ருசியான சாப்பாட்டின் சூட்சமத்தை பகிரும் பெண் ப்ளாகர்ஸ்...

2

பண்டிகை திருநாட்களில் பரிசு பொருட்கள் இல்லாமல் போகலாம் ஆனால் ஒரு போதும் அறுசுவை விருந்திற்கு பஞ்சமிருக்காது. சமையலறையில் பாத்திரங்களின் சத்தமும், உணவின் மணமும் நம்மை சுண்டி இழுக்கத்தான் செய்யும். உணவு பிரியர்களுக்காகவே உணவு வலைத்தளங்கள் மற்றும் ப்ளாகின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். மேலும் பெண் உணவு ப்ளாகர்ஸ் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். பாட்டியின் பாரம்பரிய சமையல் முதற்கொண்டு உணவில் புதுமை புகுத்தும் இளம்பெண்கள் வரை, இவர்களுடைய அனுபவங்கள், உணவின் பரிமாணத்தையும், சமையல் கலை வல்லுனர்களையும் வெளிக்கொணர்வதாக இது இருக்கும்.

'அர்ச்சனாஸ் கிச்சன்' (Archana's Kitchen) : மென்பொறியாளர், யோகா பயிற்சியாளர், தாய் என்ற பன்முகம் கொண்ட அர்ச்சனா இன்று ஒரு முன்னோடி உணவு ப்ளாகர். இன்றைய நாகரீக வளர்ச்சி எவ்வாறு நம் உடல்நலம் மற்றும் மன நலத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டி வருகிறார். தன் வலைத்தளத்தில், உலகெங்கிலும் உள்ள சைவ உணவுகளின் செய்முறைகள் பற்றி எழுதுகிறார். மேலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி, புரதச்சத்துக்கு முக்கியத்துவம் அளித்து , சமையல் குறிப்புகளை தருகிறார். பண்டிகைச்சமையல், குழந்தைகளுக்கான மதிய உணவு, இனிப்பு வகைகள் என்ற பிரிவுகளை உள்ளடக்கியது இவரது வலைத்தளம்.

'சுப்புஸ் கிச்சன்' (Subbu's Kitchen): பல தலைமுறைகளாய் பின்பற்றப்படும் சமையல் குறிப்புகளை கொண்ட இவரின் வலைத்தளத்தில் அவரின் அம்மாவிடம் கற்ற பாரம்பரிய உணவு வகைகளை தொகுத்து உள்ளார். சமையல் என்பது ஒரு கலை, அது எளிதானது மட்டுமல்லாமல் ஈடுபாடுடன் செய்யகூடிய ஒரு கலை என்பதை உணர்த்தவே ப்ளாக் எழுத தொடங்கினார். சென்னையில் உள்ள இவர், சமையலறை குறிப்புகள், பக்குவத்துடன் சமைப்பது, எளிய வகை பொருட்களை கொண்டு அமிர்த உணவுகளை சமைப்பது குறித்து இணையத்தில் பகிர்கிறார்.

'மஞ்சுளாஸ் கிச்சன்' (Manjula's Kitchen): மஞ்சுளாவின் வடகிந்திய சமையல் அல்லது சைவ சமையலாகட்டும், அதில் ஜெயின் தத்துவமான "வாழு, வாழ விடு" என்ற கொள்கையை கடைபிடிக்கிறார். காய்கறி மற்றும் தானியங்களின் அசல் சுவையை மாற்றிடாத வகையில் மிகவும் குறைந்த அளவிலயே மசாலா பொருட்கள் இவரது சமையலில் சேர்க்கப்படுகின்றன. அவருடைய வலைத்தளம் இந்த சுவையை, பாரம்பரியத்தை பறை சாற்றும் விதத்திலேயே உள்ளது. மிகவும் எளிதான செய்முறைகள் மட்டுமல்லாது அவரின் காணொளிகளும், சமைப்பதை எளிதாக்குகிறது

'பேக்கர் இன் டிஸ்கைஸ' (Baker in disguise): மிக சமீபத்தில் தான் பேக்கிங் ஒரு அழகான கலை என்பதை சர்வானி உணர்ந்தார். அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். சரியான அளவிலான பொருட்களை கொண்டு தேவையான வெப்பநிலையில் உருவாக்குது நேர்த்திமிகு செயலாகும். எளிமையாக தயாரிப்பதே சர்வானியின் ஆர்வம். அவரின் வலைத்தளத்தில் அவருடைய எளிமையான செய்முறைகள் பற்றியும், மற்ற செயல்முறைகளை எவ்வாறு எளிமையாக்கலாம் என்றும் பகிர்கிறார்.

'சைலுஸ் ஃபுட்' (Sailu's Food): சைலுவின் ப்ளாக் ஏன் மிகவும் பிரபலமான உணவு ப்ளாக் என்பதை ஒரு முறை பார்த்தால் தான் புரியும். அவரின் வலைத்தளத்தில் உள்ள படங்கள் உங்களை நிச்சயமாக கவர்ந்திழுக்கும். ("Indian food photos " பகுதியை பார்க்கவும் ). நாட்டின் பல தரப்பட்ட உணவு வகைகளின் செய்முறைகள், முக்கியமாக ஆந்திரா மாநிலத்தின் உணவு வகைகளை பற்றி இவரது வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

'ஷோ மீ தி கர்ரி' (Show me the curry): செய்முறைகளை அறிந்து கொள்வதை விட, எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்திருத்தலும் அவசியம். குழந்தைகளுக்காக சமைக்கும் அனுபவமே ஹேதல் மற்றும் அனுஜாவிற்கு மிக பெரிய படிப்பினை தருவதாக கூறுகிறார்கள். தென்னிந்திய உணவு வகைகளை எளிதாக சமைக்கும் முறையை பற்றி இவர்கள் எழுதுகின்றனர். நம்முடைய அனுபவங்களையும் இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் . வீடியோ மற்றும் பாட்காஸ்ட் மூலமாக ஆலோசனையும் வழங்குகிறார்கள்.

'மை டிவேர்சிட்டி கிச்சன்' (My diversity kitchen): இது அபர்னாவின் ப்ளாக் மட்டுமல்ல, அவரின் வாழ்க்கை பயணத்தையும் உள்ளடக்கியது . அவர் தயாரித்த உணவு வகைகளை படம் பிடிக்கும் பொழுது, புகைப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வத்தையும் அறிந்து கொண்டார். பாலகாட் சைவ உணவு வகைகளான சாதம், காய்கறி, தானியங்கள் மற்றும் தேங்காய் கொண்ட செய்முறைகள் இவரது ப்ளாகில் இடம் பெற்றிருக்கும். இதைத் தவிர வீட்டிலயே வனில்லா சாறு எடுத்தல், சூடான மசாலா சாக்லேட் மிக்ஸ் தயாரித்தல் போன்ற முறைகளையும் பகிர்ந்து கொள்கிறார்.

'எடிபில் கார்டன்' (Edible Garden): கேரளா, ஐதரபாத் மற்றும் சிட்னியில் வசித்துள்ள நாக்ஸ், பகுதி நேர, முழு நேர வேலை மட்டுமின்றி தனது குடும்ப வேலைகளையும் பார்த்துக் கொண்டு, உணவு ப்ளாகையும் வெற்றிகரமாக நடத்துகிறார். கேரளா மற்றும் தமிழ் கலாச்சார பின்னணி கொண்ட அவருடைய செய்முறைகளில் புதுமையை புகுத்தி பல சமையல் வகைகளை மேற்கொள்கிறார். ஆனால் எப்பொழுதும் நமது தனிப்பட்ட முத்திரையை சமையலில் மேற்கொள்வது அவசியம் என்கிறார்.

'நிஷா மதுலிகா' (Nisha Madhulika): முற்றிலுமே இந்தி மொழியில் உள்ள இவரது ப்ளாகில் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருக்கும் எளிய செய்முறைகள் பற்றி வீடியோ வடிவில் பகிர்கிறார்.