மலிவு விலை ஃபில்டர், நவீன கழிப்பறை: மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் முனைவர்!

சென்னையைச் சேர்ந்த சமூக தொழில்முனைவரான ஜே.சந்திரசேகரன், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் தயாரித்து 2 லட்சம் வீடுகளுக்கும், இந்திய எல்லை வீரர்களுக்கும் வழங்கியுள்ளார்.

2

ஆத்திர அவசர காலங்கள், பிராயண நேரங்களில் மட்டுமே காசுக் கொடுத்து தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால், இன்றைய தேதியில் மினரல் வாட்டர் கேன்கள் வாங்காதக் குடும்பமே இல்லை. அந்த அளவுக்கு அனைத்து வீடுகளையும் ஆக்கிரமித்துள்ளது வெள்ளை நிற வாட்டர்கேன்கள். ஆனால், இவை தரமானதா? ஆரோக்கியமானதா? என்பதை பற்றி யோசிப்பது இல்லை. ஏனெனில், மினரல் வாட்டர் கேன்களில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீரே சுத்தமானது என்று நாம் நம்பத்தொடங்கி  விட்டோம். 

இனியாவது மக்களை விழித்துக்கொள்ள வைப்போம் என்ற நல்ல நோக்கத்தில் ரசாயனங்கள் மற்றும் மின்சார பயன்பாடு இல்லாத தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தை தயாரித்து வருகிறார் ஜெ.சந்திரசேகரன். 

ஜே.சந்திரசேகரன்
ஜே.சந்திரசேகரன்

சந்திரசேகரன்; வேதியியலில் இளநிலை பட்டமும் CIPET-ல் முதுகலை பட்டமும் பெற்றவர். CIPET-ல் ப்ளாஸ்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர். 29 ஆண்டுகள் அனுபவமிக்கவர். இவர் மூன்று ஸ்டார்ட் அப்களை நடத்தி வருகிறார்.

மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இவர் தண்ணீர் மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வாட்சன் என்விரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவினார். சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உள்ளது இவருடைய தொழிற்சாலை. வடிவமைப்பு துவங்கி உற்பத்தி வரை அனைத்து பகுதிகளிலும் முழுமையான அனுபவம் கொண்ட அவர், மேற்கிந்திய பகுதிகளான மும்பை, பரோடா போன்ற பகுதிகளிலும் அமெரிக்க இ-வொர்க்ஷாப் நிறுவனத்தின் உற்பத்தியிலும் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில், உலோகம், ரப்பர், ப்ளாஸ்டிக் போன்றவற்றைக் கொண்டு தாங்களாகவே பாகங்களை உருவாக்க உதவும் வகையில் ‘கஸ்டம்ஸ் பார்ட்ஸ் ஆன்லைன்’முயற்சியைத் துவங்கினார். 2டி, 3டி வடிவமைப்பு, உற்பத்தி துவங்கப்படுவதற்கு முன்பு வரை முன் வடிவங்களை உருவாக்குதல் என இந்நிறுவனம் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது.

2009ம் ஆண்டு பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய ஃபீடிங் பாட்டில்களை அமெரிக்க க்ளையண்ட் ஒருவருக்காக உருவாக்கினார். இது ‘ஹெல்த்கேர் பிரிவில் ப்ளாஸ்டிக்ஸ்’  என்கிற தலைப்பின் கீழ் பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் அமைச்சகத்திடம் இருந்து தேசிய விருது பெற்றுத் தந்தது. மேலும், ஒரு தேசிய விருதுக்கான சொந்தகாரரான  சந்திரசேகரனின் சமீபத்திய முயற்சியே ரசாயனங்கள் மற்றும் மின்சார பயன்பாடு இல்லாத உலகின் விலை மலிவான தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம். 

ஆரம்பத்தில் 1.25 லட்சத்துடன் ஓராண்டு கடின உழைப்புடன் 2009-ம் ஆண்டு தனியுரிமை நிறுவனமாக துவங்கப்பட்ட ‘கஸ்டம் பார்ட்ஸ் ஆன்லைன்’ பின்னர் பெரியளவில் செயல்படவேண்டும் என்கிற தேவையை அறிந்து 2013-ம் ஆண்டு ’வாட்சன் என்விரோடெக்’ பிரைவேட் நிறுவனமாக மாறியது.

ஐஐடி மெட்ராஸால் இன்குபேட் செய்யப்பட்ட Inno Nano நிறுவனத்துடன் இணைந்து ஆர்சனிக் நீக்க அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தற்போதைய டெராஃபில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரந்தில் மதிப்பு கூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஃப்ளூரைட் நீக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

”அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பதே வாட்சன் என்விரோடெக் நிறுவனத்தின் கோட்பாடு. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் மலிவான விலையில் குடிநீரையும் சுகாதார தீர்வுகளையும் வழங்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்கிறார் சந்திரசேகரன். 

அடுத்த மூன்றாண்டுகளில் மின்சாரமில்லாத மலிவு விலை தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம், தயார்நிலையில் பொருத்தக்கூடிய கழிவறைகள் ஆகியவற்றை வழங்கி குறைந்தபட்சம் 100  மில்லியன் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் இலக்காகும். சுத்திகரிப்பிற்கும் நீர் சிகிச்சைக்கும் சிறந்த வழியை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது,” என்கிறார்  சந்திரசேகரன்.

IMMT மற்றும் CSIR-ஆல் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்ட முறையில் களிமண் மற்றும் மணலை வெப்பமூட்டி உருவாக்கப்படுவதுதான் CPO Natural Terafil TM Water Filter. இதை CIPET-ல் வடிவமைக்கப்பட்ட தண்ணீர் கண்டெயினரில் தனியாக பொருத்திக் கொள்ளலாம். கண்டெயினர்கள் தூய்மையாகவும், நச்சுதன்மை இன்றியும், உணவு பொருட்களுக்கு  உகந்ததாகவும் இருப்பதை CIPET உறுதி செய்கிறது. 

வணிக செயல்பாடுகள்  

வாட்சன் இந்தியாவில் 17 மாநிலங்களில் செயல்படுகிறது. 

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2800 அங்கன்வாடி மையங்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை வழங்கியுள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 2000 சாதனங்களை வழங்கியது.

ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணா கோதாவரி சுற்றுவட்டாரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கை வாயிலாக 800 அங்கன்வாடிகளுக்கு வழங்கி உள்ளனர். ஃப்ளூரைட் நீக்குவதற்கான சோதனை முயற்சி நல்கொண்டா மற்றும் பிற  இடங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் சித்தூர் அருகே ராமகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஜன்மபூமி திட்டத்தில்  பங்கேற்றனர். இதில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு இந்நிறுவனத்தின் முயற்சியை பாராட்டியுள்ளார்.

“17000 ஃபீட் என்கிற அரசு சாரா நிறுவனம் வாயிலாக நாங்கள் நான்கு 200 லிட்டர் சுத்திகரிப்பு சாதனங்களை கார்கில் பிஎஸ்எஃப்-க்கு வழங்கினோம். 2018-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டிசிபி வங்கியின் கார்ப்பரேட் சமுக பொறுப்பு நடவடிக்கை மூலம் மூன்று 200 லிட்டர் சுத்திகரிப்பு சாதனத்தை வாகா பார்டரில் உள்ள வீரர்களுக்கு வழங்கினோம்.” 

தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கும் பெரியளவிலான சுத்திகரிப்பு  சாதனங்களை எல் & டி, ஈசிசி, கார்கில் மற்றும் வாகா எல்லையில் உள்ள பள்ளிகள் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளோம், எனும் சந்திரசேகரின் பெயரில் மூன்று காப்புரிமைகள் உள்ளன. 

காப்புரிமை கிங்

ஒன்று நவீன கழிவறை வடிவமைப்பிற்கானது. இரண்டாவது ‘ஸ்பில் சிங்க்’ என்கிற காயம் ஏற்பட்டோருக்கான பராமரிப்பு வழங்கும் முயற்சிக்கானது. இது முன்னாள் ராணுவ ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜி.பி. ராஜன் அவர்களுடன் இணைந்து காப்புரிமை பெறப்பட்டதாகும். இந்த  தயாரிப்பு மெடிக்-ஆல் இன்னோவேஷன் அவார்ட்ஸ் 2013-ல் 162 விண்ணப்பங்களுக்கு மத்தியில் இறுதிபோட்டிக்கு தேர்வாகி உள்ளது. மூன்றாவது இவரது தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்துக்கான ஆர்சனிக் நீக்கும் கார்ட்ரிஜ்  வடிவமைப்பிற்காக பெற்றுள்ளார். 

ஹெல்த்கேர் தயாரிப்புகளுக்கான மேலும் மூன்று காப்புரிமைகளுக்கு  விண்ணப்பித்துள்ளார் சந்திரசேகரன். தற்போது ‘டாய்லட் ஃபார் ஆல்’ என்கிற திட்டத்திற்காக நிபுணர்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் www.toiletforall.org என்கிற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு மருத்துவ பிரச்சனைகளை போக்க மருத்துவ சாதனங்கள் மற்றும் வேரபில்ஸ் என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப  அணியக்கூடியவைகளை மலிவு விலையில் வழங்க  சமீபத்தில் க்யூர்ஆல் மெடிகேர் ஓபிசி பிரைவேட் லிமிடெட் என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

“எங்களது தயாரிப்புகளின் பயன்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளதால் முதலில் முழு நேர பிரதிநிதிகளை ஐந்து மாநிலங்களில் நியமிக்கத் துவங்கியுள்ளோம். பின்னர் 29 மாநிலங்களில் விரிவடைய உள்ளோம். மழை நீர் நேரடியாக சுத்திகரிக்கப்படலாம் என்பதால் கேரளாவிற்கு 115 சுத்திகரிப்பு சாதனங்களை அனுப்புகிறோம். அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், ஆகியவற்றுடன் இணைந்து 2020-ம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் வீடுகளைச் சென்றடைய திட்டமிட்டுள்ளோம்.”

சமூக தொழில்முனைவோராக வலம் வரும் சந்திரசேகரன் தன் தொடர் முயற்சிகளால் பல கண்டுபிடிப்புகளையும், மக்கள் மற்றும் சமூகத்துக்கு பயன்படும் சாதனங்களை தயாரித்து, அதை உரிய வழியில் செயல்படுத்தி வெற்றி கண்டும், அதோடு நின்று விடாமல் ஓயாமல் அடுத்தடுத்த பணிகளுக்கு ஆயத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

இணையதள முகவரி: Watsan Environtech

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan