறையில் சில இடைவெளிகள் இருப்பதை நான் உணர்ந்தேன். ஆனால் அதை எப்படி சரிசெய்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. இது குறித்து எனது நெருங்கிய நண்பர்களிடமும், எனது போற்றுதலுக்குரிய சில நபர்களிடமும் விரிவாக ஆலோசித்தேன். அவர்கள் அனைவரும் என்னை எம்.பி.ஏ வை தேர்வு செய்ய சொன்னார்கள். முதலில் எனக்குச் சற்று யோசனையாக இருந்தது. எனக்கு ஆதரவு அளிக்க ஏராளமானோர் இருந்தனர். அது எனக்கு பெருமகிழ்ச்சியளித்தது. எனது கணவர் எனக்கு எப்போதுமே பலமான ஆதரவாக இருந்திருக்கிறார். ஸ்டான்ஃபோர்டு மையத்தை எம்.பி.ஏ. படிப்புக்காக தேர்வு செய்தேன். எம்.பி.ஏ. படித்த இரண்டு ஆண்டுகளும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் என்னவாக விரும்பினேனோ அதற்கான மனத்துணிச்சலையும், செயற்திறனையும் எனக்கு ஸ்டான்ஃபோர்டு கல்வி நிறுவனம் வழங்கியது.

அதுமட்டுமல்லாமல், பணிவு, அடக்கம், யதார்த்த நிலையுடன் ஒட்டியிருப்பது போன்ற பல்வேறு உத்திகளை எனக்கு அக்கல்வி நிறுவனம் கற்பித்தது.

அட்வான்ஸ்ட் ஐ ஹாஸ்பிடள் அண்ட் இன்ஸ்டிடியூட் துவக்கம் (AEHI)

எனது மேற்படிப்பை முடித்துவிட்டு 2011-ல் இந்தியா திரும்பினேன். எனது மருத்துவக் கல்வியையும், பிசினஸ் அறிவையயும் இணைத்து பயன்படுத்த முடிவு செய்தேன். ஒரு சிறந்த மருத்துவ மையத்தை துவக்க வேண்டும் என முடிவு செய்தேன். அந்நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை, பணியாட்கள் சேமநலம், மருத்துவ தொழில்நுட்பம் என எல்லாமே தனிச்சிறப்புடன் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதற்கு வடிவம் கொடுத்தேன். கடந்த 2011-ல் அட்வான்ஸ்ட் ஐ ஹாஸ்பிடள் அண்ட் இன்ஸ்டிடியூடை (Advanced Eye Hospital and Institute -AEHI) தொடங்கினேன். நிதி ஆதாரத்துக்கான வழிவகைகளைச் செய்தோம். கணவர், குடும்பத்தினர், நண்பர்கள், வங்கி என பலதரப்பிலிருந்தும் நிதி திரட்டினோம். இறுதியாக 2012 நவம்பரில் எங்கள் மருத்துவ மையம் இயங்கத் தொடங்கியது.

மருத்துவர்கள்-மேலாளார்கள் இணைந்து இயங்கும் மையம்

நாங்கள் தொடங்கிய மருத்துவ மையம் பல்நோக்கு கண்சிகிச்சை சிறப்பு மையம். பல்வேறு சிகிச்சை முறையில் நிபுனத்துவம் பெற்ற 7 மருத்துவர்கள் (நான் உட்பட) மருத்துவமனையில் இருந்தோம். எங்கள் புதிய மையத்தை முறையாக விளம்பரப்படுத்தினோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு கிடைத்த அனைத்து மருத்துவர்களும் தேர்ந்த தொழில்முறை நிபுணர்களாக இருந்தனர்.

மருத்துவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். மருத்துவ தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த மருத்துவர், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் சிறந்த மருத்துவர், மூன்றாவதாக சிறந்த நிர்வாகிகளாக செயல்படக்கூடிய மருத்துவர் என மூன்றுவகை உண்டு.

நான் எனது மையத்துக்கான மருத்துவர்களை தேர்வு செய்யும்போதே இந்த மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு வகையில் பொருந்துமாறு தேர்ந்தெடுத்தேன்.

நோயாளிகளுக்கு நம்பகத்தன்மைவாய்ந்த அறிவை புகட்டுதல்

நோயாளிகளுக்கு நம்பகத்தன்மைவாய்ந்த அறிவை புகட்டுவது அவசியம் என்பதை அறிந்தேன். ஏனெனில் பெரும்பாலான மக்கள் கூகுள் போன்ற தேடுதல் வலைகளில் நோய் குறித்த தகவல்களை திரட்டி தங்களைத் தாங்களே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கின்றனர். சில நேரங்களில் இது மாதிரியான தேடலில் கிடைக்கும் தகவல் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை. எனவே, எங்கள் மருத்துவ மையம் மூலம் நோயாளிகளுக்கு நம்பகத்தன்மைவாய்ந்த அறிவை புகட்ட வேண்டும் என விரும்பினோம்.

எனவே எங்களிடம் வரும் ஒவ்வொரு நோயாளியிடமும் அவர்களது நோய் குறித்த தகவல்களையும் அவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறோம். இதற்காக மருத்துவமனையில் ஆலோசகரையும் நியமித்திருக்கிறோம். அவர்கள் மூலம் நோயாளிக்கு முழுமையான தகவல் அளிப்பதோடு, நோய் சிகிச்சை குறித்து எங்கள் மருத்துவர்கள் எழுதிய செய்திக்கட்டுரைகள் அடங்கிய இணையதள தொடர்பு முகவரியையும் அனுப்பி வைக்கிறோம். இதனால் நோயாளிகளுக்கு எங்கள் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. எங்களிடம் வரும் நோயாளிகள் சவுகரியமாக, தன்னம்பிக்கையுடன், தெளிந்த புரிதலுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

மருத்துவர்-தொழில் முனைவர் இரண்டையும் சமாளிப்பது

ஒரு மருத்துவராக இருந்து கொண்டே தொழில் முனைவராகவும் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது. எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஒவ்வொரு மருத்துவரும் ஓரளவாவது பிசினஸ் அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதே. ஏனெனில் ஒரு தொழில்முனைவராக இருக்கும்போது மேன்மேலும் உயர வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இது ஒருவிதமான தொழில் நேர்த்தியைத் தரும்.

நோயாளிகளுக்கு ஒரு துளியேனும் குறைபாடில்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அந்த வகையில் நான் ஒரு நிறைவு விரும்பி. எனது சித்தாந்தம் அதுவே.

நான் ஒரு முழு நேர மருத்துவர், ஒரு முழு நேர தொழில் முனைவர். இதனால், பணி - குடும்பம் சமன்பாடு என்ற பேச்சுக்கு இடமே எழவில்லை. எனக்கு எல்லாமே என் வேலைதான். இதை செய்து முடிக்க எனது கணவர் பெருந்துணையாக இருக்கிறார். எனது மருத்துவமனையில் என் கணவரும் ஒரு இயக்குநர். அவர் பல நேரங்களில் எனக்கு சிறந்து ஆலோசனை வழங்குகிறார்.

எதிர்காலத் திட்டம்:

எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. ஆனால் அதில் அவசரம் காட்டாமல் மித வேகத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். ஏனெனில் அதிக முதலீட்டாளர்கள் மூலம் பெரும் முதலீடு செய்யும்போது சில நேரங்களில் கலாச்சார வேற்றுமை ஏற்படக்கூடும். அது உகந்தது அல்ல. அந்த மாதிரியான சமரசத்தை நாங்கள் எப்போதுமே செய்ய விரும்பவில்லை.

இணையதள முகவரி: http://www.advancedeyehospital.com/