'தகவல் திங்கள்': விக்கிபீடியாவுக்கு வேண்டும் ஒரு ஆதாரமாணி!

1

விக்கிபீடியா விவாதத்தில் நீங்கள் எந்தப்பக்கம்? என்னைப்பொருத்தவரை நான் விக்கிபீடியா பக்கம்! விக்கிபீடியாவின் நம்பக்தன்மை மீதான புகார்கள், பழிச்சொற்கள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் மீறி விக்கிபீடியாவின் ஆதார கொள்கை மற்றும் அதன் செயல்பாடுகளை தீவிரமாக நம்பும் இணையவாசிகளில் நானும் ஒருவன்.

விக்கிபீடியா மீதான என் அபிமானம் முக்கியமல்ல; தேவையும் இல்லை தான். ஆனால் அதை குறிப்பிடக் காரணம் இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட இருக்கும் கருத்துக்களை சரியான வெளிச்சத்தில் புரிந்து கொள்ள, முதலிலேயே என்னுடைய விக்கி சார்பை ஒரு தகவலாக குறிப்பிட்டு விடலாம் எனத்தோன்றியது.

இனி விஷயத்திற்கு வருவோம். விக்கிபீடியா தொடர்பாக அன்மையில் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து 'தி அட்லாண்டிக்' இதழில் விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

விக்கிபீடியா குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆய்வுகள் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்விகளை மையமாக கொண்டவை தான்.

எவரும் தகவல்களை இடம்பெறச்செய்யலாம், அவற்றை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் எனும் திறந்தவெளி தன்மை கொண்ட ஒரு களஞ்சியத்தில் இடம்பெறும் தகவல்களை எப்படி நம்புவது? எனும் கேள்வி எழுவது இயல்பானது தான். அறிஞர்கள் பலர் இந்த கேள்விக்கான பதில்களை ஆய்வில் தேடியிருக்கின்றனர். விக்கிபீடியா தகவல்களின் நம்பகத்தன்மையில் பிரச்சனை இருக்கிறது என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவித்தாலும், ஒரு சில ஆய்வுகள் விக்கிபீடியாவின் தரம் பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்திற்கு நிகரானது என்றும் தெரிவித்துள்ளன.

இது ஒரு தொடர் விவாதம் தான். விக்கிபீடியா முழுமையானது அல்ல.

விக்கிபீடியாவில் பல குறைகள் இருக்கின்றன. விக்கிபீடியா கட்டுரை தகவல்களை அப்படியே நம்பிவிட முடியாது தான். ஆனால் இவற்றை எல்லாம் காரணம் காட்டி, விக்கிபீடியாவின் பயன்பாட்டுத்தன்மையை புறக்கணித்துவிட முடியாது. விக்கிபீடியாவுக்கு நிகரான பரப்பும், வீச்சும் கொண்ட ஒரு களஞ்சியத்தை உருவாக்குவது சாத்தியமல்ல. அதிலும் பழைய கோட்பாடுகள் மற்றும் முனை மங்கிய சாதனங்களை வைத்துக்கொண்டு இது நிச்சயம் சாத்தியம் அல்ல. உலகம் கூடி தேர் இழப்பதால் விக்கிபீடியா எனும் அற்புதம் சாத்தியமாகி இருக்கிறது.

நன்றி: Slideshare
நன்றி: Slideshare

எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்பது போல எல்லோரும் கட்டுரை ஆசிரியர், எல்லோரும் பங்கேற்பாளர், எல்லோரும் தகவல்களை திருத்தக்கூடியவர் எனும் இணைய ஜனநாயகத்தன்மையே தன்னார்வலர்களின் முயற்சியால் விக்கிபீடியாவை வளர்த்து வருகிறது.

இந்த கட்டற்றத்தன்மையால் குறைகளும் தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

எனவே தான் விக்கிபீடியா தொடர்பான விவாதமும் பல விதமாக தொடர்கிறது. மதிய உணவுக்கான, சாப்பாட்டில் கல்லை தூக்கி வீசி விட்டு சாப்பிடுவது போல, விக்கிபீடியா கட்டுரைகளில் காணக்கூடிய பிழைகளை ஒதுக்கி விட்டு நீங்கள் முன்னேறலாம். அல்லது விக்கி தகவல்களில் கலந்திருக்கும் பொய்கள், திரிபுகள், சரடுகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு, விக்கிபீடியாவுக்கு எதிராக வாதிட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்த விவாதத்தின் நடுவே தான் அமெரிக்காவின் டார்ட்மவுத் நியூகோம் கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்தியுள்ள ஆய்வு முக்கியமாகிறது.

இந்த ஆய்வில் இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கத்தக்கது. அடிப்படையில் இந்த ஆய்வு இணைய தகவல்களின் நம்பகத்தன்மை தொடர்பானது. அதை சோதித்து பார்ப்பதற்கான உதாரணமாக விக்கிபீடியா எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. “உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக அளவில் நாடப்படும் தகவல் ஆதாரமாக அமையும் விக்கிபீடியா” மூலம் இணைய தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் ஆற்றலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம் என்று ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆக இந்த ஆய்வு விக்கிபீடியா கட்டுரைகளின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முற்படவில்லை. மாறாக அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யக்கூடிய தன்மையையே ஆய்வு செய்திருக்கிறது. இது இரண்டாவது முக்கியமான விஷயம்!

விக்கிபீடியா முழுவதும் நம்பகமானதல்ல என்றாலும், தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய விக்கிபீடியா பலவிதங்களில் முயற்சி செய்து வருகிறது. விக்கிபீடியாவுக்கு என்று செயல்பாட்டு விதிகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெறச்செய்யலாம் தான். ஆனால் அது தவறாக இருந்தால் யார் வேண்டுமானாலும் திருத்தலாம். இது பல நேரங்களில் திருத்தல், மறு திருத்தல், மீண்டும் திருத்தல்... என திருத்தல் யுத்தங்களுக்கு வித்திட்டாலும், பொதுவாக ஒரு தகவலை அல்லது திருத்தத்தை ஆதாரம் இல்லாமல் செய்ய முடியாது. அவற்றுக்கான தோற்றுவாய் எவை என்பதை குறிப்பிட வேண்டும். விக்கிபீடியா கட்டுரைகளில் அடிக்கோடுகள் போல இத்தகைய ஆதாரங்களுக்கான இணைப்புகளை பார்க்கலாம். நாளிதழ் கட்டுரைகளாக, புத்தக தகவலாக, இணையதள இணைப்புகளாக இவை பலவிதங்களில் அமைந்திருக்கும்.

ஆக, விக்கி தகவல்களை அப்படியே கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, சந்தேகம் இருந்தால் மூல தகவல்கள் எங்கிருந்து வந்தது என சரி பார்க்கலாம்.

இந்த சரி பார்க்கும் தன்மை எப்படி இருக்கிறது என்பதை தான் ஆய்வாளர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். சுமார் 5,000 கட்டுரைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் சரி பார்க்கும் தன்மை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்துள்ளனர்.

அதாவது விக்கி தகவல்கள் துல்லியமானதா என்பதை ஒருவர் சரிபார்ப்பதற்கான வசதி நடைமுறையில் எத்தனை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சோதித்து பார்த்துள்ளனர்.

சரி பார்ப்பதற்கான ஆதாரங்களை இணைப்புகளாக கொடுப்பதால் மட்டுமே நம்பகத்தன்மையை உறுதி செய்துவிட முடியாது என குறிப்பிடும் ஆய்வாளர்கள் ஆதாரங்களை சரி பார்ப்பது என்பது சிக்கலுக்குறியதாக இருப்பதை இதற்கான காரணமாக சொல்கின்றனர். ஏனெனில் சுட்டிக்காட்டப்படும் ஆதாரங்கள் பல காரணங்களினால் அணுக முடியாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது என்கின்றனர்.

உதாரணத்திற்கு புத்தக மேற்கோள்களில் பெரும்பாலானவற்றை கூகுள் புக்சில் தேடிய போது அவற்றில் பல பொது வாசிப்புக்காக இல்லாமல் இருப்பதை அறிய முடிந்துள்ளது. அதே போல பல நாளிதழ் கட்டுரை இணைப்புகள் கட்டணச்சேவைக்கு பின்னே மறைந்திருக்கின்றன. இணைய இணைப்புகள் பல காலாவதியாகி இருக்கின்றனர்.

சும்மாயில்லை, விக்கிபீடியா ஆங்கில பதிப்பில் இருந்து 22,843,288 ஆதார இணைப்புகளை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கின்றனர்.

இந்த விரிவான ஆய்வின் பயனாக விக்கிபீடியா தகவல்களை ஆதாரங்களை சரி பார்ப்பதில் உள்ள சிக்கல்களை விவரித்திருப்பவர்கள் பொதுவாக தகவல்களின் தரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

நன்றி: linkedin
நன்றி: linkedin

விக்கிபீடியா மோசமானதல்ல, ஆனால் தகவல் சரிபார்க்கும் தன்மையை மேம்படுத்த ஏதேனும் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கான சில யோசனைகளையும் அவர்களே முன்வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று விக்கிபீடியா கட்டுரைகளுக்கான ஆதாரமாணியை (தர்மாமீட்டர் போன்றது) உருவாக்குவது. அதாவது ஒவ்வொரு கட்டுரையிலும், அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் எந்த அளவு சரிபார்க்கக் கூடியதாக இருக்கிறது எனும் அளவை உணர்த்தும் ஒரு அளவுகோள் வேண்டும் என்கின்றனர்.

ஒவ்வொரு கட்டுரையிலும் இந்த அளவுகோளை பார்த்தாலே அதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு தெளிவு ஏற்படும்.

அதோடு இந்த அளவுகோளை மேம்படுத்தும் வகையில் மேலும் சிறப்பாக செயல்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் இப்படி இணைப்புகளை சரி பார்ப்பதற்கான ஆதாரமாணி, பதிப்பாளர்கள் தங்கள் தகவல்களை அணுகச்செய்யும் விதத்திலும் மாற்றத்தை கொண்டு வரலாம்.

அதே போல, விக்கி கட்டுரைகளின் ஆதாரங்களை சரி பார்த்து அவற்றின் அணுகும் தன்மை குறித்து மதிப்பெண் அளிக்கும் பிரவுசர் சார்ந்த சேவையும் உருவாக்கப்படலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவை அப்படியே ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதும் தவறு. அதே நேரத்தில் அதன் குறைகளை மட்டும் பூதக்கண்ணாடியில் பெரிதாக்கி பேசுவதும் தவறு.

விக்கிபீடியாவின் அடிப்படை சிறப்பியல்புகளை புரிந்து கொண்டு அதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தும் வழிகளை காண்பதே சரியாக இருக்கும். இந்த ஆய்வுக்கட்டுரை அதைத் தான் செய்கிறது.

விக்கிபீடியா தகவல்களுக்கான ஆதாரங்களை சரி பார்த்து, துல்லியத்தன்மையை அறியக்கூடிய வாய்ப்பு அதன் தரத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்பதே ஆய்வு குறிப்பிடும் செய்தி. இது விக்கிபீடியாவுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த இணையத்திற்கும் பொருந்தும் என்பதே விஷயம்.

விக்கிபீடியா தொடர்பான ஆய்வுக்கட்டுரையை வாசிக்க

ஆய்வு தொடர்பான அட்லாண்டிக் இதழ் கட்டுரை

தகவல் திங்கள் தொடரும்...

முந்தைய பதிவுகள்:

தகவல் திங்கள்: 70 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை ஊகித்த எழுத்தாளர்!

ஃபேஸ்புக் காலத்தில் காபி கோப்பை மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்

ஊழியர்கள் பார்வையில் ஸ்டார்ட் அப் கதைகள்!